சிரியா மீதான அமெரிக்க தாக்குதல் - நடந்தது என்ன?

இது ஒரு நாள் மட்டுமே நடத்தப் பட்ட தாக்குதல். அமெரிக்காவுடன், பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் சேர்ந்த கூட்டு இராணுவ நடவடிக்கையாக இடம்பெற்றது.
மூன்று கட்டமாக முப்பது ஏவுகணைகள் ஏவப் பட்டதாகவும், அவற்றில் பலதை சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் சிரிய அரசு தெரிவிக்கிறது.
தாக்குதல் பற்றி ரஷ்யாவுக்கு அறிவிக்கப் படா விட்டாலும், நிச்சயமாக வார இறுதிக்குள் நடக்கும் என்பது பல உலக நாடுகளின் தலைவர்களுக்கு தெரிந்திருந்தது.
சிரியாவில் உள்ள பிரதானமான இராணுவ தளங்களில் இருந்த ஆயுத தளபாடங்கள் அவசர அவசரமாக அப்புறப் படுத்தப் பட்டன. விமான நிலையங்களும் வெறுமையாக்கப் பட்டன.
ஏற்கனவே விமானங்களும், ஆயுதங்களும் அகற்றப் பட்டு விட்டதால், ஏவுகணை விழுந்து வெடித்த நேரம் பெருமளவு கட்டிடங்களே சேதமடைந்தன. சரியான உயிரிழப்புகளின் எண்ணிக்கை தெரியவில்லை. குடிசன நெருக்கமான பகுதிகள் தாக்கப் படவில்லை எனத் தெரிகிறது.
தாக்குதல் தொடங்குவதற்கு முன்னர் நடந்த ராஜதந்திர நடவடிக்கைகள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆயினும், அது மீண்டும் தொடர வாய்ப்புண்டு.
டூமா என்ற இடத்தில் நடந்ததாகக் கருதப் படும் இரசாயன தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்கு சென்ற நிபுணர்கள் குழு வெள்ளிக்கிழமை சிரியாவில் வந்து சேர்ந்து விட்டது. அவர்கள் இன்று தமது பரிசோதனைகளை நடத்தலாம். (கவனிக்கவும்: இரசாயன தாக்குதல் இன்னும் நிரூபிக்கப் படவில்லை.)
இரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக, அல்லது தண்டனையாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறுகின்றது. ரஷ்யா அதை மறுக்கிறது. அதை அடுத்து, ஐ.நா. பாதுகாப்பு சபையை கூட்டி இறைமையுள்ள நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை கண்டிக்க வேண்டுமென்று ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது.
Kalaiyarasan-
சிரியா மீதான அமெரிக்க தாக்குதல் - நடந்தது என்ன?
Reviewed by nafees
on
08:51
Rating:
No comments: