நீறுபூத்த நெருப்பாக அமிழ்ந்து எரியும் எரிதழல்: இனவாதம்
ஆங்கிலத்தில்: ஜயதிலக டிசில்வா (டெய்லி நியூஸ்)
தமிழில்: ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்
அவசரகால நிலைமை நீக்கப்பட்டுள்ளது மக்களின் இயல்பு வாழ்க்கை மீளத் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டின் பிரஜைகள் சாவகாசமாகவும் நிதானமாகவும் தத்தமது அன்றாட அலுவல்களில் ஈடுபடும் காட்சிகளும் காணொளிகளும் இலத்திரனியல் ஊடகங்களில் காண்பிக்கப்படுகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அமைதியான சுபிட்சமான எதிர்காலத்திற்கும் சான்று பகர இக்காட்சிகளும் காணொளிகளும் போதுமானதாகி விடுமா?
மக்கள் தத்தமது உள்ளக்கிடக்கையில் ஏந்தியுள்ள அச்ச உணர்வுகள், அழுத்தங்கள், மன உளைச்சல்கள், கிட்டிய எதிர்காலம் தொடர்பில் கொண்டுள்ள நம்பிக்கையீனங்கள் என்பவற்றை இவை வெளிக்காட்டிடுமா?
ஒருபோதும் இல்லை, 2018 மார்ச் வன்முறைக்கு முன்னிருந்த சூழ்நிலையை மீளக் கொண்டு வருதல் என்பதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தியாயிற்று என எண்ணிவிட முடியாது. முன்னிருந்த சூழ்நிலையில்தான், வெறுக்கத்தக்க இரு சம்பவங்களை வன்முறைக்கு தூபமிடும் காரணிகளாகக் கொண்டு அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம் சமூகத்தினர் மீது கொடூர தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவதில் இனவாதிகள் வெற்றி கண்டனர்.
கின்தொட்ட வன்முறைக்கு முன்னிருந்த சூழ்நிலையைக் கூட இயல்பு நிலை என வர்ணித்து விட முடியாது. செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளினது செல்லக் குழந்தையாக இருந்தவாறு, அவர்களின் பேராதரவின் பேரில் பொதுபல சேனா முக்கிய வகிபாகம் ஒன்றை ஆற்றிய அளுத்கமை வன்முறைகள் தொட்டு தொட்டதும் வெடிக்கும் வண்ணம் களம் சூடாகவே அமைந்து கொண்டிருக்கிறது.
இதன் பிரகாரம் சூழ்நிலை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என அறியும் அதேவேளை, எப்போது வேண்டுமானாலும் அபாயங்கள் ஆட்கொள்ளலாம் எனும் நிலையிலேயே களம் அமைந்துள்ளதுஎன்பதை நன்குணர்ந்து கொள்ள வேண்டும். இனவாத தீ இன்னும் நீறுபூத்த நெருப்பாகவே அமிழ்ந்து, எரிதழலாய் எரிந்து கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம்.
அண்மைக் காலங்களில் பெரும்பான்மை ஊடகங்களில் வெளிவரும் கட்டுரைகளை உற்று நோக்குமிடத்து,சிறுபான்மையினர் மீதான பெரும்பான்மையினத்தவர்களின் குரோதம், வன்மம் என்பவற்றுக்கு போலி நியாயம் கற்பித்து வருவதனை பொதுவாகவும், கண்டி வன்முறை தொடர்பில் அடிப்படையற்ற நியாயப்படுத்தல்களை வலிந்து திணிக்க முயல்வதை குறிப்பாகவும் கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது.
இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்கள் பாரிய சலுகைகளை அனுபவிக்கும் சமூகமாகவும், சிங்கள சமூகத்தினர் பொறாமை கொள்ளக் கூடியளவு சொத்து செல்வங்களின் சொந்தக்காரர்களாக முஸ்லிம்கள் திகழ்வதாகவும் கூறப்பட்டு வருகின்றது.
எனினும், இது உண்மைக்குப் புறம்பானதாகும். சொத்து செல்வத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கும் முஸ்லிம்கள் இருக்கவே செய்கின்றனர் எனினும், பெரும்பான்மையான இலங்கை முஸ்லிம்கள் வறியவர்களாகவும் பின்தங்கிய நிலைமையிலுமே காணப்படுகின்றனர் என்பதே உண்மை நிலைவரமாகும்.
முஸ்லிம் சமூகத்தின் அதிகரித்த பிறப்பு விகிதம் தொடர்பில் பாரிய அமளிதுமளிகள் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் பேசுபொருளாக மாறி வருகின்றன. கிட்டிய எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தினரின் சனத்தொகை சிங்கள சமூகத்தினரை விட அதிகரித்து விடும் என கூறப்படுகிறது. உண்மை அதுவல்ல, புள்ளிவிபரங்கள் எதிர்மாறாகவே எடுத்துரைக்கின்றன.
சிங்கள சமூகத்துடன் ஒப்பிடுகையில் முஸ்லிம் சமூகத்தினர் அதிகரித்த பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளனர் எனினும், ஒவ்வொரு 10 முஸ்லிம்களுக்கும் 75 சிங்களவர்கள் இருக்கின்றனர்.
எனவே, கிட்டிய எதிர்காலத்தில் முஸ்லிம்களின் சனத்தொகை சிங்களவர்களின் சனத்தொகையை விஞ்சி விடும் என்பது சாத்தியமற்றதொன்றாகும். அத்துடன் உயர் பிறப்பு விகிதம் என்பது அபிவிருத்தியின்மையின் அறிகுறியாகும்.
பல தசாப்தங்களுக்கு முன்னர் சிங்கள சமூகத்திலும் உயர் பிறப்பு விகிதம் காணப்பட்டது. பிற்காலத்தில் சிங்கள சமூகத்தில் பெண்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியதன் பிற்பாடு சிங்கள சமூகத்தில் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடையத் தொடங்கியது.
அண்மைக் காலத்தில் முஸ்லிம் சமூகத்தினரும் கற்கும் சமூகமாக மாறி வருவதால் அவர்களது சமூகத்தில் நிலவும் அதிகரித்த பிறப்பு விகிதமும் எதிர்காலத்தில் சீரான நிலைமைக்கு வரக் கூடும். மத நம்பிக்கைகளுக்கு அப்பால் பொருளாதார நெருக்கடிகள் பிறப்பு விகிதம் தொடர்பில் எதிர்காலத்தில் பாரிய தாக்கங்களை செலுத்தும் என நாம் நம்புகிறோம்.
அத்துடன், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இலங்கையின் பிறப்பு விகிதம் வருடாந்தம் வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கிறது.
புத்திஜீவிகள் உட்பட அதிகமான பெரும்பான்மையினர் அம்பாறை, திகன வன்முறைகளை ‘இன கலவரம்’ என்றே வர்ணிக்கின்றனர். அது முற்றிலும் தவறான வார்த்தைப் பிரயோகமாகும். இங்கே இருபக்கத் தரப்பும் பரஸ்பரம் மோதல்களில் ஈடுபட்டிருக்கவில்லை. மாறாக, குறித்த ஒரு சமூகத்தினரே மற்றைய சமூகத்தினர் மீது தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர்.
தங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை எதிர்த்துத் தாக்குதல் நிகழ்த்தாத, நிராயுதபாணிகளான முஸ்லிம்கள் மீதே சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் வலிந்து தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். எனவே, இந்த அட்டூழியங்களை ‘இன கலவரம்’ எனும் பதத்தினால் அடையாளப்படுத்துவது சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளின் அட்டகாசங்களை இழிவளவாக்கும் முயற்சி என்றே கூறத் தோன்றுகிறது.
முஸ்லிம் சமூகத்தில் நிலவும் அடிப்படைவாதம் தொடர்பிலும் வாதவிவாதங்கள் ஆங்காங்கே நிலவுகின்றன. ஆரம்பத்தில் இவை பொதுபலசேனா துவக்கி வைத்திருந்தது எனினும், தற்போது பலர் இது பற்றி பேசத் தொடங்கியுள்ளனர்.
முஸ்லிம் சமூகத்தின் மீதான அடுத்தடுத்த இனவாத தாக்குதல்களின்போதும் முஸ்லிம் சமூகத்தினர் தொடர்ந்தும் மௌனம் காப்பதானது இலங்கை முஸ்லிம் சமூகத்தில் அடிப்படைவாதம் இல்லை என்பதனை சான்று பகர்கிறது.
எனினும், இலங்கை முஸ்லிம் சமூகத்தில் தீவிரப்போக்குடைய முஸ்லிம் தனிநபர்கள் அறவே இல்லை என ஒட்டுமொத்தமாக மறுத்து விடவும் முடியாது. பொதுபலசேனா உட்பட சில பெரும்பான்மை அமைப்புக்கள் வஹ்ஹாபிஸத்தை தீவிரப்போக்காக அடையாளம் கண்டுவருகின்றன.
எனினும், முஸ்லிம்களுக்கு எதிராக உட்பிரிவு மத விடயங்களில் ஈடுபட்டு வரும் வஹ்ஹாபிகள் மிக சொற்ப அளவினரே ஆவர்.
அத்துடன் அவ்வாறான வஹ்ஹாபிகள் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக அரசியல் ரீதியில் எதிர்த்துப் போராடக் கூடியவர்களாகவும் இல்லை; அத்துடன் எந்தவோர் அரசியல் கட்சிகளும் வஹ்ஹாபிஸத்தை போஷிப்பதாகவும் இல்லை.
முஸ்லிம் சமூகத்தின் மீதான பெரும்பான்மையினரின் அடாவடித்தனங்கள் வீரியம் குறையாது இது போலவே தொடருமாயின், வஹ்ஹாபிகள் போராடும் அரசியல் சக்தியாக எதிர்காலங்களில் உருவெடுக்கவும் கூடும்.
தெற்காசியா உட்பட உலகளாவிய ரீதியில் கோரத்தாண்டவமாடும் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களின் நிலவுகையின் முகாந்திரத்தில் பேசுவோமாயின், இலங்கை முஸ்லிம்கள் மீதான இத்தொடர் தாக்குதல் தீவிரமடையும் பட்சத்தில் அவ்வாறான அடிப்படைவாத குழுக்கள் இலங்கையிலும் நுழையுமாயின் விளைவுகள் படுபயங்கரமானதாக அமையும்; சிரியா, ஈராக்கில் நிகழ்ந்தவை போன்று எமது நாடும் உலக ஆதிக்க சக்திகளின் போர்க்களமாக மாறக்கூடும்.
இவ்வாறான பிரளயங்கள் எமது நாட்டை அண்டாத வண்ணம் பாதுகாக்க வேண்டுமாயின், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு ஆதிக்க சக்திகள் எமது உள்நாட்டு விவகாரங்களுக்குள் தலையீடு செய்யாத வகையில் எமது நாட்டின் தேசிய ஐக்கியத்தை அதிகரித்து, அரணாக அமைத்துக் கொள்வதே சிறந்த தீர்வாக அமையும். இதனடிப்படையில், இன மத ரீதியில் பிரிவினையை உண்டுபண்ணக் கூடிய அரசியல்வாதிகளே துரோகிகளாக அடையாளம் காணப்படுகின்றனர்.
தீவிரப்போக்குடைய பெரும்பான்மை சமூக குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய இனவாத தாக்குதலின்போது மகா சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பெரும்பான்மையான சிங்களவர்கள் களத்திற்கு நேரடியாக விஜயம் செய்து முஸ்லிம் சகோதரர்களை, மஸ்ஜித்களை பாதுகாத்துள்ளமை ஈண்டு குறித்துக் கூற வேண்டிய, வரவேற்கத்தக்க விடயமாகும்.
ஒப்பீட்டு ரீதியில் குறித்த ஒரு சில குழுக்களை தவிர்த்து பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் இனவாதம் வெறுக்கத்தக்க ஒரு விடயமாகவே நோக்கப்படுகிறது என்பது திண்ணம்.
இனவாத கருத்துக்கள், மத வெறுப்பு பேச்சுக்கள் இனவாதிகளினால் திட்டமிட்ட ரீதியில் பரப்பப்பட்டு வருகின்றன. சாமான்ய சிங்கள பௌத்த மக்கள் இவர்களின் கெடு நோக்கிற்கு வெகு இலகுவில் சோடை போய் விடுகின்றனர்.
இதனை நிவர்த்திக்கும் பொருட்டு சாமான்ய மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதோடு பாரிய சமூக கட்டமைப்பு மாற்றங்களையும் இச்சவால் வேண்டி நிற்கின்றது. உதாரணமாக, எதிர்காலங்களில் மத அடிப்படையிலான பாடசாலைகள், குடியிருப்புக்கள் போன்ற கட்டமைப்புக்கள் சமூகத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
இன, மத அடிப்படையிலான அரசியற் கட்சிகளும் சமூகத்திற்கு நஞ்சை விதைப்பனவாக அமைகின்றன. மதம் மற்றும் நாடு என்பவற்றின் ஆட்சிப் பரப்பு ஒன்றையொன்று மீறாதிருக்க வேண்டும். அதேநேரம் குறித்த மதத்தை பின்பற்றும் உரிமைகள், நடைமுறைப்படுத்தும் உரிமைகள் போன்ற மத சுதந்திரங்கள் உத்தரவாதப்படுத்தப்படுவதுடன் மதிப்பளிக்கப்பட வேண்டும்.
‘தேசிய ஐக்கிய தினம்’ ஒன்றை பிரகடனப்படுத்தி உரிய முறையில் அனுஷ்டிக்கப்பட வேண்டியதும் அரசு மத நல்லிணக்கம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய காத்திரமான பணிகளுள் ஒன்றாகும். பல்லின மக்கள் கலந்து வாழும் பிரதேசங்கள், குடியிருப்புகளில் அனைத்து மத உறுப்பினர்களையும் கொண்ட குழுமம் உருவாக்கப்பட்டு கலந்துரையாடல்கள் கிரமமாக இடம்பெற ஆவன செய்வதும் திகன வன்முறை போன்ற அசம்பாவிதங்கள் எதிர்காலங்களில் இடம்பெறாத வண்ணம் தடுக்கும் முற்காப்பு நடவடிக்கையாக அமையும்.
அளுத்கமை மற்றும் கின்தொட்ட வன்முறைகள் தொடர்பில் எந்தவொரு நபரும் இதுவரை சட்ட ரீதியில் தண்டிக்கப்படவில்லை.
அரசாங்கமும் சட்ட, ஒழுங்கு பொறிமுறையும் இனவாத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது தொடர்பில் பரிதாபத்துக்குரிய முறையில் தோல்வியடைந்துள்ளன என்றே கூற வேண்டும்.
இதனால் தண்டனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் இனவாதிகள் எழுச்சி பெற்றுள்ளனர் என்பதே நிதர்சனம். சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் எனும் சமத்துவக் கோட்பாடு வெறும் ஏட்டில் உள்ளபடி என்றவாறு எழுத்துக்களில் முடங்கிப் போயுள்ளன. இவ்வகையான நிலைமைகள் எப்போது மாறுமோ அப்போதுதான் இயல்பு நிலை மீளத் திரும்பியுள்ளது என துணிந்து கூறலாம்.
நாட்டை நேசிப்பவர்கள் நாட்டுப் பற்றாளர்கள்; நாட்டை நேசிக்காதவர்கள் துரோகிகள் என்றவாறு நாட்டின் ஒட்டுமொத்த பிரஜைகளையும் இரு பிரிவினுள் உள்ளடக்க முடியும். நாட்டை மனதார நேசிப்பவர்கள் நாட்டில் சகவாழ்வை கட்டியெழுப்ப எத்தனிப்பர்; சட்டம், ஒழுங்கை மதித்து நடப்பர்.
அவர்கள் நாட்டின் சொத்துக்களை தீக்கிரையாக்க மாட்டார்கள். அவர்கள் இலஞ்சம், ஊழல்களின் புகலிடமாக விளங்க மாட்டார்கள். அவர்கள் இன, மத ரீதியில் பிரிவினைகளை உருவாக்கி நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி அதில் குளிர்காய மாட்டார்கள்.
தமிழில்: ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்
நன்றி: எங்கள் தேசம்
நீறுபூத்த நெருப்பாக அமிழ்ந்து எரியும் எரிதழல்: இனவாதம்
Reviewed by nafees
on
07:37
Rating:
Reviewed by nafees
on
07:37
Rating:

No comments: