கோறளைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி பிரதேச சபை - தவிசாளர் தெரிவின் பின் முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர்கள் தமக்குள் அடிபிடி!

கோறளைப் பற்று மேற்கு - ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர், உப தவிசாளர் தெரிவு முடிவடைந்த பின்னர்
முஸ்லிம் காங்கிரஸ் அணியினர் தமக்குள் ஒருவரை ஒருவர் தாக்கிச் சண்டையிட்டுக் கொண்டனர்.
நேற்றுப் பிற்பகல் 2.30க்கு இடம் பெற்ற தவிசாளர், உபதவிசாளர் தெரிவின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற அமிஸ்டீன் (அஸ்மி) தவிசாளராகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வெற்றி பெற்ற அகமது பிரதித் தவிசாளராகவும் தெரிவாகினர். சபை நிகழ்வு முடிவடைந்ததும் வெளியேறிய மு.கா. அங்கத்தவர்களை மு.கா அணியினர் தாக்கத் தொடங்கினர்.
தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் உரியவேளை நியமனப் பத்திரம் தாக்கல் செய்யத் தவறிய காரணத்தால் அவ்வணியினர் சுயேட்சையாகக் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர். அவர்களுக்கு ஒட்டகச் சின்னம் வழங்கப்பட்டது. தேர்தலில் 5 ஆசனங்களைக் கைப்பற்றிய இவ்வணிக்கு 3 போனஸ் ஆசனங்கள் கிடைத்தன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்களில் ஐவர் தெரிவாகினர். இரண்டு போனஸ் ஆசனங்களும் கிடைக்கப் பெற்றிருந்தன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அணி ஒரு ஆசனத்தை அதிகம் பெற்றிருந்த காரணத்தால் ஆட்சியமைக்கும் தகுதியைப் பெற்றிருந்தது. ஆனால் தனக்குத்தான் தவிசாளர் பதவி தரவேண்டும் என்று அவர்கள் மூன்று அணிகளாப் பிரிந்து இறுதி நேரம் வரை ஒன்றுபட முடியாத நிலையில் இருந்து வந்தனர்.
ஒட்டக அணியின் சார்பில் தேர்தலில் கேட்டுத் தோற்றவரும் போனஸ் ஆசனத்தில் வந்தவருமான நபர் தன்னையே தவிசாளராக நியமிக்க வேண்டும் என்று வலுவாகக் கோரி வந்த நிலையில் அதே அணிக்குள் அவரை எதிர்த்த மூவரைத் தாக்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
இவர்களது பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்ட அஇமகா அணி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக் கட்சி ஆகிய சார்பில் தேர்தலில் வென்ற தலா ஒருவரையும் தம்முடன் இணைத்துக் கொண்டு சபையைக் கைப்பற்றியது. இதன்படி அஇமகா சார்பில் தவிசாளராக அமிஸ்டீனும் (அஸ்மி) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அகமது பிரதித் தவிசாளராகவும் தெரிவாகினர்.
முஸ்லிம் காங்கிரஸ் போனஸ் ஆசனத்தில் அனுப்பப்பட்டவரும் தன்னையே தவிசாளராக்க வேண்டும் என்று கோரியவருமான அங்கத்தவரின் (ஒரே கட்சியைச் சேர்ந்த) ஆதரவாளர்கள் அதே கட்சியைச் சேர்ந்த அங்கத்தவர்களான பதுறுத்தீன், அஸீஸ் ஆகியோரைச் சபை நடவடிக்கை முடிந்து வரும்போது தாக்கியதால் அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கு வைக்கப்பட்ட மற்றொரு நபரான அன்வர் என்பவர் அமைச்சர் அமீர் அலியின் வாகனத்தில் பத்திரமாக அமைச்சரின் வீட்டுக்குப் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
(கல்குடா செய்தியாளர்)
கோறளைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி பிரதேச சபை - தவிசாளர் தெரிவின் பின் முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர்கள் தமக்குள் அடிபிடி!
Reviewed by nafees
on
02:27
Rating:
Reviewed by nafees
on
02:27
Rating:
No comments: