முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழனுமா! இல்லை அடிபணிந்து போகனுமா? Oj


அன்றுதொட்டு இன்றுவரை முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் பல சவால்களை எதிர்கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
 அதே நேரம் இனவாதிகளின் சந்தேக பார்வையும் ஒருவகையான எரிச்சல் குணமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதில் நமக்குள் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

இனவாதிகள் பல பிரிவுகள் வெவ்வேறு பெயர் கொண்டு காலத்துக்கு காலம் உருவெடுத்தாலும் எல்லோருடைய இலக்கும் ஒன்றுதான்' முஸ்லிம்களை ஒடுக்க வேண்டும், அவர்களின் பொருளாதாரத்தை அழிக்க வேண்டும், அடிமைகளாக தலைகுனிந்து வாழவேண்டும் என்பதேயாகும்.

இனவாதிகள் என்று சொல்லப்படுகின்ற குறுகிய சிந்தனையுடைவர்கள் ஒருநாளும் பிறந்து வருவதில்லை! மாறாக குறுகிய எண்ணம் கொண்ட ஆதாயம் தேடும் ஒருசில புல்லருவிகலால் நன்கு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறார்கள் என்பதே உண்மையாகும்.

அவர்கள் ஆளுகின்ற தரப்பு அரசியல்வாதியாகவும் இருக்கலாம், எதிர்தரப்பு அரசியல்வாதியாகவும் இருக்கலாம், பணம் சம்பாதிக்க நினைக்கும் முதலைகளின் வேலையாகவும் இருக்கலாம், தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டு சக்திகளின் சதி வேலையாகவும் இருக்கலாம்.  சந்தர்ப்பத்தைப் பொறுத்தே இவர்களின் செயற்பாடுகள் அரங்கேறுகிறது!

ஆனால் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய தகுதியும், உரிய  நடவடிக்கை எடுக்க கூடிய பொறுப்பும் நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் அரசுக்கே உண்டு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எவருக்கும் இருக்காது.  ஆனால் இதை அரசு செய்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றே பதில் கிடைக்கும்.

அரசின் இந்த அசமந்த போக்குக்கு நமது அரசியல்வாதிகள் ஏற்படுத்திய தூரநோக்கற்ற குறுகிய சந்தர்ப்ப அரசியலும், ஒற்றுமையில்லா பயணமே காரணமாகும்!

எமது அரசியல்வாதிகளிடம் ஒற்றுமையுடன் செயற்பட்டு சமூகத்துக்கு தீர்வைக் பெற்றுக்கொடுக்கும் எண்ணம் ஒரு கடுகளவும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.  அனைத்து வீராப்பும் வாய்ப்பேச்சில் மட்டுமே இருக்கிறதே தவிர செயலளவில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

அவ்வாறு இவர்களிடம் ஒற்றுமை என்றதொன்று இருந்திருந்தால்' இந்தளவுக்கு இனவாதிகள் காலத்துக்கு காலம் துள்ளிக் குதிக்கவும் மாட்டார்கள்! அரசாங்கமும் கண்துடைப்பு செய்ய முயற்சிக்கவும் மாட்டாது.

நமது சமூகத்தின் மீது நடக்கும் பொருளாதாரத்தை இலக்கு வைத்த ஒரு வகையான இன ஒடுக்குமுறை பிரச்சினை' சகோதர இனத்தவர்களான தழில் சமூகத்துக்கு வந்திருக்குமாக இருந்தால்! இந்நேரம் அரசாங்கம் ஏதோ ஒரு வகையில் பிரச்சினையை தடுத்து உடனே சட்டத்தையும் நிலை நாட்டியிருக்கும் என்பதுதான் உண்மை.   இது அவர்கள் மீது கொண்ட பாசத்தினால் அல்ல"   மாறாக தமிழர்களின் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் சம்மந்தப்பட்ட பிரதிநிதிகள் தமது சமூகம் பாதுகாப்போடு தலை நிமிர்ந்து வாழவேண்டும் என்ற உறுதியோடும் ஒற்றுமையோடும் பயணிப்பதனால்தான்.

அவ்வாறு தகுந்த நடவடிக்கைகள் அரசு எடுக்காவிடின் சர்வதேசத்திலும் சரி, உள்நாட்டிலும் சரி அரசுக்கு பாரிய சிக்கல் ஏற்பட்டு விடும் என்ற அச்சம் அரசுக்கும் உண்டு!  அதனால்தான் அவர்களின் விடயத்தில் சாதகமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆனால் நமது அரசியல்வாதிகளிடத்தில் அரசுக்கு எந்த அச்சமுமில்லை' மாறாக ஏதாவது ஒன்றை கொடுத்து சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையே அவர்களிடத்தில் இருக்கு!
ஏனென்றால் நம்மவர்கள் மதுவுக்கும், மாதுவுக்கும், பணத்துக்கும், பதவிக்கும் தலை சாய்ப்பவர்கள் என்பது அவர்கள் அறியாமலில்லை. அதனால் ஏதாவது ஒன்றைக் கொடுத்து வாய்க்கு பூட்டு போடப்பட்டு' விரும்பியதுபோல் தலையாட்டையும் வைக்கிறார்கள்.

அன்று இருந்தார்கள் சமூகத்துக்காக எவ்விடத்திலும் தைரியத்துடன் குரல் கொடுத்தவர்கள் அஷ்ரப், டிபி ஜாயா, சேர் ராஷீக் பரீட் இன்னும் எத்தனையோ பேர் அவர்கள் என்றும் நினைவு கூறப்பட வேண்டியவர்களே. ஆனால் இன்று அவ்வாறு சொல்லும் அளவுக்கு எவருடைய செயற்பாடும் இல்லை. 

அப்படியென்றால் நாம் குற்றம் சொல்ல வேண்டியவர்கள்,  நாம் விரல் நீட்டி கேள்வி கேட்க வேண்டியவர்கள் அரசாங்கமா?   அல்லது  நமது அரசியல்வாதிகளா? என்பதை நாமே சிந்தித்து செயற்படுவது காலத்தின் தேவையாகும்.

ஒரு விடயத்தை மட்டும் இங்கு சுட்டிக் காட்டலாம் என்று நினைக்கிறேன்!அண்மையில் நடந்த அம்பாரை சம்பவம் என்றாலும் சரி,  கண்டி சம்பவம் என்றாலும் சரியே"  நமது அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட இடத்துக்கு உடனே சென்று பார்வையிட்டார்கள், அறிக்கை விட்டார்கள், கண்ணீர் வடித்தார்கள் தன்னால் முடிந்தவரை அவருக்கும் இவருக்குமாக தொலைபேசியில் பேசி பாதுகாப்பை உறுதிப்படுத்த கூறினார்கள்! கடைசியில் புகைப்படமும் எடுத்துக் கொண்டு ஆதரவாளர்களை உசுப்பேத்தி விட்டு சென்று விட்டார்கள்!

ஆனால் அங்கு வந்த அமைச்சர் றிசாத் என்றாலும் சரி ,அமைச்சர் ஹக்கிம் என்றாலும் சரியே இவ்விருவரையும் ஒற்றுமையாக ஒரே இடத்தில் பார்க்க முடிந்ததா என்று பார்த்தால் அதுதான் நடக்கவே இல்லை.
காரணம் இவர்களுக்குள் இருக்கும் வறட்டு கெளவரமே இந்த நிலைக்கு ஆக்கியது எனலாம்.!
முழு சமூகமுமே அச்சத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பதறிப்போய் இருக்கும் நேரத்திலாவது இவர்களின் வறட்டு கெளரவத்தை தூக்கி வீசிவிட்டு சமூகத்தின் இருப்புக்காக ஒருமித்து குரல் கொடுக்கவில்லை என்றிருந்தால்!  சமூகமே அழிந்த பிறகு யாருக்காக' எங்கே போய் குரல் கொடுக்க போகிறார்கள்? இதுதானா இவர்களின் சமூகபற்று?  இதற்குத்தானா இவர்களுக்கு மக்கள் அதிகாரத்தை கொடுத்து கதிரையில் அமர்த்தியது?
தேர்தல் காலங்களில் மட்டும் மேடைக்கு மேடை சமூகபற்றைப் பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள்!  சமூகத்துக்கு ஏதும் சவால்கள் வந்துவிட்டால் அக்கரையிலும் இக்கரையிலும் நின்று கொண்டு அறிக்கை வீரர்களாக வலம் வருகிறார்கள்!

அம்பாரையில் நடந்த இனவாதிகளின் கொடுர செயலை பார்வை இடுவதற்கு வந்த பிரதமர் அம்பாரைக்கு போகாமல் ஒலுவிலுக்கு வந்து அறிக்கைகளையும், உத்தவாதமும் கொடுத்துவிட்டுச் சென்றார்!  (இது தலையில் ஏற்பட்ட காயத்துக்கு காலுக்கு மருந்து கட்டியதைப் போன்றாகும்)
பிரதமரின் இந்த உத்தரவாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை கிடைத்த நன்மைகள் என்ன என்பதை நாமும் அறியாமலில்லை.

ஆனால் அன்று அமைச்சர் ஹக்கிமுடன் சேர்ந்து அமைச்சர் றிசாத்தும் வந்திருந்தால்' அல்லது இவ்விரண்டு பேரும் சேர்ந்து பிரதமருக்கு அழுத்தத்தை கொடுத்திருந்தால் நிச்சயம் பிரதமர் அவ்விடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட சொத்துக்களை தனது கண்ணால் பார்த்திருக்க முடியும்! 
அனால் அதையும் தமது சமூகத்துக்காக செய்வதற்கு இவர்களுக்குள் இருக்கும் ஈகோ இடம்கொடுக்க வில்லை.


அதோபோன்றுதான் கண்டியில் நடந்தேரிய மிருகத்தனமான செயலை நேரில் சென்று பார்வையிடுவதற்கு முஸ்லிம்கள் கொண்டு வந்த நல்லாட்சியின் ஜனாதிபதிக்கு முடியாமல் போனதுக்கு காரணமும் இவர்கள்தான் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

றிசாத்தும், ஹக்கிமும் சேர்ந்து ஜனாதிபதிக்கு அழுத்தத்தை கொடுத்திருந்தால் நிச்சயம் ஜனாதிபதி அவ்விடத்துக்கு செல்லுவது மட்டுமல்லாது"  பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உரிய தீர்வை விரைவாக பெற்றுக் கொடுக்கவும் இலகுவாக அமைந்திருக்கும் அல்லவா?

ஆனால் இவர்கள் எதையுமே ஒற்றுமையாக தமது சமூகத்துக்காக முன்னொடுக்க வில்லை'  எடுத்த அனைத்து விடயமும் தனது அரசியலை முன்நிறுத்தியும், கட்சியை வளர்ப்பதற்கும்தான் என்று நினைக்கும் போதுதான் வேதனையே விடையாகிறது.

எம்மிடம் அதிகாரம் இல்லாமல் இல்லை' ஆனால் அதை சமூகத்துக்காக உரிய இடத்தில் பேசி உரிமையை பெறுவதற்கான ஒற்றுமை எனும் சக்தி எம்மவர்களிடம் இல்லை!   அதன் விளைவாகவே நமது சமூகம் அரசியலில் பல உரிமைகளை இழந்து அநாதையாக்கப்பட்டது மட்டுமல்ல இன்னும் இந்த அவல நிலமை தொடர்ந்து கொண்டும் இருக்கிறது எனலாம்!
இப்படியே இந்த நிலமை தொடருமாக இருந்தால் சமூகத்தின் இருப்பும், வருங்கால  சந்ததினர்களின் பாதுகாப்பும் கேள்வியாக அமைவதுடன்" இனவாதிகளின் செயற்பாடுகள் இன்னுமின்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆகவே இன்றைய முஸ்லிம் கட்சிகள் குறிப்பாக றிசாத், ஹக்கிம் போன்ற தலைமைகள் கட்சி அரசியலுக்கு அப்பால் ஒன்றுபட்டு சமூம்சார்ந்த சிந்தனையுடன் செயற்பட்டு" ஒரு தீர்க்கமான முடிவை உடன் எடுத்து' ஆகக் குறைந்தது சமூகத்துக்கு பிரச்சினை வரும்போது,  சமூகத்தின் உரிமைகள் மறுக்கப்படும்போது ஒன்று சேர்ந்து உறுதியும் அறுதியுமாக அரசுக்கு அழுத்தத்தை கொடுத்து" 
எதிர்காலத்திலாவது எமது சமூகம் தலைநிமிர்ந்து நின்மதியாய் வாழ  வழி வகுக்க வேண்டும்.

இதை வெறும்மென நானோ நீங்களோ சொன்னால் மட்டும் இவர்கள் ஒன்றுசேர போவதுமில்லை, உரிமையை பெற்றுக் கொடுக்க போவதுமில்லை.
இதற்காக சமூகத்திலுள்ள புத்திஜீவிகள்,  அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, சமூக அமைப்புக்கள், உலமாக்கள், சமூகசார் இளைஞர்கள் எல்லோரும் ஒருமித்த கருத்துடன் இவர்களுக்கு பாரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.  அவ்வாறு கொடுப்பதன் மூலமே இப்படியான சந்தர்ப்ப அரசியல் செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் எண்ணத்தில்  மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

ஒலுவில் ஜெலில்
முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழனுமா! இல்லை அடிபணிந்து போகனுமா? Oj முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழனுமா! இல்லை அடிபணிந்து போகனுமா? Oj Reviewed by nafees on 02:02 Rating: 5

No comments:

Powered by Blogger.