யாரைச் சொல்லிக் குற்றம்?

எம்.எம்.ஏ.ஸமட் -
அண்மைக்காலமாக புதுவருடம் மற்றும் பண்டிகைக் காலங்களில் சுற்றுலாச் செல்வது ஒரு
'பெஷனாகவும';, வாழ்வின் கட்டாயமானதொரு கடமைபோன்றும் சமூகங்களின்; மேல்தட்டு வர்க்கத்தினர் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை வியாபித்திருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.
பாடசாலை, பல்கலைக்கழக, தொழிலக நண்பர்கள் குழாம்களாகவும், குடும்பம் குடும்பங்களாகவும் நாட்டின் நாளா பாகங்களிலுமுள்ள பிரசித்திபெற்ற இடங்களை நோக்கி சுற்றுலாச் செல்வதை இக்காலங்களில் அவதானிக்காலம்.
வௌவேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சுற்றுலாக்கள் அமைந்தாலும், பொதுவாக நாட்டிலுள்ள பழக்கப்பட்ட, விருப்பான, இயற்கை அழகு கொண்ட மனதிற்கு அமைதியை கொடுக்கக் கூடிய சுற்றுலா இடங்களை நோக்கியே பல சுற்றுலாப் பயணிகளின் பயணங்கள் அமையப் பெறுவது வழமை.
ஆனால், உலகளவில் மேற்கொள்ளப்படுகின்ற சுற்றுலாக்கள் உள்நாட்டுச் சுற்றுலா, சுற்றுச் சூழல் சுற்றுலா, உணவுச் சுற்றுலா, போதைக்கான சுற்றுலா, போர் சுற்றுலா என வகைப்படுத்தப்படுகின்றன. இருந்தபோதிலும், நம்நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற சுற்றுலாக்கள் இவ்வாறு வகைப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்படாவிட்டாலும், இவ்வகைச் சுற்றுலாக்களில் இடம்பெறுகின்ற பல்வேறு சம்பவங்கள் நம்மவர்களில் சிறு தொகையினர் மேற்கொள்கின்றன சுற்றுலாக்களிலும் இடம்பெறத்தான் செய்கின்றன.
சுற்றுலாக்களின்போது ஆடல், பாடல், கூத்துக்கும்மாலம், குதுகழிப்பு, மது அருந்துதல் என பல்வேறு விடயங்களும் இச்சுற்றுலாக்களுடன் ஒட்டிப் பிறந்ததாக இருக்கும். ஆனால் இவற்றின் பின்னால் ஆபத்துக்களும் காத்திருக்கும் என்பதில்தான் பலர் கவனயீனமாகச் செயற்படுகின்றனர்.
சுற்றுலாக்களும் ஆபத்துக்களும் மரணம் ஒவ்வொருவரையும் வௌ;வேறு வடிவில் பிடித்துக்கொள்கிறது. மரணத்திலிருந்து எவரும் தப்பித்துக்கொள்ள முடியாதுதான். இருந்தாலும,; சில சம்பவங்களினால் ஏற்படுகின்ற திடீர் உயிர் இழப்புக்கள் மனித மனங்களை பலமாக வேதனைக்குள் ஆழ்த்தி விடுகிறது.
வாழ்ந்து சாதாணை படைக்க வேண்டிய கட்டிளமைப் பருவத்தினர் வாழ்ந்து காட்டுவதற்கு துணிவதை விட, மாண்டுபோதவற்கு துணிந்து தற்கொலை புரியும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து விட்டன. அத்துடன், பெற்றோர்களின் பொறுப்புக்களின் தவறுவதல்களினாலும், கவனயீனங்களினாலும் பச்சிளம் குழந்தைகளும், சிறுவர்களும் அநியாயமாக மரணித்துப்போவதும் சாதாரணமாக நடந்தேறும் சம்பவங்களாக மாறிவிட்டன. இத்தகைய துன்பகரமான நிகழ்வுகள் பாசமுள்ள நெஞ்சங்களை வேதனையால் நனைத்து கொள்கிறது.
இந்நிலையில் அண்மைக்காலமாக, நீரில் மூழ்கி உயிர் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. கடந்த 2016ஆம் ஆண்டு 877 பேரும், 2017ஆம் ஆண்டு 728 பேரும் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளதுனர். அத்துடன் இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் 93பேர் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளனர். இவர்களில் அதிகளவிலானோர் 19 வயதிற்கு குறைவானவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அண்மையில் தெரிவிந்திருந்தார்.
கடந்த 7ஆம் திகதி கண்டிக்கு சுற்றுலாச் சென்ற ஹங்வெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களில் ஐந்துபேர் தளு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த வேளை ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்தனால் ஆற்று நீரினால் அடித்துச் செல்லப்பட்டு ஐந்து பேரும் உயிர் இழந்தமை பலராலும் பேசப்பட்ட சோகச் சம்பவமாகும்.
அறியாத இடங்களில் நீராட வேண்டாம் என உரிய தரப்புக்களினால் அறிவுறுத்தப்பட்டும் சுற்றுலாப் பயணத்தின் குதுகழிப்பும் ஆபத்தான இடங்களில் இருந்து நிழற்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற வேண்டும் என்ற ஒரு வகை ஆர்வக் கோளாரும் இவற்றின் பின்னாலுள்ள ஆபத்துக்களை மறக்கச் செய்து விடுகின்றன. ஒவ்வொரு வருடத்திலும் இவ்வாறு இடம்பெறுகின்ற இத்தகைய சம்பவங்கள் யாரைச் சொல்லிக் குற்றம் என்று கேட்கத் தோன்றுகிறது
கடந்த வருடம் உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருந்து மாத்தறைக்குச் சென்ற பெற்றோர் பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தங்காலை கடற்கரைக்குக் குளிக்கச் சென்றவேளை தாயும் பிள்ளைகளுமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடலில் மூழ்கி உயிர் இழந்தமை கொழும்பு புதுக்கடைப் பிரதேசத்தைச் சோக வெள்ளத்தில் ஆழ்த்தியது. கடல், கங்கை, ஆறு, குளம், நீரோடை, நீர் வீழ்;ச்சி என்பவற்றில் குளிக்கச் சென்று உயிர் இழக்கும் சம்பவங்கள் தொடரத்தான் செய்யகின்றன.
இத்தகைய துன்பியல் சம்பவங்கள்; இறைவன் நியதிப்படி நடந்தேறினாலும், இவ்வாறு அடிக்கடி இடம்பெறும் சம்பவங்களினால் பலியாகும் சிறுவர்கள் மற்றும் கட்டிளமைப் பருவத்தினரின் பாதுகாப்பில் உரிய தரப்புக்களின் அக்கறையின்மையும், கவனயீனமும் காரணமெனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
அத்துடன், பிள்ளைகளின் நடத்தைகளிலும் பாதுகாப்பு விடயத்திலும் பெற்றோரும், பாதுகாவலர்களும் எத்தகைய பொறுப்புடனும் முன்னெச்சரிகையுடனும் நடந்து கொள்ள வேண்டுமென்பதையும் உணர்த்தியுள்ளது. இருப்பினும் தற்கால வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஒவ்வொரு தனிநபரையும், குடும்பத்தையும் நிம்மதிக்காக அலையச் செய்துள்ளன.
வாழ்க்கை முறை மாற்றம்
ஒரு காலத்தில் பத்துப் பனிரெண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்த போதிலும் நமது முன்னோர் எவ்வித கவலையுமின்றி வாழ்ந்திருக்கிறார்கள். எவ்வித அச்சுறுத்தல்களும், அசம்பாவீதங்களுமின்றி மகிழ்ச்சிகரமான சூழல்களில் பிள்ளைகளும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
வளர்ந்திருக்கிறார்கள். நமது முன்னோர், அவர்களுக்காகவே அவர்கள் வாழ்ந்தனால் நிம்மதியாகவும் மன நிறைவுடனும் வாழ அவர்களால் முடிந்திருக்கிறது. அதிகளவு தேவை அவர்களிடம் காணப்படவில்லை. குடும்பத் தலைவன் என்ற ரீதியில் தந்தை உழைக்கும் பொறுப்பைச் சுமந்துத்து வர, தாய் வீட்டிலிருந்து பிள்ளைகளை பராமறித்து அவர்களை வளர்த்தெடுக்கும் பொறுப்பைச் சுமந்து வாழ்ந்ததொரு குடும்பக் கட்டமைப்பே அன்று காணப்பட்டது.
அதுமாத்திரமின்றி, பூட்டன், பூட்டி, பாட்டன், பாட்டி, தந்தை தாய் பிள்ளைகள் மற்றும் இரத்த உறவுகள் என எல்லோரும் ஓரே வீட்டில் இன்பகரமாக வாழும் ஒரு ரம்பியமான குடும்பக் கட்டமைப்பினாலான கூட்டுக் குடும்ப அமைப்பே அப்போது காணப்பட்டது.
ஆனால், எல்லோரும் ஒன்றாக கூடிக்குழாவி வாழ்ந்த குடும்ப வாழ்க்கை முறை இப்போது மலையேறி விட்டது. உலகமே உள்ளங்கைக்குள் சுருண்டு கொண்ட இக்காலத்தில். நமக்காக நாம் வாழ்வதற்கு அப்பால் பிறருக்காகவும,; புகழுக்காவும, பகட்டாகவும் வாழ வேண்டும என்ற நிலைக்கு நமது வாழ்க்கை முறையையும், நம்மையும் மாற்றிக்கொள்ள முனைந்ததன் விளைவால் ஒவ்வொருவருக்கும் தேவைகள் அதிகரித்து விட்டன.
நவீன சாதனங்களைக் கொண்ட அழகிய மாடி வீடு, வாகனம், விதவிதமான உணவு என்ற உயர்தர வாழ்க்கை முறைமைகள், பிள்ளைகளின் கல்வி, மற்றும் அவர்களின் ஏனைய தேவைகள் என நாளுக்கு நாள் தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இத்தேவைகளை நிறைவு செய்வதற்காக பெற்றோர்களாகிய தந்தையும் தாயும் ஓடோடி உழைத்து பணம் தேட வேண்டியதொரு சூழ்நிலை இன்று ஏற்பட்டுவிட்டது.
அத்துடன், வாழ்க்கை முறை இயந்திரமயமாகியதால் குழந்தைகளுடன் நேரங்களைச் செலவளிக்க முடியாத நிலை பல பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால், இக்குடும்பங்களில் வாழும் பிள்ளைகள் பல ஏக்கங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். பிள்ளைப் பருவத்தில் கிடைக்க வேண்டிய, எதிர்பார்க்கும் ஆசாபாசங்கள் கிடைக்காதனாலும் உளத்தாக்கங்களுக்கும் இக்குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் ஆளாகிறார்கள்.
நகரப்புற வாழ்க்கை முறைக்கும் தனிக்குடும்பக் கட்டமைப்புக்கும் தங்களைப் பழக்கிக்கொண்டவர்கள், பிள்ளைகளை காப்பகங்களில் ஒப்படைத்து விட்டு தொழிலுக்குச் செல்லும் நிலையும் காணப்படுகிறது. அதனால், நான்கு சுவர்களுக்குள் பிள்ளைகள் வாழ வேண்டிய சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பிள்ளை எதிர்பார்க்கும் நேரத்தில் அப்பிள்ளைக்குக் கிடைக்க வேண்டிய தாய் தந்தையரின் அன்பு, பாசம், அரவணைப்பு என்பவற்றில் குறைவு ஏற்படுவதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
இவ்வாறான சூழ்நிலை ஒருபுறமிருக்க, அதிகரித்துள்ள தேவைகள் பொழுதுபோக்குகள் என்பன பிள்ளைளின் பாதுகாப்பிலும் சில பெற்றோர்களை கவனம் செலுத்தச் தவறச் செய்கிறது. இதனால் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் பத்து மாதம் சுமந்து பெற்றெடுக்கும் பிள்ளைகள் அப்பெற்றோர்களின் கண்முன்னே பல்வேறு சம்பவங்களினால் உயிர்துறங்கின்றனர். ஆபாத்துக்களுக்குள்ளாகின்றனர்.
இவை மறக்கமுடியாத நினைவுகளை ஏற்படுத்தி நிற்கிறது. இதனால் பிள்ளைகளின் பாதுகாப்பில்; அக்கறை கொள்வதும், பாதுகாப்பான சூழல்களை பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதும் பெற்றோர்களின் பொறுப்பாகும்.
பொறுப்பைத் தவறும் குற்றம்.
சுற்றுலாக்களின் போது கவனயீனமாகச் செயற்பட்டு உயிர் இழப்புக்கள் ஏற்படுவது மாத்திரமின்றி வீட்டுக்குள்ளேயும் பிள்ளைகளுக்கு ஆபத்துக்கள் ஏற்படலாம். இந்த ஆபத்துக்கள் மனிதர்களினால், விலங்குகளினால் மற்றும் அஃறினைகளினால் கூட ஏற்படலாம். எனவே பிள்ளைகளின் பாதுகாப்பில் அதிக பொறுப்புக் கொள்ள வேண்டிய காலமிதுவென பெற்றோர்கள் உணர்ந்து செயற்பட வேண்டியுள்ளது.
பிள்ளைகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக ஓயாது உழைப்பது மாத்திரம் நமது பொறுப்பு என்று செயற்படாது, பிள்ளைகளுடன் வெளியில் செல்லும்போது, கடைவீதிகளுக்குச் செல்லும்போது, வாகனத்தில்போகும் போது, பாடசாலைக்கு அனுப்பும்போது, பிள்ளைகள் தனியாக வீட்டில் இருக்கும்போது, அயல் வீட்டுக்குச் செல்கின்ற வேளை, இணையப் பாவனையில் இடுபடுகின்றபோது, குளிக்கச் செல்கின்றபோது என பல்வேறு இடங்களுக்கும் பிள்ளைகளை அழைத்துச் செல்கி;ன்ற போதும் அல்லது அவர்களாகவே ஏனையவர்களுடன் இணைந்து செல்கின்றபோதும் அவர்கள் சுயமாக பல செயல்களில் ஈடுபடுகின்றபோதும் ஏற்படுகின்ற விபரீதங்கள், ஆபத்துக்கள் குறித்து பெற்றோர் அறிந்தும் தெரிந்தும் வைத்திருப்பதுடன் அவை தொடர்பில் பிள்ளைகளை அறிவூட்ட வேண்டிய பொறுப்பும் பெற்றோர்களினதும், பாதுகாவலர்களினதும் இவர்களை இத்தகைய இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பாளர்களையும் சார்ந்தது.
சமகாலத்தில் கங்கை, கடல். ஆறு, குளம், நீர்வீழ்ச்சி. நீரோடை என்பவற்றுக்கு குளிக்கச் சென்று நீரில் முழ்கிப்போவதும், வீட்டிலுள்ள நீர்த்தடாகங்களில் விழுந்த உயிர்துறப்பதும், மாடிகளிலிருந்து வீழ்ந்து மரணிப்பதும், வீட்டிலுள்ள மருந்துகளை உண்டு ஆரோக்கிமிழப்பதும், மின்சாரப் பொருள் பாவனையினால் ஆபத்துக்குள்ளாவதும் என பல்வேறு செயற்பாடுகளினால் பிள்ளைகள் உயிர் இழப்பதும் ஆபத்துக்குள்ளாவதும் பரவலாக இடம்பெற்று வருகிறது. இவ்வாறான துன்பியல் நிகழ்வுகள் இடம்பெறாமல் தங்களது பிள்ளகைள பெற்றோர்கள் பாதுகாக்க முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
பிள்ளைகளை ஆபத்திற்குள்ளாக்கும் அனைத்து விடயங்கள் தொடர்பிலும்; அறிவைப் பெறுவதும், அவை தொடர்பில் பிள்ளைகளை விழிப்புணர்வுடன் செயற்படச் செய்வதும் பெற்றோரினதும், பாதுகாலர்களினதும் கடமையாகும். இக் கடமையிலிருந்து பெற்றோர்கள் தவறும் போது, அல்லது கவனயீனமாகச் செயற்படும்போது பிள்ளைகளுக்கு ஏற்படுகி;ன்ற ஆபத்துக்கள் பெற்றோர் மனங்களில் மாறாத ரணங்களை ஏற்படுத்துகிறது. பிள்ளைகள் தொடர்பான எதிர்கால கனவுகள் கலைந்து விடுகிறது. வாழ்நாள் முழுவதும் பிள்ளைகளின் அந்த மாறா நினைவுகளோடு வாழ வேண்டிள்ளது.
ஆதலால், தாம் பெற்றெடுத்த பிள்ளகைள் எதிர்காலத்தில் வளம்பெற்று வாழ வேண்டும் என நினைத்து அதற்காக இரவு பகல் பாராது பணத்தை உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெற்றோரும், பாதுகவலரும் தத்தமது பிள்ளைகளின் பாதுகாப்பிலும் அக்கறை கொள்வதும் அதற்காக கால நேரங்களை ஏற்படுத்தி பிள்ளைகளை வழிப்புணர்வடைச் செய்வதும் இன்றியமையாததாகும் இம்முக்கிய பொறுப்பு காலத்தின் தேவையெனக் கருதிச் செயற்பட்டு விலைமதிக்க முடியாத பிள்ளைச் செல்வங்களைப் பாதுகாக்க வேணடும.; இல்லையேல் இவ்வாறான துன்பியல் சம்பவங்களினால் அநியாயமாக உயிர்கள் இழக்கப்படுகின்றபோது பிள்ளைகளைப் பாதுகாக்க தவறிய முதற் குற்றத்திற்குரியவர்களாக பெற்றோர்களும், பாதுகாவலர்களும், பொறுப்பாளர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படாவிட்டாலும்; மனச்சாடசியின் முன் நிறுத்த வேண்டி நேரிடும் என்பது என்றும் நினைவிலிருக்க வேண்டியதொன்றாகும் எனச் சுட்டிக்காட்டுவதில் தவறிருக்காது.
விடிவெள்ளி - 19.04.2018
யாரைச் சொல்லிக் குற்றம்?
Reviewed by nafees
on
01:19
Rating:
Reviewed by nafees
on
01:19
Rating:
No comments: