எதற்காக நாம் அடி வாங்குகிறோம்?


அது எமது நாட்டிலிருக்கும் ஒரு பழைமை வாய்ந்த சமூகம். ஏறத்தாள அந்த மதம் அறிமுகப் படுத்தப் படுவதற்கு
முன்னரிலிருந்தே குறித்த சமூகத்துக்கும் இலங்கைக்கும் தொடர்பிருந்தது. வியாபாரத் தொடர்பு. ஆண்டுக் கணக்குகளில் சொல்லப் போனால் ஏறத்தாள 1500 வருடங்களுக்கு மேற்பட்டது அந்தத் தொடர்பு.

அந்த சமூகத்துக்கு ஒரு நபி வருகிறார். இஸ்லாம் அறிமுகப் படுத்தப் படுகிறது. அது உலகெங்கும் பரப்பப் படுகிறது. இலங்கையிலும் இஸ்லாம் அறிமுகப் படுத்தப் படுகிறது. சில சான்றுகளின் அடிப்படையில் ஒரு சஹாபி/ தாபிஈன்களில் ஒருவர் இலங்கைக்கும் வந்து இஸ்லாத்தைப் போதிக்கிறார். அத்தோடு வந்த அரேபியர்களும் இங்குள்ள பெண்களைத் திருமணம் செய்து அவர்களும் இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். அரேபியர்கள் அந்தக்கால மன்னர்களோடு நெருங்கிய தொடர்பிலிருந்தார்கள். முஸ்லீம் சமூகமும் இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் பெருகுகின்றனர். பல இடங்களை மன்னரே அன்பளிப்பாக கொடுத்துக் குடியேற்றுகிறார். சில, பல அரச பதவிகள், பாதுகாப்பு, நம்பிக்கை, வைத்தியம் போன்ற பிரதான பணிகளில் "நம்பிக்கைக்குறியவர்கள்" என்று முஸ்லீங்களை வேலைக்கும் அமர்த்துகின்றனர்.

ஒரு மன்னரின் உயிருக்காக தன்னுடைய உயிரையே தியாகம் செய்த முஸ்லீம் பெண்மணி, மன்னர் விருப்பப் பட்டார் என தனது மகளை மன்னருக்கு திருமணம் செய்து கொடுத்த முஸ்லீம் குடும்பம் என முஸ்லீங்களுடனான உறவும் வலுப்பெறுகிறது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற அந்நியர்களின் படையெடுப்பின் போதெல்லாம் சிங்கள மன்னர்களோடு சேர்ந்திருந்த சமூகம்.

சுதந்திரத்துக்காகவும் இலங்கை முஸ்லீங்கள் பெயர் சொல்லுமளவு பாடு பட்டிருக்கிறார்கள். வியாபார சமூகமாக கண்டறியப்பட்ட முஸ்லீம் சமூகத்தில் கல்வி கற்பதனால் மதமாற்றங்கள் நிகழலாம் என்ற பயத்தின் காரணமாக அந்தக்கால முஸ்லீம் அறிஞர்கள் "ஆங்கிலக் கல்வி ஹராம்" என்று அறிவித்திருந்த பத்வாவையும் தாண்டி சித்திலெப்பை போன்ற அறிஞர்கள் கல்வி கற்கின்றனர். சுதந்திரத்துக்காக, முஸ்லீம் சமூகத்தின் எழுச்சிக்காக பாடுபட்ட முஸ்லீம் தலைவர்களில் பெயர் சொல்லக்கூடியவர் இவர்.

அனேகமாய் இங்கிருந்துதான் பிரிவினைகள் ஆரம்பித்திருக்க வேண்டும். மார்க்கக் கல்வி கற்க அனேக உலமாக்கள் இந்தியாவுக்குச் சென்றனர். மார்க்கம் கற்ற உலமாக்கள் அங்கிருந்து வந்தனர். கூடவே இந்துத்துவ கோட்பாடுகள், மூடநம்பிக்கைகளையும் கட்டிக் கொண்டே வந்திருந்தது.

வெறும் வியாபார சமூகமாகவே பார்க்கப்பட்ட முஸ்லீம் சமூகம், அந்த சமூகத்திலிருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே கல்வி கற்றனர். மார்க்கத்தைக் கற்று வந்த உலமாக்களுக்கு உழைப்புக்கான வழிகள் தேவைப்பட்டன. முதலில் சாப்பாட்டுக்கு முன்னுறிமை என்பதனால் கத்தம், கந்தூரி, பாத்திஹா, காணிக்கை என்ற வழிமுறைகள் அறிமுகப் படுத்தப் பட்டன.

சொற்ப அளவினரைத் தவிர ஏனைய முஸ்லீங்கள் கல்வி அறிவற்ற சமூகமாகவே இருந்தது. ஏனைய சமூகங்கள் கல்வியில் முன்னேறி அரச தொழில்கள், ஏனைய நல்ல தொழில்களில் இருக்க முஸ்லீங்களில் பெரும்பாண்மையினரிடம் உணவு, வியாபாரம், பணம் போன்ற தேவைப்பாடுகளே முன்னுறிமையில் இருந்தது.

சுதந்திரத்தின் பின்னரான இலங்கையில் கூட அரச பதவிகளில் பெயர் சொல்லத்தக்க அளவு முன்னேற்றங்கள் முஸ்லீங்களிடையே இருக்கவில்லை. அனேகரின் எதிர்பார்ப்புக்களும் வியாபாரம், பணமாகவே இருந்தது. அதேநேரம் இந்தியாவில் கல்வி கற்று விட்டு வந்த உலமாக்களும், இலங்கையில் மார்க்கக் கல்வியைப் போதிக்கவென மத்ரசாக்களை நிறுவி இந்தியப் பின்னணியைக் கொண்ட தமிழ் பேசும் முஸ்லீம் சமூகமொன்றை உருவாக்கினர். மத்ரசாக்களில் கல்வி கற்று விட்டு வரும் அனேக உலமாக்களும் தமது வாழ்வாதாரத்துக்காக உணவை இலக்காகக் கொண்டும், இன்னொரு மத்ரசாவை உருவாக்குவதனையுமே இலட்சியமாகக் கொண்டிருந்தனர்.

***********************************************

மார்ச் மாதம் கடைசிப் பகுதியில் சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களது ரிஸல்ஸ் வெளிவந்திருந்தது. முஸ்லீம் சமூகத்தில் அவை குறிப்பிட்ட முன்னேற்றத்தை கல்வி வளர்ச்சியில் காட்டினாலும் ஏனைய சிறுபாண்மைச் சமூகங்களோடு ஒப்பிடும் போது அவை போதாதென்று கல்வியியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்து இருந்தனர்.

பொதுவாக 6-7 A க்களுக்கு மேலே எடுத்தவர்கள் bio/ maths படிக்கவெனவும், 4-5 A க்கள் எடுத்தவர்கள் commerce படிக்கவெனவும் அதற்குக் கீழே இருப்பவர்கள் Arts படிக்க வேண்டும் எனவும், Fail ஆனவர்கள் இப்போதே உயர்கல்வியைத் தொடர பல கல்வி நிறுவனங்கள் அவர்களை வரவேற்கவும் காத்திருக்க இவ்வாறான எழுதப்படாத விதியாக எமது சமூகத்தின் தெரிவுகள் இருக்கும்.

உயர்தரத்துக்குத் தெரிவானவர்கள் இரண்டு வருடங்களில் கஷ்டப்பட்டு ஒரு கூட்டம் படிக்க, இன்னொரு கூட்டம் கஷ்டப்பட்டு என்ன செய்ய? கெம்பஸ் எல்லாம் போகப் போகிறோமா என்ற நக்கலுடன் அடுத்த கூட்டமும், மீதி எதற்காகப் படிக்கிறோம் என்ற இலக்கே தெரியாமல் குப்பையும் கொட்டும்.

உயர்தரம் படித்து பெறுபேறுகள் வரும் போது, அதில் பாதி முஸ்லீம் பெண்கள் திருமணம் செய்திருப்பர். ஆண்களில் பாதிப்பேர் Fail ஆகி இருப்பர். மீதியில் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப் படுவோரில் அனேகர் பெண்பிள்ளைகள். விரல் விட்டு எண்ணி விடலாம் ஆண்களை.

பெண் பிள்ளைகள் உயர்தரம் படிக்கக் கூடாது, பல்கலைக்கழகம் சென்றால் கெட்டு விடுவார்கள், திருமணம் போன்ற காரணங்களால் அவர்களது பல்கலைக்கழக வாழ்வு ஆரம்பிக்க முன்னறே சலவாத் ஓதி முடிக்கப் பட்டு விடும்.

ஆண்களில் தெரிவு செய்யப்பட்ட விரல் விட்டு எண்ணுவதில் சிலர் "கெம்பஸ் போய் நாலஞ்சு வருஷம் படிக்க முடியுமா? அதை விட private course ஒன்று செய்து விட்டு கட்டார், டுபாய் என பறக்கலாமே?" என்று பலரின் ஆலோசனைகளாலும் நான்கைந்து தங்கை மார், வீடு கட்டணும், சீதனம் கொடுக்கனும், குடும்பப் பொறுப்புக்களை கை மாற்றனும், தன்னோடு படிச்சி O/L fail ஆனவன் இப்போது நல்ல வசதியாக கார், பங்களாவோடு இருக்கிறான். நான் மட்டும் கெம்பஸ் போய் அரச தொழில் எடுத்து என்னதான் செய்ய? Government job சம்பளம் வாழ்க்கைக்குப் போதுமா?"

இந்தக் கேள்விகளுக்கு விடையாக பல்கலைக்கழக வாய்ப்பை விட்டு விட்டு தனியார் கல்லூரிகளில் சேர்ந்து விடுவர். இதில் அனேகர் Commerce படித்த மாணவர்களே அதிகம். நினைத்தது போலவே பல்கலைக்கழக வாய்ப்பையும் கைவிடுவர். தனியார் துறையில் ஒரு course ஐத் தெரிவு செய்வர். குறுகிய காலத்தில் படித்து விட்டு வெளிநாடு பறந்து விடுவர்.

இதே நேரம் O/L, A/L சித்தியடையத் தவறியவர்கள் வியாபாரிகளாக, அல்லது ஏதோ ஒரு course முடித்து விட்டு வெளிநாடு சென்றவர்களாக இருப்பர்.

படித்தவர்கள் ஒருபக்கம் வெளிநாடுகளில் குடியேறவோ அல்லது உழைக்கவென்றோ சென்றால் அடுத்த புறம் கல்வியை இழந்தவர்களும் சாரதிகள், வேலையாட்கள் என பல்வேறு பணிகளுக்கு வெளிநாடு சென்றிருப்பர். இன்று எமது முஸ்லீம் சமூகத்தை எடுத்தால் குடும்பப் பொறுப்பு, சகோதரிக்கு வீடு கட்ட வேண்டும், வசதியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொறு வீட்டிலும் குறைந்தது ஒரு இளைஞராவது வெளிநாட்டில் இருப்பார்.

இவர்களது அனேக இலக்கு வீட்டைக் கட்டி இரண்டு மாடி ஆக்குதல், வீட்டுக்கு டைல்ஸ் பிடித்தல், நல்லதொரு வாகனம் வாங்குதல், அது காசு கட்டி எடுக்க முடியாத பட்சத்தில் லீசிங் இற்கு எடுத்தல், பெரியதொரு வீடு கட்டுதல், சமூகத்தில் செல்வந்தராக வாழ்வதாகக் காட்டிக் கொள்ளுதல், அடிக்கடி Trip போதல், தனது பண பலத்தைக் காட்ட வெளிநாடுகளுக்கு trip போதல், அடிக்கடி உம்ரா செல்லுதல், உயர்ந்த ரக உணவகங்களில் சாப்பிடுதல், சாப்பாட்டை போட்டோ எடுத்து Facebook இல் போடுதல், தான் நல்ல பணக்கார இடமொன்றில் திருமணம் செய்தல், தனது சகோதரிகளை மற்றவர்கள் வாய் பிளக்குமளவு சீனதம் கொடுத்து டொக்டர், எஞ்சினாயர் மாப்பிள்ளை தேடுதல் என்பனவாகும்.

அடுத்த வீட்டுக்காரன் சாப்பிட்டானா? அவனது நிலை எவ்வாறு இருக்கிறது? என்றெல்லாம் எட்டியும் பார்க்க மாட்டான். சிலவேளை ஒரே குடும்பத்தில் ஒரு சாரார் வருடாவருடம் உம்ரா செல்ல, அடுத்தவர் சாப்பாட்டுக்கும் கஷ்டப் படுபவர்களாக இருப்பர். ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.

இந்தக் கூத்துக்கள் அனைத்தையும் ஒரு 80% பெருமாபாண்மைச் சமூகத்துக்கு மத்தியில் வெறும் 10% ஆக இருக்கும் சிறுபாண்மைச் சமூகம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெறும்பாண்மைச் சமூகம், இவ்வாறு சிந்திக்கத் தொடங்கும்.

எம்மிடமிருந்தே இலவசக் கல்வியையும் எடுத்துக் கொள்கின்றனர். எமது இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்து அவர்களையும் சேர்த்தே பாதுகிக்கின்றனர். எமது பொலீஸ்காரர்கள் தான் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கின்றனர். எமது சிங்கள அரசாங்கம்தான் அவர்களை நிர்வகித்து அனேக சலுகைகளையும் வழங்கியுள்ளது.

ஆனால் இந்த இந்த முஸ்லீம் சமூகத்தால் இராணுவத்துக்கு சொல்லும் படி எந்தப் பங்களிப்பும் இல்லை, பொலீஸில் சொல்லுமளவு இல்லை, அரசாங்கத்தில், அரச வேலைகளில் இவர்களது பங்களிப்பு இல்லை, இலங்கையின் கல்வி முன்னேற்றத்தில் ஒரு பங்களிப்பும் இல்லை. இவர்களாக உழைக்கின்றனர், கார், பங்களா என்று வசதியாக வாழ்ந்து, அரசுக்குப் பொய் கணக்குகள் காட்டி வரி ஏய்ப்புக்களில் ஈடுபட்டு விட்டு அவர்கள் மாத்திரம் வசதியாக வாழுகின்றனர் என்று முஸ்லீங்கள் மீது சிங்கள சமூகம் பொறாமை கொள்ளும்.

பொறாமையின் உச்சகட்டம் வெடிக்கும் போது அது கலவரமாக மாறி அவர்கள் முஸ்லீங்களது சொத்துக்கள் மீது கை வைக்கின்றனர். கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்து முஸ்லீங்களை நடுத்தெருவில் நிற்கச் செய்கிறது. இந்தத் தாக்குதல்கள் செய்யும் போது அவர்கள் தெளிவாகத்தான் இருந்திருக்கிறார்கள். முஸ்லீங்கள் கல்வியில் பெயர் சொல்லுமளவு முன்னேறியவர்கள் இல்லை. படித்தவர்கள் என்று சொல்லுமளவு இல்லை. எனவே அதில் கை வைத்துப் பிரயோசனம் இல்லை. முஸ்லீங்களை அழிக்க வேணாடுமா? அவர்களது பொருளாதாரத்தில் கை வைக்க வேண்டும். வைத்தார்கள். எம்மவர்கள் நிலைகுலைந்து போனார்கள்.

"வெளிநாட்டிலிருந்து நேற்றுத்தான் வந்தேன், சம்பாதித்த சொத்துக்கள் எல்லாவற்றுக்கும் நெருப்பு வெச்சிட்டாங்க"

"பதினஞ்சு வருஷம் வெளிநாட்டுல இருந்து கஷ்டப்பட்டு கட்டி முடிச்ச வீடு, பெயிண்ட் வாசனை கூட போகல, அதுக்கு நெருப்பு வெச்சிட்டாங்க"

"Unregistered vehicle. வாங்கி ரெண்டு நாள், அதுக்கு நெருப்பு வெச்சிட்டாங்க"

இதற்கெல்லாம் காரணம் "பொறாமை"

உண்மையும் அதுதான், முஸ்லீங்களின் பொருளாதார முன்னேற்றத்தில் பொறாமை கொண்டவர்கள் அதை அழிக்க முயற்சிக்கின்றனர்.

"ஆனால் 1400 க்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட முஸ்லீங்கள் சமூகத்தில் திடீரென இவர்களுக்கு ஏன் பொறாமை வந்தது? அந்தப் பொறாமையை ஏற்படுத்தியவர்கள் யார்?" என்ற கேள்வியைக் கேட்டால் கேள்விக்கான விடையாக எம்மை நோக்கியே விரல்கள் நீட்டப்படுகின்றன.

மேலே ஏற்கனவே சொன்னது போல படித்தவரோ, படிக்காதவரோ குறுகிய கால உழைப்பை இலக்காகக் கொண்டு வெளிநாடு செல்வர். உழைத்த பணத்தைக் கொண்டுவந்து கொட்டி மாடி வீடுகள், தரமான வாகனங்கள், வசதியான வாழ்க்கை, வெளிநாட்டுப் பயணங்கள் என வாழ ஆரம்பிப்பர். தன்னால் இந்த சமூகத்துக்கு, நாட்டுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை.

முஸ்லீம் சமூகத்தில் இன்னும் பிச்சை வாங்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. வீடுகள் கட்ட வழியில்லாமல் குடிசைகளில் வாழும் ஒரு சமூகம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. கல்வி கற்கப் பண வசதி இல்லை என்று கல்வியை இடைநடுவில் விட்டுச் சென்றவர்களும் முஸ்லீம் சமூகத்தில் இருக்கச் செய்கின்றனர். அன்றாடக் இயற்கைக் கடமைகளை நிறைவு செய்யக்கூட கழிப்பறை வசதிகள் கூட இல்லாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சிங்களவர்களைத் தாண்டி படைத்த இறைவனாலும் இவற்றைப் பொறுக்க முடியாமல் இருந்திருக்கும்.

"நாங்க உழைச்ச காசுதானே? நாங்க உம்ரா போனால் என்ன? நுவரெலியாவுக்கு ட்ரிப் போனால் என்ன?" என்று கேட்கும் சமூகத்தான் நாளை அடிபட்டு சொத்துக்களை இழந்து சாப்பாட்டுக்கும் வழி இல்லாமல் நிற்கும் போது "யாராவது உதவி செய்ய மாட்டார்களா?" என எதிர்பார்த்து நிற்கும்.

எளிதாக "பொறாமைதான் காரணம்" என காரணத்தைச் சொல்லி விட்டு நகரும் நாம் பொறாமைக்கான காரணம் என்ன என்பதை உணர மறுக்கிறோம்.

எப்போதெல்லாம் அடி வாங்கி, நமக்கு பாதுகாப்புக்கு நின்ற பொலீஸ், இராணுவம் கூட காடையர்களின் பக்கமாக நிற்கும் போதுதான் "அடடே, நமது முஸ்லீங்களில் யாரும் பொலீஸில், இராணுவத்தில் இல்லை எனப் புலம்ப ஆரம்பிக்கிறோம்.

அரச பல்கலைக்கழகம் சென்று நான்கு வருடம் குப்பை கொட்டி அரச தொழில் எடுத்து வரும் சம்பளத்தில் என்னதான் செய்ய என லட்சங்கள் சம்பாதித்து சீக்கிரம் வாழ்க்கையில் செட்டில் ஆக ஆசைப்பட்டு, கிடைத்த வாய்ப்புக்களையும் தவற விட்டு விட்டு இப்போது "பெரிய அரச பதவிகளில் சிங்களவன்தான் இருக்கிறான், அவன் துவேஷம், அவனுட ஆளுக்குத்தான் support" என குறையும் கூறுகிறோம்.

இதெல்லாம் யாருடைய பிழைகள்? யார் விட்ட பிழைகள்? செல்வம், வசதி, வசதியான வாழ்க்கை, டைல்ஸ் பிடித்த மாடி வீடு, டாக்டர் மாப்பிள்ளை, சீதனம், வருடாந்த உம்ரா, வெளிநாட்டு வாழ்க்கை, படிக்க வேண்டிய அவசியமில்லை, பல்கலைக்கழக பட்டங்கள் வாங்கி அரச தொழில்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை, அதற்குப் பொறுமையும் இல்லை..... இவற்றையெல்லாம் யார் உருவாக்கியது?

நாங்கள் தானே? எங்களிலிருந்து தானே பிழை ஆரம்பிக்கிறது? ஆனால் இதைத்தான் இஸ்லாம் சொல்கிறதா எனக் கேட்டால் இல்லவே இல்லை.

இஸ்லாம் ஒருபோதும் மாடி வீடு, வசதியான வாழ்க்கை, ஆடம்பர வாழ்க்கை வாழச் சொல்லவே இல்லை. எனவே இஸ்லாமிய கோட்பாடுகளை மீறி வெறும் உலக ஆசைகளுக்காக, மற்றவர்டளுக்குக் காட்ட முயற்சித்து வாழ்ந்ததால் வந்த வினை.

கல்வியை விட்டதால், கிடைத்த வாய்ப்புக்களை விட்டதால், சமூக எண்ணமே இல்லாமல் வாழ்ந்ததால் இறைவன் அளித்த தண்டனை.

ஆனால் நாம் பாடம் கற்றுக் கொண்டோமா என்றால் இல்லவே இல்லை.

முஸ்லீம் சமூகத்தில் ஒரு சாராரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்க இன்னொரு சாரார் ஹோட்டலில் உல்லாச நடனமாடுகின்றனர்.

முடியுமான அளவு இந்த April கால உல்லாசப் பயணங்களைத் தவிர்த்து, உம்ராக்களைத் தவிர்த்து அந்தப் பணத்தை பாதிக்கப் பட்டோருக்கு தர்மம் செய்யுங்கள் என ஊடகங்கள், பள்ளிகள் வாயிலாக பிரச்சாரங்கள் மேற்கொண்டும் கேட்காமல் "நாங்க சம்பாதிச்ச காசுல உம்ரா போரத்துல, ட்ரிப் போரத்துல இவங்களுக்கு என்னடா வலிக்குது" என்று நக்கல் பார்வையில் கடந்து விடும் ஒரு முஸ்லீம் சமூகம் இருக்கும் வரைக்கும்....

கல்வி கற்ற, படித்த, சமூக அக்கறை கொண்ட ஒரு முஸ்லீம் சமூகம் உருவாக்கப்படும் வரையிலும் எதற்காக அடி வாங்குகிறோம் என்றே தெரியாமல் அடி வாங்கியே சாகும் ஒரு முட்டாள் சமூகமாக இலங்கை முஸ்லீங்கள் இருப்பார்கள், இருக்கத்தான் போகிறான்கள். அடுத்த முறையும் அடி வாங்கும் போது "பொறாமைதான் காரணம்" என விடையைச் சொல்லி விட்டு நகர்ந்து விடத்தான் போகிறோம்.

Sabith Thaha
08/04/2018

எதற்காக நாம் அடி வாங்குகிறோம்? எதற்காக நாம் அடி வாங்குகிறோம்? Reviewed by nafees on 07:04 Rating: 5

No comments:

Powered by Blogger.