கிண்ணியா நகர சபை யானையிடம் வீழ்ந்தது..



ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்  -

உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து, கிண்ணியாவின் நகர சபையின் முதல் அமர்வு, கிண்ணியா நகர சபை மண்டபத்தில் இன்று (11) காலை 9 மணிக்கு இடம்பெற்றது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற இச்சபை அமர்வின்போது, பகிரங்க வாக்கெடுப்பின் மூலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எஸ்.எச்.எம்.நளீம், தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வாக்கெடுப்பின் போது, தவிசாளருக்கு ஆதரவாக 09 வாக்குகளும் எதிராக மூன்று வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிராக மூன்று வாக்குகளும் ஆதரவாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி சேர்ந்து ஒன்பது வாக்குகளும் அளிக்கப்பட்டன.
 நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர், இவ்வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இச்சபை, தவிசாளர், பிரதித் தவிசாளர் உட்பட மொத்தமாக 13 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கவுள்ளது.
இரண்டாம் கட்டமாக பிரதித் தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக பகிரங்க வாக்களிப்பு இடம்பெற்றது. இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஐயூப் நளீப் சப்ரீன், ஒன்பது வாக்குகள் ஆதரவாகவும் மூன்று வாக்குகள் எதிராகவும் பெற்று, பிரதித் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்த இருவருக்கு பட்டியல் ஆசனங்கள் இரண்டு வழங்கப்பட்ட நிலையில் அதில் ஒருவரான எஸ்.எச்.எம்.நளீம் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

விசேடமாக இச் சபையில் தேர்தல் சட்டத்தின் படி 25 வீதம் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்ட போதிலும் பெண் பிரதிநிதிகள் எவரும் இல்லாத சபையாக இச் சபை இயங்க இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா நகர சபை யானையிடம் வீழ்ந்தது.. கிண்ணியா நகர சபை யானையிடம் வீழ்ந்தது.. Reviewed by nafees on 01:48 Rating: 5

No comments:

Powered by Blogger.