ஆஷிபா வன்புணர்வு: இந்தியாவின் வெட்கம்.

கட்டுக்கடங்காது உடற் சுகம் தேடியலையும் மாடுகளுக்கு காம உணர்வை கட்டுப்படுத்தி வைப்பதற்கு
கிராமப்புறங்களில் 'ஒரு வைத்தியம் செய்வார்கள். அதற்கு 'நலம் அடித்தல்' என்று; சொல்வார்கள். இதன்மூலம் மாடுகளின் விதைகளில் திடீரென அடித்து, உள்நோக்கி தள்ளிவிடுவதன் மூலம் மாடுகளுக்கு இடையிலான பாலியல் ஒழுக்கம் பேணப்படுவதுண்டு.
இந்தியாவிலும், இலங்கையிலும் இன்னபிற நாடுகளிலும் பருவமடையாத சிறுமிகளும் மற்றும் யுவதிகளும் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதும் அதற்காக மதத்தலங்களும் அரசியலும் அதிகாரமும் பயன்படுத்தப்படுவதையும் பார்க்கும் போது, மனித மிருகங்கள் பலவற்றுக்கும் 'நலம் அடிக்க' வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவே உள்மனது சொல்கின்றது.
இத்தனை மார்க்கங்கள், சமயங்கள், சமய இயக்கங்கள், கடவுள்கள், யோகிகள், மதகுருக்கள், சாமியார்கள், வழிப்படுத்துனர்கள் இருந்தும், ஜனநாயகம், ஒழுக்கம், பண்பாடு, கலாசாரம், பாரம்பரியம், சடங்குகள், சம்பிரதாயங்கள், விழுமியங்கள் என்று சும்;மா கதையளந்து கொண்டும் வாழ்கின்ற நாம் அன்றாடம் பாலியல் வன்கொடுமைகளுக்கு சிறுமிகளையும் சிறுவர்களையும் பலிகொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை விட வேறெதும் வெட்கக்கேடு இருக்கின்றதா?
சுதந்திரம் இல்லை
ஒரு பெண் கழுத்துநிறைய தங்க நகைகளுடன் நள்ளிரவில் ஒரு சாலையில் நடந்து செல்லும் நாள் எப்போது வருமோ அன்றுதான் நமக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கும் என்று மகாத்மா காந்தி சொன்னார்.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நள்ளிரவு வேளையிலும் சுதந்திரமாக பெண்கள் நடமாடுவதை அங்கு சென்றவர்கள் அறிவார்கள். கலாசாரம் இல்லை என்றும் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்றும் கீழைத்தேசத்தவர்களால் விமர்சிக்கப்படும் நாடுகளில் இந்நிலைமை இருக்கின்ற போது கலாசாரத்தையும் பண்பாட்டையும் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கின்ற இந்தியா, இலங்கை போன்ற தென்னாசிய நாடுகளில் நிலைமை தலைகீழாக இருக்கின்றது என்பதே யதார்த்தம்.
நள்ளிரவில் பெண்ணொருத்தி சுதந்திரமாக நடமாடுவதே சுதந்திரம் என்று காந்தியடிகள் சொன்னார். ஆனால் இலங்கையில் ஒரு மாணவிக்கு பாடசாலைக்கு செல்ல முடியவில்லை, வகுப்புக்குச் செல்ல முடியவில்லை, வீதியில் விளையாட முடிவதில்லை. அதேபோல் மிகப் பெரிய ஜனநாயக நாடென்றும் கலாசாரத்தின் காவலன் என்றும் பார்க்கப்படுகின்ற இந்திய துணைக் கண்டத்தில் இன்னும் பராயப்படாத ஒரு சிறுமியால் பட்டப்பகலில், குதிரை மேய்க்கக் கூட போக முடியாதிருக்கின்றது என்பதையே ஆஷிபா மீதான கூட்டு பாலியல் வன்புணர்வு வெளிக்காட்டி நிற்கின்றது.
அப்படியென்றால், நமது தேசங்கள் இன்னும் மகாத்மாவின் பார்வையில் உண்மைக்குண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்றுதான் கருத வேண்டியிருக்கின்றது. குறிப்பாக, இந்தியா மற்றும் இலங்கையின் வன்புணர்வுப் பட்டியலில் சிறுமி ஆஷிபா முதலும் இல்லை கடைசியும் இல்லை. சட்டம் முறையாகவும், கடுமையாகவும் நடைமுறைப்படுத்தப்படாத வரையில் வன்புணர்வுகளும், சின்னஞ்சிறுசுகளை பாலியல் வேட்கைத் தீயில் கருக வைக்கின்ற அபத்தங்களும் நடந்து கொண்டுதான் இருக்கப் போகின்றன. இன்றைய உலக ஒழுங்கில் இதனை தடுப்பதில் எந்த சமயமும் முழுமையான வெற்றியைப் பெற்றிருக்கின்றது என்று கூறுவதும் கடினமானது.
தொடர் வன்புணர்வுகள்
இலங்கையில் 90களின் நடுப்பகுதியில் யாழ் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமாரசுவாமி பாதுகாப்பு தரப்பினரால் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்.
அதற்கு முன்னரும் பின்னரும் இதைப் போல பல கற்பழிப்புகள் இடம்பெற்றன. மிகக் குறிப்பாக, இலங்கைத் தமிழர் கலாசார விழுமியங்கள் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத்தில் வித்யா என்ற மாணவி பாடசாலைக்கு செல்லும் வழியில் கடத்தப்பட்டு கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, அதனை பணத்திற்காக வீடியோவாக பதிவு செய்த பின்னர் அந்த மாணவி படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சம்பவம் இந்த நாட்டையே உலுக்கியது.
2016ஆம் ஆண்டு கொட்டதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி சின்னச்சிறு சிறுமி சேயா செதவ்மி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இப்படி இன்னும் எத்தனையோ சம்பவங்கள் பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவத்தை பின்பற்றும் மக்கள் வாழும் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், பெண்களை தெய்வமாக மதிக்க வேண்டும் என்ற கருத்தியலை உருவாக்கிய இந்தியாவில் இப்போது பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாமல் சென்று கொண்டிருப்பது ஒருபுறமிருக்க மிருகத்தனமான பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறிக் கொண்டிருப்பதைக் காணக் கிடைக்கின்றது. புள்ளிவிபரங்களும் இதனை நிரூபணம் செய்கின்றன.
அதாவது, படிப்பறிவு குறைந்த முன்னைய காலத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் உயிரோடு புதைப்பதும் கள்ளிப்பால் கொடுத்து சாகக் கொல்வதும் வழக்கமாக இருந்ததை அறிந்து கவலைப்பட்ட, வெட்கப்பட்ட இன்றைய நமது தலைமுறையில் - பெண் குழந்தைகள் முறையாக வளர்க்கப்பட்டு ஒரு ஆட்டுக் குட்டியைப் போல சில ஓநாய் காமுகர்களின் பசிக்காக அறுத்துப் பலியிடப்படுகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.
ஆனால், காமுகர்கள் இன்று பூசாரிகளாகவும், பக்தர்களாகவும், சாமியார்கள் போலவும், மதத் தலைவர்கள் போலவும், ஆசிரியர்கள், தந்தையர், சகோதரார்கள், ஒன்றுவிட்ட சகோதரர்கள், உறவினர், அரசியல்வாதி, அரசியல்வாதியின் பிள்ளை, பெரும்புள்ளி, பாதுகாப்பு தரப்பினர், அதிகாரமுள்ளவர் என்ற முகமூடிகளை அணிந்து கொண்டு வருகின்றார்கள் என்பது மட்டுந்தான் காலவினோதமாக இருக்கின்றது.
இந்தியாவின் நிலைமை
இந்தியாவில் காமவேட்கைக்கு மேலதிகமாக வலிமையற்றவர்களை பலமுள்ளவர்கள் தாக்குவதற்கான ஒரு ஆயுதமாகவும் பாலியல் வல்லுறவு பிரயாகிக்கப்படுகின்ற போக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது. குறிப்பாக வட மாநிலமான ஹரியானாவில் கூட்டுப்பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக பி.பி.சி. தகவல் ஒன்று கூறுகின்றது.
கடந்த ஒரு சில மாதங்களுக்குள் மட்டும் ஹரியானாவில் 10 வயது சிறுமியை உருக்குலைத்த குற்றத்துக்காக 50 வயது முதியவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
15 வயது சிறுவன் மூன்றரை வயது பெண் குழந்தையை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக கூறப்படுகின்றது. 20 வயது பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் வல்லுறவுக்குள்ளாகியிருக்கிறார் ஒரு மாணவியை கடத்திய குற்றத்துக்காக 24 வயது ஆண் கைது செய்யப்பட்டிருக்கிறார்; மிருகத்தனமாக தாக்கப்பட்ட ஓர் பதினெட்டு வயதை எட்டாத சிறுமியின் உடல் வயலில் கண்டெடுக்கப்பட்டது. டெல்லியில் பல்கலைக்கழக மாணவி மிக மோசமான கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொலைசெய்ப்பட்டிருந்தார்.
இவ்வாறு ஹரியானாவில் மட்டுமல்ல இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும், ஏன் இலங்கையில் நமது ஊhர்களிலும் கூட இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இலங்கையில் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவது ஒருபுறமிருக்க,
நூதனமான பாலியல் துஷ்பிரயோகங்கள் பரவலாக இடம்பெறுகின்றன. இந்த குற்றச்சாட்டு எனும் 'தொப்பியை' வீசினால், ஒரு சில பாடசாலை ஆசிரியர்கள், பகுதிநேர வகுப்பு ஆசிரியர்கள், மதபோதகர்கள், உறவினர்கள், தந்தையர், சகோதரர்கள், தெரிந்தவர்கள் என பலருக்கு அந்த தொப்பி பொருத்தமாக இருக்கும். ஆனால், இவ்வாறான சம்பவங்கள் எல்லாம் பெரும்பாலும் மறைக்கப்பட்டு விடுவதைக் காணலாம்.
இந்த வரிசையிலேயே இன்று சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு, கோவிலில் அடைத்து வைக்கப்பட்டு, கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, காட்டுப்பகுதியில் வீசப்பட்டிருக்கின்றாள். காணாமல் போன சிறுமிக்கு இத்தனையும் நடந்திருக்கின்றது என்பதை அறிந்து, உலகளவில் மில்லியன் கணக்கான நல்லுள்ளங்கள் ஆஷிபாவுக்கு நீதி வேண்டிப் போராடிக் கொண்டிருக்க, அதிகார வெறிபிடித்தவர்கள், அதிகாரத்தில் தமது தலைவன் இருக்கின்றான் என்ற அகந்தையுடன் இந்த அக்கிரமத்தை நியாயப்படுத்தப் பார்க்கின்றார்கள். இதனை ஒரு தேசத்தின் கௌரவப் பிரச்சினைபோல காட்டுவதற்காக இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்தியயவாறு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டுமென கோரி வருவது அபத்தம் அன்றி வேறொன்றுமில்லை.
கசக்கப்பட்ட மலர்
ஆஷிபா பானு! தன் பெயரைக்கூட சரியாகச் சொல்ல முடியாத சிறுமி அவள். 8 வயதான சின்னஞ்சிறு பட்டாம்பூச்சி. ஒரு ஏழை வீட்டின் குட்டி இராஜகுமாரியாக இருந்தவள்.
இந்தியாவின் காஷ்மீரின் கத்துவா கிராமத்தில் ஒரு வறிய குடும்பத்தைச் சேர்ந்த ஆஷிபா, தன்குடும்பப் பொறுப்பை சற்றேனும் சுமந்தவள் என்றுதான் கருத வேண்டியுள்ளது. தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் குதிரைகளை மேய்ப்பதும், ஊர் சுற்றிப்பார்க்க வருபவர்களுக்கு குதிரையில் சவாரிக்கு அழைத்துச் சென்று அதன்மூலம் தனக்கு கிடைக்கின்ற சிறுதொகைகளை சேமித்துக் கொண்டு வந்து தாயிடம் கொடுத்துவிட்டு, புத்தகங்களை எடுத்துக் கொண்டு படிக்கத் தொடங்கி விடுவாள்.
சிந்தித்துப் பாருங்கள். நமது பிள்ளைகள் கோழிப் பொரியலையும், பேர்கரையும் தின்றுவிட்டு மேலதிக வகுப்புக்குச் சென்று திரும்பி வந்து பஞ்சு மெத்தையில் படுத்தவாறு அடம்பிடித்துக் கொண்டிருக்கையில் ஆஷிபா, குதிரைச் சவாரி சேவை வழங்கி உழைத்துக் கொண்டிருக்கின்றார்.
முகம்மது யூசுப் முஜ்வாலா – நசீமா பீபி தம்பதிகளின் புதல்வியான ஆஷிபா பானு. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட காஷ்மீரின் கத்துவா பகுதியில் கால்நடைகள் மூலம் வருமானம் உழைக்கின்ற குஜார் இனக் குழுவைச் சேர்ந்ததே ஆஷிபாவின் குடும்பம்.
கடந்த ஜனவரி 10 ஆம் திகதி தனது தங்கச்சியை பாடசாலைக்கு வழியனுப்பிவிட்டு, காட்டுக்குப் போன குதிரைகளை தேடிச் சென்றாள் நமது ஆஷிபா. மாலையானதும் குதிரைகள் வீடுதிரும்பிய போதும், ஆஷிபா வீட்டுக்கு வரவில்லை. இதனையடுத்து அன்றிரவு முழுக்க சிறுமியின் பெற்றோரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் அவளை தேடியுள்ளனர். மீண்டும் தொடர்ச்சியாக 2 நாட்கள் பல குழுக்களாக தேடுதல் நடத்தியுள்ளனர். ஆனால் சிறுமி கிடைக்காததால் மாவட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஆனால் பொலிஸார் அந்த புகாரை சரியாக விசாரிக்கவில்லை.இருந்தும் குஜார் இன மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் தனியான பொலிஸ் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவும் மெத்தனப் போக்கை கடைப்பிடித்தது. ஏனெனில் இந்த வன்புணர்வு கொலையின் குற்றவாளிகளுள் ஒருவன் பொலிஸ் குழுவிலேயே இருந்ததால் இது திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாடுமேய்க்கச் சென்ற அயலவர்களால் ஆஷிபாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆடை கிழிந்த நிலையிலும். சாறுபிழியப்பட்டு, கசக்கி எறியப்பட்ட ஒரு தேவதை போல அவள் காட்டுப்குதியில் இருந்து மீட்கப்பட்டாள்.
ஆசிபாவை கடத்திச் சென்றவர்கள் அவளை ஒரு கோவிலின் உள்ளறையில் அடைத்து வைத்து தூக்க அல்லது போதை மாத்திரைகளை அளவுக்கதிமாக கொடுத்துள்ளனர். அத்துடன் அந்தச் சின்னஞ் சிறுமொட்டை, 4 நாட்களாக பலர் மாறிமாறி கூட்டு வன்புணர்வு செய்திருக்கின்றனர். அவளது உடலை பலமாக தாக்கியும், நகங்களால் கீறியும் உள்ளனர்.
பிஞ்சு உடலில் 80 இற்கு மேற்பட்ட காயங்கள் இருந்துள்ளன. கடைசித் தருணத்தில் அவள் கிட்டத்தட்ட இறந்து விட்ட நிலையிலும் அவளை ஒரு மனித மிருகம் வன்புணர்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவளை கடத்தியதற்கான காரணம், ஒரு புனித தலத்தில் அடைத்து வைத்தது, அதற்கு ஒருகோவில் நிர்வாகிதுணை புரிந்தமை, பொலிஸ் அதிகாரியும் இதனுடன் சம்பந்தப்பட்டிருந்தமை, அதை மூடிமறைக்க முற்பட்டமை, கொடூரமாக கூட்டு வன்புணர்வு செய்து, அகோரமாக கொலை செய்தமை என, கற்புக்காக கண்ணகி மதுரையை எரித்த பாரத தேசத்தின்; வெட்கக்கேடான பல சங்கதிகளும் மாதங்கள் கழித்து இப்போதுதான் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அரசியலாக்க முயற்சி
சஞ்சிவ் ராம் என்ற கோவில் அறக்கட்டளையாளர், தீபக் கஜூரி என்ற பொலிஸ் காரர் உள்ளிட்ட 4 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுரேந்திர வர்மா, ஆனந்த், உள்ளடங்கலாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் இரு சிறுவர்களும் உள்ளனர்.
ஆஷிபாவை கடத்தியத்தற்கான நோக்கம் அவர்கள் சார்ந்த முஸ்லிம் நாடோடி சமூகத்தின் மீதான வெறுப்புணர்வே காரணம் என்று கூறப்படுகின்றது. இல்லையில்லை, இதில் அந்த கோவில் அறக்கட்டளை உறுப்பினர் சம்மந்தப்பட்டிருப்பதாலும் வேறு காரணங்களின் அடிப்படையிலும் இச்சிறுமி பலியல் தேவைக்காகவே கடத்தப்பட்டிருக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.
எவ்வாறிருப்பினும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட வேளையில் சந்தேகநபர்கள், நாங்களே இதைச் செய்தோம் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம் என்று பகிரங்கமாக கூறியிருக்கின்றனர்.
ஆஷிபாவுக்காக இன்று இந்தியாவில் உள்ள அனைத்து இன மக்களும் உள்ளடங்கலாக உலகெங்கும் பல மில்லியன் கணக்கானோர் நீதியை நிலைநாட்டச் சொல்லி குரல் கொடுத்து வருகின்றனர். அதற்கிடையில், இதை அரசியலாக்க ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. அதாவது, இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். முற்றும் இந்துத்துவா அமைப்பினர் வீதிகளில் இறங்கி தேச பக்தர்கள் போல போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை தேச வீரர்கள் போல காண்பித்து, விடுதலை செய்யக் கோருகின்றனர். இதைப் பார்த்தால் இப்படி ஒரு சிறுமிக்கு நடந்ததை பாரத மாதாவின் புதல்வர்கள் சரிகாண்பது போலுள்ளது.
எது எவ்வாறாயினும் ஆஷிபா விவகாரம்; முக்கியமானது. இங்கு பாலியல் பற்றியோ வாழ்க்கை பற்றியோ எந்தப் புரிதலும் அற்ற ஒரு சிறுமிக்கு நடந்த அநியாயத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
ஆஷிபா என்ற நமது சகோதரி, மகள் கடத்தப்பட்டிருக்கின்றாள், கும்பிடச் செல்கின்ற புனித தலமான ஒரு கோவிலுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றாள், 4 நாட்கள் 5 இற்கு மேற்பட்டோரால் கூட்டு வன்புணர்வு செய்ய்பபட்டிருக்கின்றாள், அவள் தாக்கப்பட்டிருக்கின்றாள், கோவில் அறக்கட்டளையாளரும் பொலிஸ் அதிகாரியும் இதில் பங்கெடுத்திருக்கின்றனர். கடைசியில் அவள் தாக்கப்பட்டும் போதை அல்லது மயக்க மாத்திரையின் தாக்கத்தாலும் உயிரிழக்கச் செய்யப்பட்டிருக்கின்றாள். இதுவெல்லாம் கோவிலுக்குள் நடந்திருக்கின்றது என்பது என்னவோ போலுள்ளது.
எனவே, இங்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நரேந்திர மோடி அரசாங்கம் அரசியல் காரணங்களுக்காக ஒரு அப்பாவி முஸ்லிம் சிறுமிக்கு நடந்த அநியாயத்தை மூடிமறைக்கக் கூடாது. இந்தியாவில் மட்டுமல்ல இலங்கை போன்ற ஏனைய நாடுகளிலும் இதுபோன்ற வெறுக்கத்தக்க, அருவெறுப்பான குற்றங்களுக்கு நலம் அடித்தலுக்கு ஒப்பான, கடுமையான தண்டனைகள் அமுல்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது.
ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரிக்காக எழுதப்பட்டது)
ஆஷிபா வன்புணர்வு: இந்தியாவின் வெட்கம்.
Reviewed by nafees
on
22:06
Rating:
Reviewed by nafees
on
22:06
Rating:
No comments: