மைத்திரி – ரணில் ஞானத்தால் முஸ்லிம் புலம்பெயர் சமூகம் (டயஸ்பொரா) உருவாகும் நிலை.


லத்தீப் பாரூக்
அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது இனவாத சிங்கள கூலிப்படை
குழுவொன்றால் கட்டவிழத்து விடப்பட்ட அர்த்தமற்ற வன்முறை பெரும்பாலும் உள்நாட்டில் செயற்படும் உள்ளுர் மற்றும் சர்வதேச சக்திகளின் பக்க பலத்தோடு இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ள நிலையில் தமிழ் டயஸ்பொரா என பொதுவாக அழைக்கப்படும் தமிழ் புலம் பெயர் சமூகத்துக்கு அடுத்த படியாக இலங்கை அரசுக்கு எதிராக இரண்டாவது அணி ஒன்றையும் சர்வதேச அரங்கில் உருவாக்கியுள்ளது.


மார்ச் மாதம் நான்காம் திகதி திகண நகரில் தொடங்கி கண்டி மாவட்டத்தின் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் ஏனைய நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பரவத் தொடங்கியது முதல் உலகம் முழவதும் அதற்கு எதிராக பல்வேறு இடங்களில் கண்டனப் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறத் தொடங்கிவிட்டன. இலங்கை முஸ்லிம்களின் பாதகாப்பை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை வற்புறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டங்களும் கூட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்றன.


ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்களின் பிரதான கடமைகளில் ஒன்று அதன் பிரஜைகளையும் அவர்களின் சட்டபூர்வ உரிமைகளையும் சொத்துக்களையும் பாதகாப்பதாகும். அந்த வகையில் மைத்திரி ரணில் அரசு அவர்கள் இருவரையும் பதவிக்கு கொண்டு வருவதில் பெரும் பங்காற்றிய இந்த நாட்டு முஸ்லிம்களின் உடமைகளையும் உயி;ரையும், உரிமைகளையும் பாதுகாக்கத் தவறிவிட்டது.


இவர்கள் இருவரும் முஸ்லிம்களை புறந்தள்ளி துச்சமென மதித்து, உலகளாவிய முஸ்லிம் விரோத சக்திகளோடு கூட்டுச் சேர்ந்துள்ளனர். உள்ளுர் மற்றும் சர்வதேசத்தின் பாரதூரமான விளைவுகளைப் புரிந்து கொள்ளாமல் அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.


இலங்கை உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகளாலும் அவற்றின் அரசுகளாலும் நேசிக்கப்படும் ஒரு நாடாகும். வளைகுடா நாடுகளிலும் அவற்றுக்கு அப்பாலும் பத்து லட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் தொழில் புரிகின்றனர். அவர்கள் வருடாந்தம் உள்நாட்டுக்கு எட்டு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை அனுப்பி வருகின்றனர். நாட்டில் முறிவடைந்து வரும் பொருளாதாரத்தை தாங்கிப் பிடித்து நிற்கும் ஒரு முக்கிய பிரிவாக இது அமைந்துள்ளது.


ஆனால் ஜனாதிபதி மைத்திரியோ அல்லது பிரதமர் ரணிலோ உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து உடன்படிக்கைகளைச் செய்து வருகின்றனரே தவிர இந்த வளைகுடா பிராந்திய நாடுகளுக்கு அவர்கள் ஒருபோதும் விஜயம் செய்வதில்லை. முஸ்லிம்கள் தொடர்பாகவும் முஸ்லிம் நாடுகள் தொடர்பாகவும் அவர்களுக்குள்ள மனநிலையின் வெளிப்படுதான் இது.
நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு சமாதானத்தையும் நீதியையும் தங்களால் அகுபவிக்க முடியும் என்று முஸ்லிம்கள் நம்பினார்கள். ஆனால் ஒரு சில மாதங்களிலேயே அந்த நம்பிக்கைகள் சிதைந்து போய்விட்டன. ஜனாதிபதியும் பிரதமரும் முஸ்லிம்களை நட்டாற்றில் விட்டுவிட்டனர் என்பது பின்னர் நிரூபணமானது.


முஸ்லிம்கள் மீதான பரவலான தாக்குதல் தீவிரமானது. பல முஸ்லிம் தூக்குழுக்கள் அரச உயர் மட்டத்தை சந்தித்து இது பற்றி அறிவுறுத்தியும் அரசாங்கம் கொஞ்சம் கூட அவற்றைப் பொருட்படுத்தவில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக அநீதி இழைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவும் இல்லை. மாறாக இது அரசாங்கத்தை கவிழ்த்த மகிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளும் சதித் திட்டம் எனக் கூறி ஜனாதிபதி சமாளித்தார்.
முஸ்லிம்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

ஜின்தோட்டையிலும் திகணவிலும் கண்டி மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும்; முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு பொலிஸாரும் விஷேட அதிரடிப் படையினரும் துணை போயுள்ளதாக பரவலான குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.


வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்கள் தான் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டனப் பேரணிகளை நடத்தி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்து இந்த நிலைமைக்கு சரியான பதில் அளித்துள்ளனர். 1983 ஜுலையில் தமிழ் மக்கள் மீது இதேவிதமான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அதன் விளைவாகத் தான் 30 வருட இனவாத யுத்தம் நாட்டில் இடம்பெற்றது. இந்த யுத்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட வழி தெரியாமல் அரசு தவித்துக் கொண்டிருக்கின்ற வேளையில்தான் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும் தீவிரம் அடைந்துள்ளன.


ஐக்கிய இராச்சியத்தில் நடந்த ஆர்ப்பாட்டம், நியுயோர்க்கில் ஐ.நா அலுவரகத்துக்கு எதிரே நடந்த ஆர்ப்பாட்டம், கனடா, ஜெனீவா, பாரிஸ் உற்பட பிரான்ஸின் ஏனைய நகரங்களில்; நடந்த ஆர்ப்பாட்டம், அவுஸ்திரேலியாவில் உறையும் பணியில் நடந்த ஆர்ப்பாட்டம் என எல்லா ஆர்ப்பாட்டங்களிலும் அந்தந்த இடங்களில் வாழும் முஸ்லிம்களோடு இலங்கைத் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களும் கைகோர்த்து செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் இலங்கை அரசாங்கத்தின் மீதான தங்களது கோபத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தி உள்ளனர்.


இந்த நிகழ்வுகளுக்கு சர்வதேச அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவலான பிரபலம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் நற்பெயருக்கு இதனால் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டுக்கு எற்பட்ட இந்த அபகீர்த்திக்கான பொறுப்பை ஜனாதிபதியும் பிரதமருமே முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்..


வெளிநாடுகளில் வாழும் இலங்கை கல்விமான்கள் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான இந்த வன்முறைகளை வன்மையாகக் கண்டித்துள்ளனர். அரசாங்கம் விரைந்து செயற்பட மறுத்தமை தங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கலவரங்களைத் தடுக்க அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கத் தவறி உள்ளதையும், சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் அரசு அசமந்தமாக நடந்து கொண்டுள்ளதையும் அவர்கள் வெறுப்போடும் கோபத்தோடும் சுட்டிக்காட்டி உள்ளனர்.


மேலதிக கலவரங்களும் இரத்தக் களரியும் ஏற்படுவதைத் தடுக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் மாறி மாறி பதவிக்கு வந்த அரசுகள் பல வருடங்களாக தொடர்ந்து கடைப்பிடித்த தேசியவாதப் போர்வையிலான பேரினவாதத்தின் விளைவே இன்று இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இந்தளவு அதிகரிக்கக் காரணமாய் இருந்துள்ளன. அம்பாறை, திகண, தெல்தெனிய உற்பட பல இடங்களில் முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்பட்டமை ஒன்றும் தற்செயலான சம்பவங்கள் அல்ல. இவற்றை முஸ்லிம்கள் மீதான தாக்குல்கள் பற்றிய நீண்ட கால வரலாற்றோடு இணைத்துப் பார்க்க வேண்டும். இதில் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் மீது யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இழைத்த கொடுமைகளும் அடங்கும்.


யுத்தம் முடிந்த பிறகு கிழக்கிலும் தெற்கிலும் வாழும் முஸ்லிம்கள் மீது பெரும்பான்மை இனத்தவர்களின் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. 2014 மே மாதத்தில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான நாட்டின் பிரபல நாகரிக ஆடை நிறுவனங்களில் ஒன்றான கொழும்பில் உள்ள பெஷன் பக் காட்சி அறை சிங்கள பௌத்த தேசியவாத குழுவினரால் எரிக்;கப்பட்டது. 2014 ஜுனில் களுத்துறை மாவட்டத்தின் அளுத்கமை பேருவளை உற்பட பல பகுதிகளில் இதே குழுவினர் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களில் ஈடுபட்டனர். 2017ல் மட்டும் முஸ்லிம்களுக்கு எதிரான 20 வன்முறைச் சம்பவங்கள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. இவற்றுள் ஒன்று 2017 செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மாரின் 31 றோஹிங்யா முஸ்லிம் அகதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.


அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும என்று இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டுள்ள சர்வதேச மனித உரிமை சாசனங்களை கொஞ்சம் கூட மதிக்காமல் அவற்றை முழுமையாக மீறும் வகையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்கள் பல இடம்பெற்ற போது அங்கு பொலிஸாரும் ஆயுதப் படையினரும் நின்றனர். ஆனால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இந்த திட்டமிடப்பட்ட வன்முறைகளை இலங்கையின் சிவில் அமைப்புக்கள் சில கண்டித்துள்ளன.


ஆனால் அவற்றோடு சம்பந்தப்பட்ட அரசியல் அல்லது சமயப் பிரதிநிதிகள் எவர் மீதும் அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டது.


பொது பல சேனா மிக வெளிப்படையாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் உரைகளை நிகழ்த்தி வெறுப்புணர்வை தூண்டி வருகின்றது.

மற்றவர்களுக்கு எதிரான அச்சமூட்டும் உரையை அது தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றது.

இனவாதத்தை தூண்டி வருகின்றது. சமயவெறியை தூண்டி வருகின்றது. இவர்கள் ஒரு வெற்றிடத்தை நிறப்புவதற்காக இவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அவர்களுடைய செயற்பாடுகளில் ஒரு குறிக்கோள் இருக்கின்றது. ஆனால் அதை கண்டும் காணாமல் தெரிந்தும் தெரியாமல் அரசியல் அதிகாரமும் பொலிஸாரும் செவிடர்களாகவும் குருடர்களாகவும் நடந்து கொள்கின்றனர். இந்த நடவடிக்கைகள் பொது பல சேனா, மகாசொன் பலகாய போன்ற அமைப்புக்களை விடுபாட்டு உரிமையுடன் செயற்பட உற்சாகப் படுத்துவதாகவே உள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களாகிய நாமும் மற்றும் இலங்கை புலம் பெயர் சமூகமும் எமது நாட்டில் வாழும் பல்லின சமூகங்களின் ஒற்றுமைக்காகவும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்காகவும் குரல் கொடுப்போம் என்று சர்வதேச ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட இலங்கை புலம்பெயர் சமூகத்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


நாட்டின் பிரஜைகளது சம உரிமைகள் தொடர்பாகவும் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் எழுந்துள்ள பிரச்சினைக்கு அவசர கால சட்டத்தை அமுல் செய்வதோ அல்லது சமூக ஊடகங்களுக்குத் தடை விதிப்பதோ நிரந்தரத் தீர்வாக அமையப் போவதில்லை.


நீண்ட கால அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகள் அரசாங்கத்தின் அடக்குமுறை கரங்கள் ஓங்கவே வழியமைக்கும். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்களை விரைவாக சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேசத்தில் வாழும் இலங்கை புத்திஜீவிகள் விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சமூகத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியவர்கள் தமது பொறுப்பில் இருந்தும் கடமையில் இருந்தும் தவறி உள்ளனர். அத்தகைய அரசியல் அதிகார பீடங்கள் மற்றும் சட்ட அமுலாக்க பிரிவினர் மீது அவர்களின் பொறுப்புக் கூறலை நிலைநாட்ட அரசாங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எதிர்கால சமாதானத்துக்கு அடித்தளம் இடக் கூடிய அரசியல் சாசன மறுசீரமைப்பு தொடர்பாக நீண்ட காலமாக தேக்கத்தில் உள்ள விடயங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும். இத்தகைய செயற்பாடுகள் தான் சிறுபான்மையினர் உற்பட சகல பிரஜைகளுக்கும் தேவையான பாதுகாப்பையும் நியாயத்தையும் வழங்கக் கூடியதாக இருக்கும். சர்வதேச ரீதியாக விடுக்கப்பட்டுள்ள இந்த வேண்டுகோளில் ஒப்பமிட்டுள்ள சில முக்கிய பிரமுகர்கள் வருமாறு:


வாசுகி நேசையா - நியுயோர்க் பல்கலைக்கழகம், நிமன்தி பெரேரா ராஜசிங்கம் - கோல்கேட் பல்கலைககழகம், மைத்திரி ஜெகதேசன் - சான்டா கிளாரா பல்கலைக்கழகம், கனிஷ்க குணவர்தன – டொறான்டோ பல்கலைக்கழகம், வி.வி.ஞானசாந்தன் - மின்னசோட்டா பல்கலைக்கழகம், குவாத்ரி இஸ்மாயில் - மின்னசோட்டா பல்கலைக்கழகம், ஷாரிகா திரணகம - ஸ்டான்ட்போர்ட் பல்கலைக்கழகம், சொனாலி பெரேரா – சிற்றி பல்கலைக்கழகம் நியுயோர்க், கிடானா ஆனன்த – சிற்றி பல்கலைக்கழகம் நியுயோர்க், சன்ஜீவி நுஹுமல் - ஹாவார்ட் பல்கலைக்கழகம், கதலீன் பெர்ணாண்டோ – கன்யோன் கல்லூரி, கான்சனா றுவன்புற – எடின்பேர்க் பல்கலைக்கழகம், பிரதீப் சங்கபால – அல்பர்டா பல்கலைக்கழகம், அர்ஜுன் குணரத்ன – மக்லெஸ்டர் கல்லூரி, அமர்நாத் அமரசிங்கம் - வோட்டர்லூ பல்கலைக்கழகம், அர்ஜினி நவால் - ஹாவார்ட் பல்கலைக்கழகம், நீல் டி வொட்டா – வேக்பொரஸ்ட் பல்கலைக்கழகம், நிஹால் பெரேரா – போல் ஸ்டேட் பல்கலைக்கழகம், சந்தியா ஹேவமானே – எஸக்ஸ் பல்கலைக்கழகம், நிரா விக்கிரமசிங்க – லீடன் பல்கலைக்கழகம், நளின் ஜயசேன – மியாமி பல்கலைக்கழகம், பிரசான்த் குகநாதன் - கொலம்பியா பல்கலைக்கழகம், ஷியானா குணசேகர – ஜோன்; ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம், சுகன்யா இமானுவல் - கோர்னல் பல்கலைக்கழகம், ஈ.வெலன்டைன் டேனியல் - கொலம்பியா பல்கலைக்கழகம், வறுணி விமலசிறி – போர்ன்மவுத் பல்கலைக்கழகம், தினிது கருணாநாயக்க – மியாமி பல்கலைக்கழகம், வித்யாமாலி சமரசிங்க – அமெரிக்கன் பல்கலைக்கழகம், மகேசன் நிரன்ஜன் - சவுத்ஹம்ப்டன் பல்கலைக்கழகம், நேத்ரா சமரவிக்கிரம - ஸ்டன்போர்ட் பல்கலைக்கழகம், தில்ஷானி பெரேரா - ஸ்டன்போர்ட் பல்கலைக்கழகம், மைரா சிவலோகநாதன் - மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம், நமிகா றாபி – கலிபோர்னியா ஸ்டேட் பல்கலைக்கழகம், கீதிகா தர்மசிங்க – கோர்னல் பல்கலைக்கழகம், சுதேஷ் மன்திலக்க – மாரிலாந்து மற்றும் பேராதனை பல்கலைக்கழகம், எஸன்த பீரிஸ் - பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், தேவக குணவர்தன – கலிபோர்னியா பல்கலைக்கழகம், தேமால் எல்லாலெவ – கிளாhக் பல்கலைக்கழகம், சோபனா சேவியர் - இட்தகா கல்லூரி, சாலிக்க கஜவீர – தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம், அஷ்வினி வசன்தகுமார் – கிங்ஸ் கல்லூரி லண்டன், யாலினி ட்ரீம் - சென் பிhன்ஸிஸ்கோ பல்கலைக்கழகம், மைத்திரி சிறிசேன – எடின்பிரோ பல்கலைக்கழகம், ஏ.ஆர்.எம். இம்டியாஸ் - டெம்பிள் பல்கலைக்கழகம் டெபோரா பிலிப், சிற்றி பல்கலைக்கழகம் நியுயோர்க், டொனி ஆங்கி – உடாஹ் பல்கலைக்கழகம், தனூஜா துரைராஜா - சூரிச் பல்கலைக்கழகம், சமானி பெரேரா – மியாமி பல்கலைக்கழகம், அசின்தய பண்டார – டெக்ஸாஸ் டெக் பல்கலைக்கழகம், கசுன் கஜசிங்க – சென்ட்கிளயர் ஸ்டேட் பல்கலைக்கழகம், உபுல் விக்கிரமசிங்க – டேர்ஹம் பல்கலைக்கழகம், துஷார ஹேவகே – ஒட்டாவா பல்கலைக்கழகம்.
இந்த நாட்டுக்கு முஸ்லிம்கள் செய்துள்ள பாரிய பங்களிப்பை இனவாத அரசியல்வாதிகளும் அவர்களால் இயக்கப்படும் கூலிப்படையினரும் புரிந்து கொள்ளத் தவறியுள்ளமை துரதிஷ்டவசமானதாகும்.


1948ல் பிரிட்டனிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெறுவதிலும் கூட முஸ்லிம்களின் மகத்தான பங்களிப்பு உள்ளது. இந்த நாட்டில் நான்கரை நூற்றாண்டுகளுக்கு மேலாக இருந்த ஐரோப்பிய காலணித்தவத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் முஸ்லிம்கள் பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர்.


நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதில் முஸ்லிம்கள் தீர்க்கமான பங்கினை செலுத்தி உள்ளனர். பிரிவினைக்கான தமிழ் ஆயுத பாணிகளின் போராட்டத்தின் ஆரம்பத்தில் அவர்களுக்கு இந்தியாவின் பூரண ஆதரவு இருந்தது. அவர்களைக் கையாளும் ஆற்றலோ ஆயுத பலமோ இலங்கை ஆயுதப் படைகளிடம் இருக்கவில்லை.


நாடு பினவு பட வேண்டும் என்ற அழைப்பை முஸ்லிம்கள் ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்து வந்தனர். நாட்டின் ஆள்புல ஒருமைப் பாட்டுக்கும் ஐக்கியத்துக்கும் அவர்கள் பக்கபலமாக இருந்தனர். இதனால் அவர்களும் இனவாத யுத்தத்துக்குள் சிக்கிக் கொண்டனர். இதனால் அவர்களுக்கு மிஞ்சியது மரணங்களும் அழிவுகளுமே. அவர்களின் சொத்துக்கள், வாழ்வாதாரங்கள் என்பன அழிக்கப்பட்டு; நாட்டை ஆதரித்தமைக்காக பாராட்டப்பட வேண்டிய சமூகம் எதுவுமே இல்லாமல் நடுத்தெருவுக்கு கொண்டு வரப்பட்டது.


தமிழ் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பத்தில் முஸ்லிம்களும் அவர்களோடு இணைந்திருந்தால் இந்த நாட்டின் தலைவிதிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டிருக்கும். புதிய அரசியல் வடிவம் தோற்றம் பெற்றிருக்கும்.
சிறுபான்மையினரின் துன்பத்தில் காலம் கழிக்க நினைக்கும் குறுகிய நோக்கம் கொண்ட சிங்கள இனவாத அரசியல்வாதிகள் இந்த நாட்டில் சிங்களவர்களைப் போன்றே தமிழர்களும் முஸ்லிம்களும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் வந்து குடியேறியவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இடைக்காலத்தில் தங்கி இருப்பவர்கள் அல்ல.


இந்த நாட்டின் முழுமையான உரிமை பெற்ற பிரஜைகள். சிங்கள இனவாதிகளும், இனவாத அரசியல்வாதிகளும் ஏனையவர்களும் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள துணியாத வரைக்கும் இந்த நாடு ஒருபோதும் சமாதானத்தையும் நிம்மதியையும் அனுபவிக்கப் போவதில்லை. அதுவரை இந்த நாடு முன்னேற்றப் பாதையில் பயணம் செய்யப் போவதும் இல்லை.
இது முழுக்கமுழுக்க சிங்கள பௌத்த நாடு என்ற எண்ணம் இந்த நாட்டுக்கு அழிவை தவிர வேறு எதையும் தேடித்தரப் போவதில்லை.
மைத்திரி – ரணில் ஞானத்தால் முஸ்லிம் புலம்பெயர் சமூகம் (டயஸ்பொரா) உருவாகும் நிலை. மைத்திரி – ரணில் ஞானத்தால் முஸ்லிம் புலம்பெயர் சமூகம் (டயஸ்பொரா) உருவாகும் நிலை. Reviewed by nafees on 21:49 Rating: 5

No comments:

Powered by Blogger.