கவிஞர் பொத்துவில் அஸ்மின் சீனா பயணம்.

கவிஞரும், தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் ,தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான பொத்துவில்
அஸ்மின் சீனாவின் தலை நகர் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு சந்தைப்படுத்தல் செயலமர்வில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 11ஆம் திகதி சீனா பயணமாகிறார்.
ஏப்ரல் மாதம் 12 முதல் மே மாதம் 02 வரை நடைபெறவுள்ள இந்த செயலமர்வில் பன்னாட்டு ஊடகத்துறை சார்ந்தவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த ஊடக செயலமர்வினை சீனா மக்கள் குடியரசின் வானொலி மற்றும் திரைப்படம் தொலைக்காட்சி மாநில நிர்வாகத்தின ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
பொத்துவில் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான அஸ்மின் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை டிப்ளோமா பட்டம் பெற்றவர். இவர் வசந்தம் தொலைக்காட்சியில் தயாரித்து வழங்கும் நிகழ்ச்சிகளில் ‘தூவானம்’, ‘’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘தேன் சிந்தும் ராகங்கள்’’ போன்றவை குறிப்பிடத்தக்கன. இந்நிகழ்ச்சிகளில் ‘தூவானம்’ கலை -இலக்கிய -சஞ்சிகை நிகழ்ச்சி அரச தொலைக்காட்சி விருது விழாவில் மூன்று முறை சிறந்த சஞ்சிகை நிகழ்ச்சிக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளது.
‘விடை தேடும் வினாக்கள்’-(2001), ‘விடியலின் ராகங்கள்’-(2002), ‘பாம்புகள் குளிக்கும் நதி’-2013 ஆகிய கவிதை நூலின் ஆசிரியரான அஸ்மின் உயர்தரம் கற்கின்ற காலத்திலே தேசிய மட்ட கவிதை போட்டியில் வெற்றியீட்டி ஜனாதிபதி கரங்களால் விருதினை பெற்றவர். பேராதனை பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் பவள விழா கவிதைப்போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றவர். இவர் இதுவரை தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
சுமார் 50 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பாடல் எழுதிய இலங்கை கவிஞர் என்ற பெருமை இவரையே சேரும். இதுவரை 15 க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு இவர் பாடல் எழுதியுள்ளார். அதில் 5 திரைப்படங்களுக்கு அனைத்துப்பாடலும் எழுதியுள்ளார். ‘அமரகாவியம் திரைப்படத்தில் ஜிப்ரானின் இசையில் இவர் எழுதிய 'தாகம் தீர' பாடலுக்கு 9 ஆது 'எடிசன்' திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியருக்கான விருதினை பெற்று இலங்கை மண்ணுக்கு பெருமை சேர்த்தார்.
2011 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கவிதைபாடி இலங்கை மண்ணுக்கு பெருமை சேர்த்த அஸ்மின் மறைந்த தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதிய 'வானே இடிந்ததம்மா' இரங்கல் பாடல் ஜெயாவின் சமாதியில் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக இருபத்து நான்கு மணிநேரமும் ஒலிபரப்பாகியது. இந்தப்பாடலை இணையத்தில் 10 மில்லியனுக்கு மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். அதற்காக ஜெயாவின் தோழி சசிகலா நடராஜன் அவர்களால் ஜெயலலிதாவின் புகழ்மிக்க இல்லமான போயஸ்கார்ட்டனுக்கு அழைத்து கௌரவிக்கப்பட்டார்.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இவருக்கு யாழ்மண்ணில் வைத்து 'கவிப்பிறை' என்ற பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இவரது கலை இலக்கிய சாதனைகளுக்காக இலங்கையின் மேன்மை தாங்கிய ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனா அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கவிஞர் பொத்துவில் அஸ்மின் சீனா பயணம்.
Reviewed by nafees
on
22:28
Rating:
Reviewed by nafees
on
22:28
Rating:
No comments: