சனிக்கிழமை வரை தொடருமாம் அவசரகால சட்டம் !

கண்டி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் பரவ ஆரம்பித்த இனவாத வன்முறைகளை கட்டுப்படுத்தும்
நோக்குடன் ஒரு வார காலத்துக்கு அமுலில் இருக்கத்தக்கதாக ஜனாதிபதியால் அமுல் செய்யப்பட்ட, பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் இரண் டாம் பகுதியான அவசர கால நிலைமை எதிர்வரும் சனிக்கிழமை வரை தொடரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதன்படி தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் சனிக்கிழமையே நாடு திரும்பும் நிலையில் 18 ஆம் திகதி ஞாயிறன்று, அவசரகால சட்டத்தை நீக்கும் வர்த்தமானியில் கையெழுத்திடுவார் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவை மேற்கோள் காட்டி, ஜனாதிபதி செயலகத்தின் உயர்மட்ட தகவல்கள் கேசரிக்கு தெரிவித்தன.
இலங்கைக்குள் வைத்து இந் நாட்டு நேரப்படி ஜனாதிபதி குறித்த அவசர கால சட்ட வர்த்தமானியில் கையெழுத்திட்டதால், மீண்டும் அதனை நீக்கும் வர்த்தமானியிலும் இங்கு வைத்தே கையெழுத்திட வேண்டும் என சுட்டிக்காட்டிய அந்த தகவல்கள் அதன் பிரகாரமே எதிர்வரும் 18 ஆம் திகதி இதற்கான வர்த்தமானி வெளியிடப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக குறிப்பிட்டன.
நாட்டில் ஏற்பட்ட இனவாத வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் கடந்த மார்ச் 6 ஆம் திகதி பிற்பகல் 2.45 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட்டு வர்த்தமானியானது அன்றைய தினம் இரவு வெளியிடப்பட்டது.
ஒருவார காலத்துக்கே அப்போது அவசர கால நிலைமையை நீடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தது. அந்த ஒரு வார காலம் நேற்றுடன் நிறைவுக்கு வந்த போதும், அதனை நீக்குவதற்கான வர்த்தமானியில் கையெழுத்திட ஜனாதிபதி நாட்டில் இல்லாததால் அவசர கால சட்டம் தொடரும் நிலை உள்ளது. எவ்வாறாயினும் ஜனாதிபதிக்கு 10 நாட்களுக்கு அவசர கால நிலையை பிரகடனம் செய்யும் அதிகாரம் உள்ளதால் சனிக்கிழமை வரை அவசர கால நிலைமை நீடிப்பதில் சிக்கல் இல்லை என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந் நிலையிலேயே எதிர்வரும் 17 ஆம் திகதி நாடு திரும்பும் ஜனாதிபதி 18 ஆம் திகதி அவசரகால நிலைமையை நீக்கும் வர்த்தமானியில் கையெழுத்திடவுள்ளமை குறிப்பிடத்தக்கது
சனிக்கிழமை வரை தொடருமாம் அவசரகால சட்டம் !
Reviewed by nafees
on
22:45
Rating:
Reviewed by nafees
on
22:45
Rating:
No comments: