'காணி தினத்தில்' கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் : இஸ்ரேலின் கொலைக் களியாட்டத்தை கண்டும் காணாமல் இருக்கும் உலகம்.

-லத்தீக் பாரூக் -
2018 மார்ச் 30ல் பெரிய வெள்ளி தினத்தன்று அமைதியான முறையில் 'காணி தினம'; அனுஷ்டித்த
பலஸ்தீனர்களுள் 17 பேரை கொலை செய்து அன்றைய தினத்தை கறுப்பு வெள்ளி தினமாக மாற்றி உள்ளது இஸ்ரேல்.
காணி தினத்தில் அமைதியான முறையில் நிராயுதபாணிகளாக தமது உரிமைகளுக்காக ஊர்வலம் சென்ற பலஸ்தீனர்களே கொல்லப்பட்டுள்ளனர்.
பலஸ்தீன அகதிகள் மீண்டும் தமது சொந்தக் காணிகளில் வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருடாந்தம் இந்த காணி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்வருடமும் வழமையான முறையில் 42வது வருடமாக இஸ்ரேல் - காஸா எல்லையில் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்ற இந்த ஊர்வவத்தின் மீது இஸ்ரேல் படைகள் கட்டவிழத்து விட்ட அட்டூழியங்கள் காரணமாக 17 பேர் கொல்லப்பட்;டதோடு மட்டும் அன்றி மேலும் 1500க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
ஜீவ ரவைகள், றப்பர் உறை போடப்பட்ட உலோக ரவைகள், கண்ணிர் புகைக் குண்டுகள் என பல்வேறு விதமான ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. இஸ்ரேலின் பலத்த பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி அவர்கள் வருவதைத் தடுக்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் சட்ட விரோத முற்றுகைக்கு ஆளாக்கப்பட்டுள்ள காஸா பள்ளத்தாக்கு பகுதியை நோக்கிச் சென்ற ஆயிரக்கணக்கான பலஸ்தீன மக்கள் மீதே இந்த அடாவடித்தனம் புரியப்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இஸ்ரேல் எல்லையை நெருங்குவதற்கு பல நூறு மீட்டர் தூரம் அப்பால் இருந்த போதே இஸ்ரேலின் குறிவைத்து தாக்கும் பிரிவு (ஸ்னைபர்) அவர்களை சுடத் தொடங்கியது.
இது ஒரு திரைப்படம் அல்ல. இது மக்கள் வாழும் காஸா பகுதி. அது பலஸ்தீனர்களின் பாரம்பரிய தாயக பூமி. தாங்கள் இழந்த அந்த தாயகத்தை மீட்டு எடுக்க பலஸ்தீன மக்கள் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக எல்லா வகையிலும் உரிமைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் சாசனங்களின் கீழ் அவர்களுக்கு அதற்கான உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு பின் வழமைபோல் பொறுமை காக்குமாறு உலகம் வேண்டுகோள் விடுத்ததே தவிர இஸ்ரேலை கண்டிக்கும் துணிவு எவருக்கும் இருக்கவில்லை. கடந்த நூற்றாண்டு முழுவதும் இதுதான் நடந்து கொண்டு இருக்கின்றது. பலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் இழைத்து வரும் குற்றங்களுக்கு எதிராக அவர்களை சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்த எந்த ஒரு திட்டமும் உலக நாடுகளிடம் இல்லை.
மத்திய கிழக்கின் மத்தியில் இஸ்ரேல் என்ற நச்சு விதையை நட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்கள் அப்பட்டமாக அந்த நாட்டால் மீறப்பட்டு வருகின்ற நிலையில் ஐக்கிய நாடுகள் சபை எங்கே இருக்கின்றது? எதற்காக இருக்கின்றது? என்ன செய்து கொண்டிருக்கின்றது? என்ற கேள்விகளைத் தான் எழுப்ப வேண்டி உள்ளது. இஸ்ரேலின் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக அது தயாரித்த அறிக்கைகளின் அடிப்படையில் கூட அதனால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் ஐக்கிய நாடுகள் சபை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அரபு நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் குவைத் ஒரு கூற்றை முன்மொழிந்தது. பலஸ்தீனத்தின் நிலைமைகள் தொடர்பாக ஆழ்ந்த அக்கறையும் கவலையும் செலுத்தும் வகையில் அமைந்திருந்த அந்தக் கூற்றில் இந்தக் கொலைகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற வெளிப்படையான சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இஸ்ரேலின் கொலைகளுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச் சபை சரியான, முறையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறி வருவதாக பாதுகாப்புச் சபையின் குவைத் பிரதிநிதி மன்சூர் அல் ஒதைபி சாடினார்.
ஆனால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பலஸ்தீனர்களின் இரத்தம் காய்வதற்கு முன்பே, அவர்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பே அந்த அறிக்கையை பாதுகாப்புச் சபையில் தாக்கல் செய்ய விடாமல் தடுத்து நிறுத்துமாறு சுவிஷேச கிறிஸ்தவ யூதர்களின் வெறி கொண்ட முகவரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது பிரதிநிதிக்கு உத்தரவிட்டார். இந்த அறிக்கை சபைக்கு வந்த போது அமெரிக்காவைப் பின்பற்றி ஏனைய உலக வல்லரசுகளான பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் முழுமையாக மௌனம் காத்தன.
தற்போது மத்திய கிழக்கில் அரங்கேற்றப்பட்டு வரும் அரசியல் நாடகங்கள் இன்று நேற்று உருவாக்கப்பட்டவை அல்ல. சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு முன் ஐரோப்பிய சக்திகளால் வடிவமைக்கப்பட்ட திட்டங்களின் பிரதிபலிப்பை தான் இன்று அந்த நாடுகள் அனுபவிக்கின்றன. அன்று ஐரோப்பிய சக்திகளால் திட்டமிட்டு ஆட்சியில் அமர வைக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளின் கைக்கூலி மன்னர்களும் ஷேக்குகளும் ஐரோப்பிய சக்திகள் எதிர்ப்பாத்தபடி இன்று பலஸ்தீன மக்களை கைவிட்டு விட்டனர். இன்று இந்த அரபுலக மன்னர்கள் தமது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய எஜமானர்களின் சேவகர்களாக மாறியுள்ளனர்.
மத்திய கிழக்கு முழுவதும் வாழும் மக்கள் தமது மன்னர்களின் அடிமை நிலையை மிகவும் ஆத்திரத்தோடும் கோபத்தோடும் அவதானித்துக் கொண்டு இருக்கின்றனர். அந்த மக்கள் மீது கொடுமையான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டு வருவதால் கொதித்து எழ முடியாத நிலையில் உள்ளனர்.
காணி தினம் என்பது என்ன?
பலஸ்தீன மக்களின் காணிகளை இஸ்ரேலிய அரசாங்கம் சூறையாடி கையகப்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 42 வருடங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய இஸ்ரேலில் வாழ்ந்த ஆறு பலஸ்தீன பிரஜைகளை இஸ்ரேலிய பொலிஸார் சுட்டுக் கொன்றனர். அன்று முதல் அந்தச் சம்பவம் இடம்பெற்ற மார்ச் மாதம் 30ம் திகதியை பலஸ்தீன மக்கள் காணி தினமாக அனுஷ்டித்து வருகின்றனர். பலஸ்தீன மக்களின வருடாந்த அரசியல் கலண்டரில் இது ஒரு முக்கிய தினமாக இடம்பிடித்தள்ளது. பலஸ்தீன ஒருங்கிணைந்த செயற்பாடுகளிலும் இது முக்கிய இடம் பிடித்துள்ளது. இஸ்ரேலின் காலணித்தவத்துக்கு எதிரான பலஸ்தீன மக்களின் போராட்டமாகவே இது பார்க்கப்படுகின்றது.
முன்னைய ஆண்டுகளைப் போலவே பலஸ்தீன மக்களின் போராட்ட வாழ்வில் இந்த ஆண்டும் இது முக்கிய இடம் பிடித்த ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது. பலஸ்தீன மக்களின் போராட்டத்துக்கு மேலதிகமாக இன்றைய காலப்பகுதியில் இஸ்ரேல் கைப்பற்றியப் பகுதிகளில் அது விஸ்தரித்து வரும் யூத காலணித்துவ குடியேற்ற திட்டம் ஒரு முக்கிய விடயமாக நோக்கப்பட்டு வருகின்ற நிலையில,; காணிகளை பறிகொடுத்த மக்களின் போராட்டம் வழமைக்கு மாறான உத்வேகத்தைக் கொண்டிருந்தது.
1948ல் பலஸ்தீன மக்களுள் சுமார் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் தமது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக, பயங்கரவாதத்தை பிரயோகித்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் விட்டுச் சென்ற காணிகளும் சொத்துக்களும் சட்ட விரோதமான முறைகளைப் பயன்படுத்தி இஸ்ரேலால் அபகரிக்கப்பட்டது.
எனவே பலஸ்தீனர்களின் காணி தினமானது ஒரு கடந்த கால நிகழ்வை மட்டும் குறித்து நிற்கவில்லை. அது இஸ்ரேலுக்கு எதிரான மேலதிக போராட்டத்துக்கான ஆக்கபூர்வமான வழிகளையும், வித்தியாசமான போராட்ட வழிமுறைகளையும் நாடி நிற்கின்றது.
2016ல் இஸ்ரேலின் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேற்பாளராக நின்ற யூத செனட்டரான பேர்னி சென்டர்ஸ் காஸா பள்ளத்தாக்கு பிரதேசத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் அட்டூழியங்களை வன்மையாகச் சாடினார். 'காஸா என்பது இப்போது அழிவுக்கு உரிய ஒரு உரிமையாகிவிட்டது. உலகம் காஸா பிரச்சினையை அங்கீகரித்து அதற்கு நியாயமான ஒரு தீர்வை வழங்க முன்வராவிட்டால் அங்கு ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தொடருவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்' என்று அவர் கூறினார்.
அங்குள்ள ஒட்டுமொத்த நிலைமையையும் விளக்கி பத்தி எழுத்தாளர் போல் ஆர் பில்லர் என்பவர் தனது கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாரிய எண்ணிக்கையிலான மக்கள் (750000 பேர்) 1948ல் இஸ்ரேலால் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு விட்டனர். அவர்கள் விட்டுச் சென்ற காணிகளும் ஏனைய சொத்தக்களும் சட்டவிரோதமான முறைகளைப் பயன்படுத்தி அபகரிக்கப்பட்டுள்ளன.
காஸா கொந்தளிக்கும் ஒரு திறந்த வெளி சிறைச்சாலை
காஸா எல்லையில் நடக்கின்ற சம்பவங்கள் பற்றி அதிகாரபூர்வமான விவரங்களையப் பெற்றுக் கொள்ளவும் இரு பக்கமும் சாராத உண்மையான தகவல்களை அறிந்து கொள்ளவும் மூன்றாம் தரப்பு விசாரணை ஒன்று பயன்மிக்கதாக இருக்கும். உலகில் உள்ள மிகவும் ஒழுக்கமான இராணுவம் தனது இராணுவம் தான் எனக் கூறும் இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு உண்மையிலேயே அதை நம்புவாரானால் அவர் இத்தகைய விசாரணை ஒன்றை வரவேற்க வேண்டும். ஆனால் அவரது அரசாங்கமோ தொடர்ந்து அவ்வாறான விசாரணைக்கு மறுப்பு தெரிவித்தே வருகின்றது.
காஸாவில் இடம்பெறும் கொடுமைகள் பற்றிய எல்லா தகவல்களையும் உலகுக்கு வெளியிட வேண்டும் என்பதில் டிரம்ப் நிர்வாகத்துக்கு கொஞ்சமாவது ஆர்வமோ அல்லது அக்கறையோ இருப்பின் இத்தகைய சுதந்திரமான விசாரணைக்கு வழிவிடக் கோரும் ஐக்கிய நாடுகள் தீர்மானத்துக்கு அமெரிக்கா வழியமைக்க வேண்டும். ஆனால் அவ்வாறான அறிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து தடுத்தே வருகின்றது.
காஸா எல்லையில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் பற்றிய விவரங்களை இஸ்ரேல் உள்ளுரில் மட்டும் அன்றி வெளி உலகப் பார்வையிலும் பட்டு விடாமல் மிகவும் சூட்சுமமான முறைகளைக் கையாண்டு தடுத்து வருகின்றது. தன்னால் வெற்றி கொள்ள முடியாத உலக அரங்கில் மிகவும் உயிரோட்டமாகப் புரையயோடிப் போயுள்ள ஒரு அரசியல் விவகாரத்தை இஸ்ரேல் மிக சாதுர்யமாக உலகப் பார்வையில் இருந்து மறைத்து வருகின்றது.
சொல்லொணா பரிதாபத்துக்கு ஆளாகியுள்ள சுமார் இருபது லட்சம் மக்கள் தங்கள் இருப்பை இழக்க முடியாது. நம்பிக்கையற்ற வாழ்வை வாழ்ந்து கொண்டு தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை விட இறப்பது மேல் என சில இளைஞர்கள் கூறியுள்ளமை அவர்களின் விரக்தியின் உச்ச கட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. சிலர் ஹமாஸ் இயக்கத்தின் மீதும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இருப்பினும் ஆயிரக்கணக்கான மக்கள் ஹமாஸை அன்றி இஸ்ரேலை நோக்கியே தமது வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களைப் பொருத்தமட்டில் இது ஹமாஸின் பிரச்சினை அல்ல. ஒருவேளை ஹமாஸ் இயக்கம் மக்கள் மத்தியில் இருந்து தூக்கி எறியப்படுமானால் நாளை அதை விட காத்;திரமான போராட்டக் குழு ஒன்று உதயமாகக் கூடும்.
காஸா மக்கள் என்பது சமன்பாட்டுக்காகப் பாவிக்கப்படும் ஒரு சொல் அல்ல. அவர்களும் வலியும் வேதனையும் அபிலாஷைகளும் உள்ள மக்கள் இனமே. அவர்களை ஒதுக்கி விட முடியாது.
'சர்வதேச சமூகம் வரலாற்றின் சரியான பக்கத்தை தெரிவு செய்ய வேண்டும் என்பதையே காணி தினத்தின் மூலம் பலஸ்தீன மக்கள் வலியுறுத்துகின்றனர்' என்று யாரா ஹவாரி என்ற பத்தி எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.
மேற்கு கரைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட காலணித்துவம், காஸாவில் ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் என்பனவற்றுக்கு எதிராக சர்வதேச சமூகம் சரியான பொறிமுறைகளைப் பிரயோகிக்கத் தவறி விட்டது. இஸ்ரேல் மீது சில தடைகளைக் கொண்டு வந்திருக்கலாம். இஸ்ரேலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த பலஸ்தீன அமைப்புக்கள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு பக்க பலமாக இருந்திருக்கலாம். ஆனால் இவை எதையும் செய்ய சர்வதேச சமூகம் தவறிவிட்டது. இஸ்ரேலின் காலணித்துவ விரிவாக்கத்துக்கு முன்னால் இன்று வரை சர்வதேச விற்பன்னர்கள் iயாலாகதவர்களாகவே இருந்து வருகின்றனர்.
இஸ்ரேலின் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு அதன் நேச அணிகள் இன்னும் ஆதரவாகவே இருந்து வருகின்றன. அதனால் அது தனது சட்டவிரோத காலணித்துவ விரிவாக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. மேற்கு கரைப் பிரதேசம் இன்று இறைமையற்ற ஒரு பலஸ்தீன பிரதேசமாகக் காணப்படுகின்றது. இங்கு வாழும் பலஸ்தீனர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையான இனவெறிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
பலஸ்தீன மக்களின் கோரிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் செவிசாய்க்க வேண்டிய காலம் வந்துள்ளது. இஸ்ரேல் இழைத்த யுத்தக் குற்றங்கள் மற்றும் காணி அபகரிப்பு என்பன பற்றி மூன்றாம் தரப்பு சுதந்திர விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். 1967ல் அது கைப்பறிய பிரதேசங்களில் இருந்து பின்வாங்கும் வரை இஸ்ரேல் மீது தடைகள் அமுல் செய்யப்பட வேண்டும். இஸ்ரேலின் இனவெறி அரசு பலஸ்தீன மக்களுக்கு சர்வதேச மனித உரிமை சானங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளுக்கு திரும்பிச் செல்லும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதுவரை அந்த இனவெறி கொண்ட சட்ட விரோத நாடு சர்வதேச அரங்கில் இருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
'காணி தினத்தில்' கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் : இஸ்ரேலின் கொலைக் களியாட்டத்தை கண்டும் காணாமல் இருக்கும் உலகம்.
Reviewed by nafees
on
02:05
Rating:
Reviewed by nafees
on
02:05
Rating:
No comments: