பேஸ்புக்கை முடக்கியதால் நாடு பொருளாதார ரீதியில் பாதக விளைவுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது.

சமூக வலைப்பதிவு தளங்களை தனிநபர்கள் தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த உரிய நிறுவனங்களுடன்
புதிய உடன்படிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது எனவும் விரைவில் இலங்கையில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை தாம் நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முகப்புத்தகம் உள்ளிட்ட வலைப்பதிவு தளங்களை முடக்கியமையினால் பொருளாதார ரீதியில் பாதக விளைவுகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு இலங்கை பிரஜைகளை சந்தித்து இலங்கையின் நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போதே அவர் சமூக வலைதள முடக்கம் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது,
கண்டியில் இடம்பெற்ற முரண்பாடுகளின் பின்னர் பிரச்சினைகள் பாரதூரமாக மாற்றம் காண முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக தளங்களே காரணமாக அமைந்தன. அந்த சம்பவத்துடன் நாம் உடனடியாக தீர்மானம் எடுத்து சமூக தளங்களை முடக்கியமையே பிரச்சினைகள் கட்டுபடுத்த ஏதுவாக அமைந்தது. நாம் அவ்வாறான தீர்மானத்தை எடுத்திருக்காவிட்டால் கண்டிக்கு மட்டும் அல்ல நாடு முழுவதுமே இவ்வாறான இன முரண்பாடுகள் பரவியிருக்க அதிக வாய்ப்புகள் இருந்தன. ஆகவே நாம் எடுத்த தீர்மானங்கள் நாட்டினை பாதுகாக்கும் நடவடிக்கையாக அமைந்தது. எனினும் முகப்புத்தகம் உள்ளிட்ட சில சமூக தளங்கள் முடக்கப்பட்டதன் மோசமான விளைவுகளும் ஏற்பட்டுள்ளன. அதனை நாம் மறுக்க முடியாது.
நாம் இவற்றினை முடக்கியமையின் பிரதிபலிப்பு எமது பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள கூட்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் கடந்த வாரம் முழுவதும் இலங்கைக்கு வருகை தந்து எம்மிடம் முறைப்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த செயற்பாடுகள் காரணமாக தமது நிறுவனங்கள் பாரிய நஷ்டங்களை சந்தித்து வருவதாக கூறுகின்றனர். ஆனால் முகப்புத்தகம் உள்ளிட்ட தளங்களை மூடியதன் காரணமாக அரச நிறுவனங்களின் வருவாய் உயர்வடைந்துள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிற்கு ஒரு நாளைக்கு 200 மில்லியன் வருவாய் அதிகரிப்பை காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
ஆகவே இரு வகையிலான விளைவுகளையும் நாம் சந்தித்துள்ளோம். எனினும் முகப்புத்தகம் மற்றும் ஏனைய சமூக வலைப்பதிவு தளங்களின் மூலமாக தனி நபர்கள் தவறாக பயன்படுத்தும் செயல்களை கட்டுபடுத்த உரிய நிறுவனங்களுடன் நாம் உடன்படிக்கைகளை செய்து இவ்வாறான நிலைமைகளை கட்டுபடுத்தும் செயற்பாடுகள் குறித்து இணக்கப்பாடு கண்டுள்ளோம். வழங்கப்பட்டுள்ள சுதந்தரத்தை தவறாக பயன்படுத்தி சமூகத்தை அழிக்கும் செயற்பாடுகள் குறித்தும் நாம் கடினமான தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும். ஆகவே இந்த நிலைமைகளை கருத்தில் கொண்டு சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் புதிய வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்த நான் தீர்மானித்துள்ளேன் என்றார்.
மேலும் நேற்று முற்பகல் டோக்கியோவில் உள்ள நவீன கழிவு முகாமைத்துவ நிலையத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார். சுமார் 9.3 மில்லியன் மக்கள் வாழும் டோக்கியோ நகரில் நாளாந்தம் 11 ஆயிரம் மெற்றிக் தொன் திண்மக் கழிவுகள் வெளியேற்படுவதுடன், இவற்றை முகாமைத்துவம் செய்வதற்காக இது போன்ற 23 மத்திய நிலையங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி பார்வையிட்ட சினகாவாவில் உள்ள திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் சுமார் 60 மெற்றிக் தொன் திண்மக் கழிவுகள் நாளாந்தம் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சூழல் நட்புடைய வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், அந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி பார்வையிட்டார்.
கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு மேலதிக பெறுபேறாக உற்பத்தி செய்யப்படும் அனல்மின் மின்சக்தியாக மாற்றப்படுவதுடன், இந்த மின்சக்தி திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தின் பயன்பாட்டுக்காக பெற்றுக்கொள்ளப்படுவதுடன், எஞ்சிய தொகை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கையில் திண்மக் கழிவு பிரச்சினையை தீர்ப்பதற்கு இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயவுள்ளதாகவும், இதற்கு ஜப்பானின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தின் தலைவரினால் இந்த நிலையத்தின் பணிகள் குறித்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு விரிவாக விளக்கப்பட்டது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாரசிங்ஹ ஆகியோரும் இந்கிழ்வில் கலந்துகொண்டனர்.
பேஸ்புக்கை முடக்கியதால் நாடு பொருளாதார ரீதியில் பாதக விளைவுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது.
Reviewed by nafees
on
00:00
Rating:
Reviewed by nafees
on
00:00
Rating:
No comments: