கொழும்பில் சூடு பிடித்துள்ள அரசியல் களம்.


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, மீதான விவாதம் நாடாளுமன்றத்தில்
புதன்கிழமை (04) காலை 9:30க்கு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

இந்நிலையில், இன்று திங்கட்கிழமையும், நாளை செவ்வாய்க்கிழமையும் கொழும்பு அரசியல் சூடுபிடித்திருப்பதுடன் முக்கியமான தீர்மானங்கள் சில எட்டப்படலாமென அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த இரண்டு நாட்களிலும், முக்கியமான சந்திப்புகள் பல இடம்பெறவுள்ளன. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முறியடிக்கும் நோக்கிலும், அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு திரட்டும் நோக்கிலுமே இந்தச் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன என கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவித்தன.

அதற்காக, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், கொழும்பில் முகாமிட்டுள்ளனர். இதேவேளை, தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கின்ற, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை, எதிர்வரும் 3ஆம் திகதிக்கு முன்னர் நாடுதிரும்புமாறு அந்தந்தக் கட்சிகள் அறிவுறுத்தியிருந்தன.

அறிவுறுத்தலின் பிரகாரம், ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டு, சீனாவுக்கு சென்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் இன்று (02) நாடுதிரும்பவுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும், இன்றையதினம் நாடுதிரும்பவுள்ளரென அறியமுடிகின்றது. ஏனையோர், புதன்கிழமை காலையிலேயே நாடுதிரும்ப உள்ளனரென அறியமுடிகின்றது.

இவ்வாறான நிலையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பின்வரிசை உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும், அதன் தொடர் பேச்சுகள் இன்றும், நாளையும் நீடிக்கக்கூடுமெனவும் அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரதமருக்க எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக, தீர்மானம் எடுப்பதற்காக, அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில், நாளை (03) செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை நடத்தவுள்ளது. 

இந்தக் கூட்டத்தை இன்று (02) நடத்துவதற்கே, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், சிகிச்சைகளை முடித்துகொண்டு, நேற்று முன்தினம் (31) நாடு திரும்பினார். இதனாலேயே, அந்தக் கூட்டம் நாளைக்கு (03) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இது இவ்வாறிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்றையதினம் இடம்பெறக் கூடுமென, நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், நேற்று (01) நடைபெறவிருந்த விசேட சந்திப்பு, திடீரென ஒத்திவைக்கப்பட்டது. 

அந்தக் கூட்டத்தை இன்று (02) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதென, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியன்று நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றியீட்டி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கு, அமைச்சர் ரவூப் ஹக்கீம் சென்றுவிட்டமையால், நேற்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அந்தத் தகவல் தெரிவிக்கின்றது. 

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர், முஸ்லிம் காங்கிரஸுடனான சந்திப்பு தனியாக நடைபெறுமென, காங்கிரஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் கையளிக்கப்பட்டுள்ள, நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கலந்துரையாடப்படும் என அந்தக் தகவல் ​மேலும் தெரிவித்தது. 

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டமும், அலரிமாளிகையில் இன்று (02) நடைபெறவுள்ளது. மு.கா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியனவற்றுடனான சந்திப்புகளின் பின்னர், ஐக்கிய தேசியக் முன்னணியின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது.
கொழும்பில் சூடு பிடித்துள்ள அரசியல் களம். கொழும்பில் சூடு பிடித்துள்ள அரசியல் களம். Reviewed by nafees on 18:16 Rating: 5

No comments:

Powered by Blogger.