கமந்தி விக்ரமசிங்கவின் இனவாதம் : துலங்கல்கள் கட்டுரை தமிழில்.


ஆங்கிலத்தில்: காமந்தி விக்கிரமசிங்க (டெய்லிமிரர்)
தமிழில்: ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம் 

வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது எவ்வளவு கொடூரமோ அதே போலவே அண்மைய இனவாத நடவடிக்கைகளும் எதிர்பார்த்திராத அளவுக்கு எல்லை மீறிச் சென்றுவிட்டன.


 குறித்த இனவாத வன்முறைகளுக்கு பலதரப்பட்டதும் பன்முக நோக்கங்களைக் கொண்டதுமான காரணிகள் தூபமிட்டுள்ளன என அறிந்து கொள்கின்ற அதேவேளை, இலங்கை நாடானது பல்லின மக்கள் செறிந்து வாழும் ஒரு தேசம் என்பதை நாம் மறந்துவிடலாகாது.


மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டை சிதைத்துக் கொண்டிருந்த இன முறுகலின் கொடூர விளைவுகளை கண்கூடாகக் கண்ட நாம் இனி ஒருபோதும் அவ்வாறான கசப்பான அனுபவங்களை எமது நாட்டில் ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் ஒவ்வொரு பிரஜையும் கரிசனையுடன் செயற்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.  


அண்மையில் கண்டியில் இடம்பெற்ற இனவாத நடவடிக்கைகள் போன்ற வன்முறைகளின்போது நாடும் நாட்டு மக்களும் எவ்வாறான துலங்கல்களை வெளிக்காட்ட வேண்டும் என்பது பற்றி பல்வேறு துறைசார் நிபுணர்களிடம் நாம் கலந்துரையாடியபோது அவர்கள் தெரிவித்திருந்த கருத்துக்களை தொகுத்து தருகின்றோம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் இதுபற்றிக் குறிப்பிடுகையில், “எமது நாட்டில் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தம்மிடையே வரலாறு நெடுகிலும் நீண்ட நெடுங்கால நல்லுறவை பேணிவந்துள்ளனர். தற்போதும் பேணி வருகின்றனர். சிறுசிறு அற்பமான விடயங்களுக்காக எமது நட்புறவும் ஐக்கியமும் பிளவுபட்டு குரோதமாக மாறிவிடக் கூடாது. குறிப்பாக மகாசங்கத்தினர் இத்தருணத்தில் காத்திரமாக செயற்பட்டு, நிலைமைகளை நாட்டு மக்களுக்கு விளக்கி நல்லுறவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். அனைத்து மக்களும் ஒன்றிணைந்து இனங்களுக்கு இடையே சுமுகமான நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டிய மிக முக்கிய தருணம் இதுவாகும். மாறாக, வேற்றுமைகளை, விரிசல்களை மேலும் தொடர வழிசமைக்கும் நிகழ்வாக இதனை மாற்றியமைத்து விடக் கூடாது. முற்காலத்தில் முஸ்லிம்களான எமது முன்னோர்கள் சிங்கள மக்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். நாட்டின் இறைமையை நிலைநாட்டுவதிலும் முஸ்லிம்கள் எப்போதும் காத்திரமாகவே செயற்பட்டு வருகின்றனர்.


சில தவறுகள் நிகழ்ந்திருக்கக் கூடும். எனினும், அவை பேச்சுவார்த்தைகள், சமரச இணக்கப்பாடுகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.  இவ்வாறான அசம்பாவிதங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும் படுகுழியில் தள்ளக்கூடியனவாக அமைந்து போகின்றன என்பதையும் கருத்திற்கொள்ள வேண்டும். அத்துடன் நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் முன்னேற்றப் பாதைகளிலும் பாரிய சறுக்கல்களை இவை உண்டுபண்ணக் கூடும்.


சச்சரவுகள் ஏற்படுமிடத்து வெறுமனே சொத்துக்களை தீக்கிரையாக்குதலை விடுத்து சமரச பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகளை உருவாக்கிக் கொள்ள முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட ஊடகவியலாளரான விக்டர் ஐவன் குறிப்பிடுகையில், “அண்மைய இனவாத நடவடிக்கைகளின் கோரத் தாண்டவத்தை பார்க்கையில் 1983 கலவரங்கள் கூட இதனை விட பாதிப்புக் குறைந்ததாகவே தோற்றுகிறது. சிங்கள அடிப்படைவாதிகள் எப்போதும் ஒரு பொது எதிரியை உருவாக்கிக் கொள்ளவே முனைகின்றனர்.


விடுதலைப் புலிகளை பொது எதிரியாக கருதி வந்த சிங்கள அடிப்படைவாதிகள் தற்போது முஸ்லிம்களை தமது பிரதான பொது எதிரியாக கருதிக் கொண்டுள்ளனர். முஸ்லிம் சமூகம் வளர்ந்து வருகின்றது என்பதும், எதிர்காலங்களில் பெரும்பான்மையாக மாறக் கூடும் என்பதும் நிதர்சன உண்மையாகும். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள அடிப்படைவாதிகள் சிங்கள, முஸ்லிம் மக்களிடையே குரோதங்களைத் தோற்றுவிப்பதை இதற்கான நடைமுறைத் தீர்வாக அறிமுகப்படுத்த முனைந்து வருகின்றனர்.


இது இரகசியமான ஒரு திட்டமுமல்ல; நாட்டின் படித்த சமூகத்தினர் இதுபற்றி தெளிவாகவே அறிந்து வைத்துள்ளனர். முன்னணி ஊடகவியலாளர்கள் கூட இதனை நன்கறிந்தே வைத்துள்ளனர். என்னும், வெளிப்படுத்த திராணியற்று மௌனம் சாதிக்கின்றனர். அந்தவகையில் பார்க்கும்போது ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் கூட ஏதோ ஒரு வகையில் இந்த இனவாத நடவடிக்கைகளின் தீவிரத் தன்மைக்கு பங்களித்துள்ளனர் என்றே கருத வேண்டியுள்ளது. இரு சமூகத்தினர்களுக்கிடையே வளர்த்து விடப்பட்டுள்ள குரோதம் எப்போது வேண்டுமானாலும் கொழுந்து விட்டு பற்றியெரியக் கூடியதாகவே அமைந்துள்ளது.


அதனையே நாம் அண்மைய இனவாத வன்முறையில் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது. ஒட்டுமொத்த ஊடக கட்டமைப்பும் எவராலும் கண்டுகொள்ள முடியாதளவு மிகவும் சிக்கலடைந்தே போயுள்ளது. முன்னேற்றப் பாதை நோக்கிச் செல்லும் அதேவேளை  70 ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரம் பெற்றது முதல் தற்போது வரை  எமது நாடு சந்தித்துவந்த பின்னடைவுகள், இழப்புக்கள் என்பவற்றை நாம் ஒருகணம் திரும்பிப் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம். நாட்டின் செல்நெறி முறைமைகளில் பல்வேறுபட்ட கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமே எமது நாட்டை அமைதிப் பூங்காவாக தொடர்ந்தும் தக்க வைத்திருக்க முடியும். அண்மைய பிரச்சினைகள், அநீதிகள் தொடர்பில் ஏன் பெரும்பாலானோர் வாய் திறப்பதில்லை? தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளில் சுமுகமான தீர்வு எட்டப்பட வேண்டுமெனில், அனைவரும் தம்மாலான பங்களிப்புக்களை வழங்கியாக வேண்டும்” என தெரிவித்துள்ளார்.



முன்னணி கவிஞரும் எழுத்தாளரும் மேடை நாடக தயாரிப்பாளருமான லூஸியன் புலத்சிங்கல குறிப்பிடுகையில், “இனங்களுக்கு இடையே சமரசங்களை ஏற்படுத்தும் பொருட்டு ஆரம்பம் முதலே நாடக கலைஞர்கள் தமது தளங்களில் பாரிய பங்களிப்புக்களை வழங்கியே வருகின்றது. இன முறுகல் தொடர்பில் நாம் எப்போதும் எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளோம். பல்லின சமூகங்களை எமது நாடு கொண்டிருப்பினும் கூட முதலில் நாம் அனைவரும் ‘இலங்கையர்கள்’ என அடையாளப்படுத்திக் கொள்வதற்கு தயங்கக் கூடாது. ஒரே நாட்டு மக்கள் எனும் வகையில் நாம் அனைவரும் பொதுவான எண்ணப்பாங்குகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிறப்புச் சான்றிதழில் கூட சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்றே நாம் எம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளோம்.



நாட்டில் இனங்களுக்கிடையே இவ்வாறான பதற்ற சூழ்நிலைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் காலமெல்லாம் நாட்டின் அபிவிருத்தியில் பாரிய வீழ்ச்சிகளை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும். கடந்த 60 வருடங்களாக இவ்வாறான நெருக்கடிகளை நிலைகளை நாடு எதிர்கொண்டு வருகிறது. எதிர்காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனில், அடிப்படைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். என்னைப் பொறுத்தமட்டில் நான் எந்தவொரு மதத்தையும் சார்ந்தவன் அல்ல; நான் மனிதம் நிறைந்த மனிதன். இவ்வாறு மனிதாபிமானம் நிறைந்த மக்களாக நாம் மாற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


பெண்கள் மற்றும் ஊடகங்களுக்குமான ஒன்றியத்தின் ஸ்தாபகர் குமுதினி சாமுவேல் குறிப்பிடுகையில், “இவ்வாறான நிலைமைகளின்போது சட்டம், ஒழுங்குகளை காத்திரமான முறையில் அமுல்படுத்துவது பாரிய இழப்புக்களை தவிர்த்துக் கொள்ள உதவும். சிங்கள இனத்தவர், முஸ்லிம் இனத்தவர் என்ற பாகுபாடின்றி சட்டம், ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நாட்டில் சட்டங்கள் அனைவருக்கும் சமமானது. அண்மைக்காலமாக குறிப்பிட்ட இனத்திற்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையாக மக்கள் மத்தியில் தவறான கருத்துக்கள் விதைக்கப்பட்டு வருகின்றன.


 இது தொடர்பில் உரிய அதிகாரிகள் தமது பணிகளை சிரமேற்கொண்டு பணிபுரிய கடமைப்பட்டுள்ளனர். குறிப்பிட்டுச் சொல்வதானால், அம்பாறை இனவாத வன்முறைக்கு காரணமாக திகழ்ந்த தப்பான அபிப்பிராயங்களை களைவதில் இலங்கை மருத்துவர்கள் சங்கம் விரைந்து துரிதமாக செயற்பட்டிருக்க முடியும். அவர்கள் அவ்விடயத்தில் தலையிட்டு மக்களின் சந்தேகங்களை உடனடியாக தீர்த்து வைத்திருக்க வேண்டும். வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.


இவ்வாறான அசம்பாவிதங்களின் போது அனைத்து சிவில் சமூகமும் ஒன்றிணைய வேண்டும்; பிரஜைகள், துறைசார் வல்லுநர்கள் தமது பங்களிப்புக்களை காத்திரமாக வழங்க வேண்டும். இவ்வகையான நெருக்கடியான சூழ்நிலைகளில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை முற்றுமுழுதாக மக்கள் நம்புவதற்கு தூண்டப்படுகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பகுத்தறிவுடன் தெளிவாக சிந்தித்து விவேகமாக செயலாற்ற வேண்டும். மத வெறுப்புப் பேச்சுக்களுக்கு சோடை போகாது இன ஐக்கியத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும். இனிமேலும் இன வன்முறைகள் ஏற்படாத வண்ணம் செய்திகளை தெளிவாக ஆராய்ந்து மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய பாரிய வகிபாகம் ஒன்றை ஊடகங்கள் ஆற்ற வேண்டியுள்ளது” என தெரிவித்துள்ளார்.


இலங்கை திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பென்னெட் ரத்னாயக்க குறிப்பிடுகையில், “அண்மைய இனவாத நடவடிக்கைகளை நாம் வனமையாக கண்டிக்கிறோம். குறிப்பாக மூன்று தசாப்த கால இன முறுகல்கள் விட்டுச் சென்ற வடுக்கள் மெல்ல மெல்ல மறைந்து நாடு சுபிட்ச நிலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான அசம்பாவிதங்கள் வெறுக்கத்தக்கன. கொத்து ரொட்டியின் மேல் இருந்த ‘கோதுமை மாவுக்கட்டித் துண்டு’ ஒன்று தப்பபிப்பிராயம் கொள்ளப்பட்டு இனவாத வன்முறைகளுக்கு வித்தாக மாறியமையையிட்டு கவலையே எஞ்சுகிறது. மனிதாபிமானம் தொடர்பில் கொண்டுள்ள நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், பல்லின சமூகத்தவர்களுக்கு மத்தியில் ஐக்கிய குலைவை ஏற்படுத்தும் அண்மையில் இடம்பெற்றுள்ள இனவாத நடவடிக்கைகள் மனதுக்கு ரணமாக மாறியுள்ளன.



ஒரு சில அடிப்படைவாதிகளின் முட்டாள்தனமான செயலினால் ஒட்டுமொத்த நாடும் நாட்டின் கீர்த்தியும் சர்வதேச ரீதியில் தலைகுனிவை சந்திக்க நேர்ந்துள்ளது. கலைஞர்கள் எனும் வகையில் நாம் மக்களுக்கு அறிவுறுத்துவது யாதெனில், பொறுப்புணர்வுடன் செயற்படுவதும் தீர்மானங்களின் போது அலசி ஆராய்வதும் மிக முக்கியமானதாகும். நிறத்தால், மதத்தால், மொழியால் நாம் வேறுபட்டிருக்க கூடும்; எனினும், மனிதர்கள் எனும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுத்தான் ஆக வேண்டும். அந்த வகையில் ஏனையோரின் உரிமைகளை, உயிர்களை, உடமைகளை நாம் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


இலங்கை தேசிய கிறிஸ்தவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கடந்த காலங்களில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிலவி வந்த இன முறுகல் நிலைமையும் அது ஏற்படுத்திச் சென்ற அழிவுகளையும் சமாதானத்தை விரும்பும் நாட்டின் அனைத்து மக்களும் மறந்துவிடக்கூடாது. பேச்சுவார்த்தைகள் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். வன்முறைகள் மூலம் தீர்வு காண எத்தனித்தல் எமது நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ள நல்லெண்ண அடிப்படைகளுக்கு முற்றிலும் முரணானது. ஏற்கனவே நலிந்த நிலையிலுள்ள அரசாங்கத்திற்கு மேலும் பாதிப்புக்களை உண்டுபண்ணும் வகையில் செயற்பட வேண்டாம் என அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுக்கு நாம் இத்தருணத்தில் கோரிக்கை விடுக்கிறோம்.


 அவ்வாறான நிலைமை நாட்டின் பொருளாதார சீர்குலைவுக்கு வழிவகுக்கும்; இறுதியில் வறிய மக்களே பெரும் பாதிப்புக்குள்ளாக நேரிடும். சட்டம், நிலைநாட்டுபவர்கள் எவ்வித பாகுபாடுமின்றி தமது கடமைகளை சரிவர நிறைவேற்ற முனைய வேண்டும். அனைத்து மத தலைவர்களும் இவ்வாறான தருணங்களில் ஒன்றிணைந்து மேலும் நிலைமை சிக்கலாகுவதை தடுக்க ஆவன செய்ய வேண்டும்.

நாட்டில் சமாதானத்தையும் அமைதியும் நிலைநாட்டுவதில் எமது கிறிஸ்தவ சங்கம் சேர்ந்து பணியாற்றுவதில் எப்போதும் முனைப்புடனேயே உள்ளது” என தெரிவிக்கப்படுள்ளது.

கமந்தி விக்ரமசிங்கவின் இனவாதம் : துலங்கல்கள் கட்டுரை தமிழில். கமந்தி விக்ரமசிங்கவின் இனவாதம் : துலங்கல்கள் கட்டுரை தமிழில். Reviewed by nafees on 22:50 Rating: 5

1 comment:

  1. Daily mirror always...do this kind of articles...
    Just boycott of them......

    ReplyDelete

Powered by Blogger.