சவால்களுக்கு மத்தியில் அர்துகானின் சாதனைகள் !!!


எஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி)
BA.Hons (special in political science)



துருக்கியை ஆளும் ஜனாதிபதி அர்துகான் தலைமயிலான ஏ.கே.பி அரசாங்கம் கடந்த 2002 ஆம் ஆண்டு தொடக்கம் அதிகாரத்தில் இருந்து வருகின்றது . மாறிமாறி வரும் தேர்தல்களில் அனைத்திலும் துருக்கியின் அதிகாரத்தை தொடர்ந்தும் கைபற்றிவரும் ஏ.கே.பி (The Justice and Development Party) கட்சி இஸ்லாமிய அரசியல் பின்புலத்தை கொண்டுள்ளமை அதை எதிர்பவர்களாலும் , ஆதரிப்பவர்களாலும் விசேட கவனத்துடன் அவதானிக்கப்பட முக்கிய காரணமாக உள்ளது, இந்த நூற்றாண்டில் முஸ்லிம் உம்மா எதிர்கொள்ளும் பல்வேறு தோல்விகள் மத்தியிலும் ஒரு மின்னும் வெற்றி நட்சத்திரமாக துருக்கி முஸ்லிம்களால் பார்க்கப்படுவதுடன் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்டநாடாக அனைவராலும் கணிக்கப்படுவது உலகில் இதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.


ஐரோப்பா யூனியலில் உறுப்புரிமை வேண்டி விண்ணப்பித்த துருக்கி இப்போது முஸ்லிம்களால் தம் மீது கரிசனை கொண்ட நாடாக பார்க்கப்படுகின்றது அது ஆசியா , ஆப்பிரிக்கா , ஐரோப்பா என எல்லா பிராந்திய முஸ்லிம் களின் பிரச்சினையிலும் பிராந்திய அரசியல் நலனுக்கு அப்பால் சென்று உதவுவது இதன் முக்கியத்துவத்தை முஸ்லிம்கள் மத்தியில் மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

சோமாலியாவின் பட்டினியால் மரணத்தை எதிர்கொள்ளும் மக்களை காத்ததிலும், ரொஹிஞ்ஜியா அகதிகளுக்கு உதவுவதிலும் ,சிரியாவின் விவகாரத்தில் முனைப்புடன் செயல்படுவதிலும் ,பலஸ்தீன விடுதலைக்கு பங்காற்றுவதிலும் இதன் ஈடுபாடு முஸ்லிம் உம்மாவின் நம்மிக்கையை பெறவும், 1924 ஆம் ஆண்டில் இஸ்தன்பூளில் அழிக்கப்பட்ட உஸ்மானிய கிலாபத்தின் உலகளாவிய அரசியல் தலைமைத்துவத்தை மீண்டும் முஸ்லிம் உம்மாவின் கண்களின் முன் கொண்டுவரவும் இச் செயல்பாடுகள் காரணமாக மாறியுள்ளன.

பெரும் பொருளாதார நெருக்கடிகளையும், அரசியலில் இராணுவதலையீட்டையும் எதிர்கொண்டு வந்த துருக்கியை அவற்றில் இருந்து கட்டம் கட்டமாக விடுவித்து சுமார் கடந்த 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜனாதிபதி அர்துகான் அரசாங்கம் பல்வேறு அடைவுகளையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளது , கமாலிஸம் ,இராணுவ சர்வாதிகாரம், செக்குலரிஸம் , புளுரலிஸம் என்பன துருக்கியில் இஸ்லாம் மீட்டும் அதிகாரத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில் அர்துகான் அவற்றையே பயன்படுத்தி இஸ்லாத்துக்கு துருக்கியில் போடப்பட்டு இருந்த விலங்கை உடைத்து வருகின்றார் என கூறத்தோன்றுகின்றது. .

ஏ.கே.பி அரசாங்கம் முஸ்லிம் உம்மாவின் நம்பிக்கையை பெரும் வெற்றிப்பாதையில் மெதுவாக ஆனாலும் உறுதியாக நகர்து வருகின்றது , துருக்கியில் ஆங்காரா , இஸ்தன்பூல் மற்றும் அனட்டோலியாவுக்கும் இடையில் 1923 ஆம் ஆண்டுதொடக்கம் இருந்துவந்த அரசியல் இடைவெளிக்கு இடையில் பாலம் கட்டி துருக்கியின் பொருளாதராத்தை உயர்த்தியவர்கள் என சிலர் இந்த அரசாங்கத்தை பற்றி கூறுகின்றனர் .

1924 ஆம் ஆண்டு உஸ்மானிய கிலாபத் மேற்கின் முயற்சியால் முஸ்தபா கமால் அதாத்துர்க்கின் துணையுடன் அகற்றப்பட்டபின்னர் வந்த சிவில் மற்றும் இராணுவ ஆட்சியாளர்கள் கமாலிச அரசியல் பொருளாதார முறையின் கீழ் துருக்கியை இருப்பு பிடியில் வைத்திருந்தார்கள் ,

2002 ஆண்டு அதிகாரத்துக்கு வந்த இஸ்லாமிய புன்புலம் கொண்ட ஏ.கே.பி அரசாங்கத்துக்கு முதல் பெரும் சவாலாக இருந்தது துருக்கியின் பொருளாதரமும் , துருக்கி அரசியலில் இராணுவத்தின் எல்லைகடந்த அதிகாரமுமாகும் , கட்டம் கட்டமாக துருக்கியை பொருளாதரான நெருக்கடியில் இருந்து மீட்டு அபிவிருத்தி நோக்கி நகர்த்திய அர்துகான் இராணுவத்தின் அதிகாரத்தையும் பல்வேறு நகர்வுகள் ஊடக கட்டுப்படுத்தியதுடன் முஸ்தபா கமாலின் மதச்சார்பின்மை கொள்கையை பாதுகாக்க இராணுவத்துக்கு இருந்த அதிகாரத்தையும் கட்டுப்படுத்தியுள்ளார்.

இந்த காலப் பகுதியில் ஏ.கே பி ஆட்சியின் மற்றுமொரு சாதனையாக இறுக்கமான கமாலிஸ மதசார்பின்மையில் இருந்து துருக்கி மக்களை மத சுதந்திரம் நோக்கி நகர்த்தியது ஒரு முக்கிய நகர்வாக உள்ளது. பொதுவாழ்வில் இருந்து புறக்கணிக்கப்பட்டு இருந்த இஸ்லாமிய விழிமியங்கள் இந்த அரசாங்கத்தால் பொது வாழ்வுக்கு கொண்டுவரப்பட்டது , இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால் கமாலிஷ மதசார்பின்மையின் கீழ் மக்கள் அனுபவித்த அடக்கு முறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு மக்கள் பொதுவாழ்வில் இஸ்லாத்தை கைடைபிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட இஸ்லாமிய பிரதமர் நஜுமுதீன் அர்பகானின் கட்சியில் இருந்து வெளியேறிய இஸ்லாமிய கல்வி பின்புலம் கொண்ட அர்துகான் புதிய கட்சியை அமைத்து தேர்தலில் களமிறங்கியபோதும் , அதிகாரத்துக்கு வந்தபோதும் அரசியல்வேறு , மார்க்கம் வேறு, தான் மார்க்க அடிப்படையிலான கட்சியை பிரதிநித்துவப்படுத்தவில்லை , மேற்கு மாதிரியிலான ஜனநாயக ஆட்சியைத்தான் உருவாக்கப்போவதாகவும் கூறியிருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி அர்துகானை தலைவராக கொண்ட துருக்கியின் ஆளும் ஏ.கே கட்சி நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பை வரைவதில் ஈடுபட்டிருந்தபோது , 1923 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறையில் உள்ள கமாலிஷ சிந்தனையின் ஆறு முக்கிய சிந்தனைகளில் ஒன்றான மதசார்பின்மையை ஆதரிப்பவர்களுக்கும், ஏ.கே கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் , இஸ்லாமியவாதிகளுக்கும் இடையில் விவாதத்தை ஏற்படுத்தியது . துருக்கி பாராளுமன்ற சபாநாயகரும் , துருக்கியில் ஆளும் ஏ.கே கட்சியின் முக்கியஸ்தருமான இஸ்மாயில் கஹ்ரமான், உருவாக்கப்படும் புதிய அரசியல் யாப்பு வரைபில் செக்குலரிஷம் (மதசார்பின்மை) நீக்கப்படல் வேண்டும், மத அரசியல் யாப்பு உருவாக்கப்படல் வேண்டும் என தெரிவித்ததுடன் மேலும் பல எதிரும் புதிருமான விவாதம் உருவாக்கியபோது துருக்கிய ஜனாதிபதி அர்துகான், இது பற்றி கூறும்போது “இது பற்றிய எனது பார்வைகள் அறியப்பட்பட்டவை ….யதார்த்தம் என்னவென்றால் அரசு அனைத்து மத நம்பிக்கைகளிடம் இருந்து ஒரு சம தூரத்தில் இருத்தல் வேண்டும் … இதுதான் மதசார்பின்மை என ” குறிப்பிட்டார் இது அர்துகான் மீது பல்வேறு விதமான விமர்சங்களை ஏற்படுத்தியது ஆனால் அவரின் செயல்பாடுகளை அவதானிக்கும்போது அவர் ” அரசியல் என்பது சாத்தியபாடுகளின் கலை ” என்ற தத்துவத்தின் கீழ் பிரச்சினைகளையும் இலக்கையும் அணுக முட்படுவதாக தோன்றுகின்றது இப்போது எதை செயற்படுத்துவது சாத்தியமோ அதை மட்டும் செயல்படுத்துவதே பாதுகாப்பானது என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுபவராகவே காட்சி தருகிறார். மேற்கின் தொடரான சதி, இராணுவப் புரட்சி , மதச்சார்பற்றவர்கள் , லிபரலிஷ்ட்களின் அரசியல் எதிர்ப்பு , துரோகம், பயங்கரவாதம் என்ற ஆபத்துக்கள் மத்தியில் வெற்றிகரமாக உடனடியாக சாத்தியமானவற்றை சாதிப்பவராக தோன்றுகிறார் .

அண்மைக் காலமாக அர்துகான் மேற்கொண்டுவரும் அரசியல் நடவடிக்கைகள் அதை உறுதிப்பதுவதாக உள்ளது.

கடந்த காலங்களில் இஸ்லாமிய விவகார திணைக்களத்தின் கீழ் வேலைசெய்பவர்களின் எண்ணிக்கை சில நூறுகளாக இருந்தபோது , இந்த அரசாங்கத்தின் கீழ் அவர்களின் எண்ணிக்கை 120,000 நிரந்தர ஊழியர்களை கொண்டும் 30,000 ஏனைய ஊழியர்களை கொண்டும் அதன் செயல்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ,இத்திணைக்களம் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 18.2 வீத பட்சட் அதிகரிப்பையும் பெற்றுள்ளது, இது 13 தனியான அமைச்சுக்கள் பெரும் தொகையையும் விடவும் அதிகமானதாகும் இது அல்லாமல் ஏ.கே.பி கட்சியானது முஸ்லிம் நலன் சார் பல்வேறு அமைப்புக்களை உருவாகியுள்ளது உதாரணமாக யூரேசியா இஸ்லாமிய கவுன்சில் ( the Eurasia Islamic Council), ஆப்பிரிக்க இஸ்லாமிய தலைவர்கள் உச்சி மாநாடு (the Summit of African Islamic Leaders), ஐரோப்பிய முஸ்லிம்களின் கூட்டம் ( the Meeting of European Muslims), பால்கன் மத விவகாரங்கள் ‘இயக்குனர்கள் மற்றும் அமைதிக்கான உலக முஸ்லீம் அறிஞர்கள் துவக்க மாநாடு( the Convention of the Balkan Religious Affairs’ Directors and the World Muslim Scholars Initiative for Peace) என்பன அவற்றில் சிலவாகும். .

துருக்கி ஜனாதிபதி அர்துகான் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்தான்பூளில் தான் கல்விகற்ற இஸ்லாமிய பாடசாலைக்கு (மதரஸா -İmam Hatip schools ) சென்று 2017-2018 கல்வியாண்டை துடக்கிவைத்து உரையாற்றிய போது

” எங்கள் கல்வி மற்றும் போதனா முறையின் கூட்டு இலக்கு, தங்கள் வரலாறு, கலாச்சாரத்தை மற்றும் பெருமானங்களுக்கு மதிப்பளிக்கும் மரியாதை கொண்ட நல்ல மக்களை உருவாக்குவதாகும் “, என்றார்

அங்கு மேலும் உரையாற்றிய அவர் எனது இலக்குகளில் ஒன்று புதிய ஒரு நாகரீகத்தை நிர்மாணிக்கும் வேலையைச் செய்யும் “தக்வா கொண்ட தலைமுறையை” உருவாக்குவதாகும் என்று கூறிய அவர் உஸ்மானிய கிலாபத்தின் சாதனைகளையும் , இன்றைய துருக்கி அடைந்து வரும் வெற்றிகளையும் பொதுவில் விளக்கி இருந்தார்

İmam Hatip schools என்பது இஸ்லாமிய பாடத்திட்டத்தின் கீழ் இயக்கப்படும் ஆரம்ப ,நடுத்தர ,உயர்தர இஸ்லாமிய பாடசாலை கல்வி முறையாகும் அர்துகான் அரசாங்கத்தின் கீழ் இந்த பாடசாலை முறை பெரும் எழுச்சி பெற்றுவருகின்றது , இதன் எண்ணிக்கை சில நூறுகளாக இருந்தபோதும் அர்துகானின் ஆட்சியின் கீழ் இதன் எண்ணிக்கை 4500 ரையும் தாண்டியுள்ளது அவற்றில் சுமார் 1.3 மில்லியன் மாணவர்கள் கல்வி கற்றுள்ளார்கள்

அர்துகான் அரசாங்கம் இவற்றின் பராமரிப்புக்கு இந்த ஆண்டில் (2018) 6.57 பில்லியன் துருக்கி லிரா ($1.68 billion) பணத்தை ஒதுக்கியுள்ளதுடன் புதிதாக இந்த ஆண்டில் உயர் தர ”இமாம் காதிப்” பாடசாலைகளை நிர்மாணிக்க மேலும் நிதிஒதுக்கியுள்ளதுடன் மேலும் 50 இதுபோன்ற உயர் தர ”இமாம் காதிப்” பாடசாலைகளை நிர்மாணிக்கவும் திட்டமிட்டுள்ளது.

அர்துகானை தலைவராக கொண்ட ஏ.கே.பி (The Justice and Development Party) கட்சியின் ஆட்சியின் கீழ் இந்த ஆண்டு புதிய கல்வி பாடத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இஸ்லாத்துடன் முரண்படும் கொள்கைகள் நீக்கப்படுகின்றது உதாரணமாக டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு மற்றும் முஸ்தபா கமலுக்கு பாடசாலை பாடத்திட்டங்களில் வழங்கப்பட்டுள்ள கூடிய முக்கியத்துவம் என்பன நீக்கப்பட்டுள்ளதுடன் இஸ்லாத்தின் பெருமானங்களுக்கு அதிகூடிய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது இதேவேளை தூக்கியின் அனைத்து பாடசாலைகளிலும் தொழுகை அறைகள் ஏட்படுத்தப்பட்டுள்ளது.

இது பற்றி கருத்துரைத்துள்ள செக்குலரிஸட்கள் புதிய பாடத்திட்டத்தில் “பரிணாம வளர்ச்சி கோட்டபாட்டை நீக்கியுள்ளமை மற்றும் , எல்லா பாடசாலைகளிலும் ஒரு தொழுகை அறை வேண்டும் என்ற புதிய கொள்கையும் துருக்கியின் மதச்சார்பின்மை மற்றும் கல்வியின் அறிவியல் கோட்பாடு விழிமியங்களை அழிக்கும் நடவடிக்கையாகும் என தெரிவித்துள்ளனர் .

தாராளவாத துருக்கியர்கள் அர்துகானின் நடவடிக்கைகள் பற்றி கூறும்போது அர்துகானின் நடவடிக்கைகள் நவீன துருக்கியின் நிறுவனர் முஸ்தபா கமாலின் சிந்தனை சார் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்ததாக உள்ளது என்றும் , கல்வி மத போதனைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற நவீன சிந்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்ததாக குற்றம்சாட்டுகின்றனர்.

ஆக துருக்கி ஜனாதிபதி அர்துகானின் அரசியல் நகர்வுகள் அரசியல் என்பது சாத்தியப்பாடுகளின் கலை என்பதை தத்துவமாக கொண்டு இப்போது எது முடியுமோ அதை மட்டும் செய்வதுதான் பாதுகாப்பானது என்ற புரிதலில் உள்ளார் என்றே கூறவேண்டும் , எது எப்படி இருப்பினும் இஸ்லாம் என்பது பூரமானது, அதை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதுதான் இஸ்லாமிய புன்புலம் கொண்ட அரசியல்வாதிகளின் கனவாக இருக்க முடியும் .


எஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி)-BA.Hons (special in political science) எழுதப்பட்டு எங்கள் தேசம் பத்திரிகையில் வெளிவந்த ஆக்கம் 
சவால்களுக்கு மத்தியில் அர்துகானின் சாதனைகள் !!! சவால்களுக்கு மத்தியில் அர்துகானின் சாதனைகள் !!! Reviewed by nafees on 18:25 Rating: 5

No comments:

Powered by Blogger.