எகிப்து ஜனாதிபதித் தேர்தலும் சிஷியின் அரசியல், பொருளாதாரச் "சாதனைகளும்"

எஸ்.எம்.மஸாஹிம்-(இஸ்லாஹி):
எகிப்தில் இம்மாதம் மார்ச் 26 , 28 ஆம் திகதிகளில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது,
எகிப்தின் சர்வாதிகாரி அப்துல் பதாஹ் அல் சிஷி கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி தான் இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்த ஜனாதிபதி தேர்தலில் அப்துல் பதாஹ் அல் சிஷியும் இவரின் தீவிர ஆதரவு கட்சியான அல்-கத் கட்சியின் தலைவரான மூஸா முஸ்தபா மூஸாவும் மட்டும் போட்டியிடுகிறார்கள் இந்த மூஸா முஸ்தபா என்பவர் சிஷியின் தீவிர ஆதரவாளர் என்பதுடன் சிஷி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டும் என வீதி வீதியாக கையெழுத்து திரட்டியவர் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.
EGYPT-MILITARY-SAUDI-SISIஇதேவேளை சர்வாதிகாரி சிஷி நிர்வாகம் அறிவித்துள்ள இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் போட்டியிடப்போவதில்லை என அறிவித்து பின்வாங்கிக்கொண்டுள்ளனர் இவர்கள் சிஷி சர்வாதிகார அரசாங்கத்தினால் கைது மற்றும் பல்வறு மிரட்டல்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் எகிப்து மனித உரிமைகளுக்கான சட்டத்தரணியும் , பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்கான எகிப்திய மையத்தின் முன்னாள் தலைவருமான காலித் அலி, முன்னாள் கூட்டுப் படைகளின் தளபதி சமி ஹபீஸ் அனான் , புதிய அல் -வாப்த் கட்சியின் தலைவர் அல் செயித் அல் பதாவி, செம்லீக் என்ற விளையாட்டு கழகத்தின் தலைவர் மன்ஸூர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் இஸ்மத் சதாத் (இவர் எகிப்து முன்னாள் ஜனாதிபதி அன்வர் சதாதின் உறவினர்.) ஆகியோர் குறிப்பிட்டத்தக்கவர்கள்.
இதேவேளை சிஷிக்கு போட்டியாக மூஸா முஸ்தபா வேட்பு மனுத்தாக்கல் நேரம் முடிவடைய சரியாக 15 நிமிடங்களுக்கு முன்னர்தான் வேட்பு மனுவை பதிவு அவர் உண்மையான போட்டியாளர்தான் என அவரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் மூஸா இதுவரை சிஷியின் ஒரு திட்டத்தின் கீழ் களமிறக்கப்பட்டுள்ளார் என்றே கருதப்படுகிறது .
ஆக சிஷியும் அவரின் தீவிர ஆதரவாளர் என அறியப்பட்ட மூஸாவும் போட்டியிடும் இந்த தேர்தல் நாடகம் எதிர்வரும் 26,28 ஆம் திகதிகளில் அரங்கேற்றபட்டவுள்ளது.
அப்துல் பதாஹ் அல் சிஷியின் பொருளாதாரச் சாதனைகள்:
2013 இல் இராணுவ சதிப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றி கொண்ட சிஷியின் நிர்வாகத்தின் கீழ் இன்றைய எகிப்து, பொருளாதர வர்ச்சி ,சட்டம் ஒழுங்கு மனித உரிமை ஆகியவற்றில் சாதனை படைத்து வருகின்றது.
சர்வாதிகாரி சிஷியின் நிர்வாகத்தில் எகிப்து பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை எதிர்கொண்டுள்ளது 28% வீதமான எகிப்து மக்கள் வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் நிலையில் கடந்த 2017 ஆண்டு மே மாதம் எகிப்தின் பணவீக்கம் 30 % சதவீதமாக அதிகரித்துள்ளது, இது கடந்த மூன்று தசாப்தங்களில் எகிப்தில் ஏட்பட்டுள்ள பாரிய பணவீக்கமாக பதிவாகியுள்ளது.
எகிப்தின் பெரும்பாலான கிராமங்களில் வாழும் மக்கள் வறுமையை எதிர்கொள்வதாகவும் உணவுக்கு கூட பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் அறிவிக்கப்படுகிறது வேலையற்றோர் வீதம் 13 வீதத்தை எட்டியுள்ளது.
சிஷியின் உட்கட்டுமான அபிவிருத்திச் சாதனைகள்:
சர்வாதிகாரி சிஷியின் நிர்வாகத்தின் கீழ் சிறைசாலைகளின் அபிவிருத்தி உச்சத்தை தொட்டுள்ளது, எகிப்தில் புதிதாக 16 வதை முகாம்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் நாடுபூராவும் பெரும்பாலான வதை முகாம்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது, தற்போது எகிப்தில் இருக்கும் 64 சிறைகளில் 106,000 பேர் சிறைவைக்கப்பட்டுள்ளனர் இவரின் அறுபதாயிரம் (60000) பேர் சிஷியினால் சிறைவைக்கப்பட்டுள்ளன அரசியல் கைதிகளாகும்.
மேற்குறிப்பிட்ட 16 புதிய சிறைச்சாலைகளும் உத்தியோகப்பூர்வமாக சிஷியால் கட்டப்பட்டுள்ள சிறைசாலைகளாகும் , இது தவிர இரகசிய வதை முகாம்கள் நாடு பூராவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது , இது பற்றி குறிப்பிடும் The Arabic Network for Human Rights Information (ANHRI) என்ற மனித உரிமைகள் அமைப்பு எகிப்தின் ஒவ்வொரு பகுதியிலும் இரகசிய வதை முகாம்கள் நிர்மாணிக்கப்பட்டு இயக்கப்படுவதாகவும் அப்படி சுமார் 10 இடங்கள் தொடர்பான தகவல் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
குறித்த ANHRI என்ற அந்த அமைப்பின் மனித உரிமை செயல்பாட்டாளர் ஒருவர் இது பற்றி கூறும்போது சிஷி, வதை முகாம்கள் தொடர்பான பரந்த தாராள கொள்கையை கொண்டவர் இவர் “There is Room for Everyone ” என்ற சுலோகத்தின் கீழ் எகிப்தியர்கள் அனைவரையும் சிறையில் அடைப்பாதை நோக்கமாக கொண்டுசெயல்படுகிறார் என கிண்டலாக குறிப்பிடுகிறார்.
சிஷியின் மனித உரிமைச் சாதனைகள்:
எகிப்தின் சிஷியின் நிர்வாகத்தின் கீழ் மனித உரிமை மீறல்களில் பெரும் வளர்ச்சியை பெற்று சாதனை படைத்து வருகின்றது . இராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றிகொண்ட சயோனிச ஆதரவு சிஷி அரசு தனது இராணுவப் சதிப் புரட்சியை எதிர்பவர்கள், சுதந்திர மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் ஊடகவியலார்கள், தன்னார்வு செயல்பாட்டாளர்கள் மற்றும் இஹ்வான் அமைப்பின் ஆதரவாளர்கள் உறுப்பினர்கள் ஆகியோரை கடத்துதல் , சித்திரவதை செய்தல் , படுகொலை செய்தல் காணாமல் ஆக்குதல், போலியான குற்றசாட்டுகளை சுமத்தி பாரிய தண்டனைக்கு உட்படுத்தல், மரண தண்டனை வழங்குதல் , சுதந்திர அரசியல் நடவடிக்கைகளை தடை செய்தல் ஆகிய நிர்வாக பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் மனித உரிமை சாதனைகளை படைத்து வருகின்றது .
இது பற்றி குறிப்பிடும் மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள் எகிப்தில் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்படுபவர்கள் சட்டத்தரணிகளை சந்திக்கவும், உறவினர்களை சந்திக்கவும் மறுக்கப்படுவதுடன் தொடரான சிந்திரவதைகளை எதிர்கொண்டு வருகின்றனர் எனவும், உத்தியோகபூர்வமாக கைது செய்யப்படுபவர்கள் சிறைகளில் மரணித்து விடுவது இடம்பெறும் அதேவேளை சட்டத்துக்கு புறம்பாக கடத்தப்படுபவர்கள் மரணத்தை எதிர்கொள்வது சாதாரணமாக நிகழ்வாக உள்ளது என குறிப்பிடுகின்றன .
“சித்திரவதை அற்ற தேசம்’ என்று எழுதப்பட்டிருந்த டீசேட் ஒன்றையும் அணிந்திருந்தார்கள் என்பதற்காக பல வாலிபர்கள் இரண்டு ஆண்டுகளின் பின் சிறையிலேயிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர், பல்கலைக்கழக மாணவர்கள், மாணவியர் பலர் கட்டப்பட்டு சித்திரவதைகளை எதிர்கொண்டுள்ளனர் அவர்களில் சிலர் கடத்தப்பட்டபின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் ஏற்கின்றது மனித உரிமை அமைப்புக்கள்.
சிஷியின் சட்ட மற்றும் நீதித்துறைச சாதனைகள்:
எகிப்தின் சட்டம் ,நீதி சிஷியின் முழு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது , சிஷி கூறுவதுதான் நீதி அவரின் கட்டளைகல்தான் சட்டம் என்ற தத்துவம் நடைமுறையில் உள்ளது , சர்வாதிகாரத்துக்கு எதிராக குரல்கொடுக்கும் சட்டத்தரணிகள் , நீதிபதிகளில் பதவிகள் பறிக்கப்பட்டு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுவருகிறது , இன்னும் பலருக்கு அவர்களுக்கு உரிய பதவிகள் பதவி உயர்வுகள் மறுக்கப்படுகின்றது .
எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சியை இராணுவசதிப் புரட்சி மூலம் பதவி கவிழ்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றும் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களை எதிர்த்த சுமார் 50 நீதிபதிகளுக்கு சிஷியின் நீதித்துறை உச்ச கவுன்ஸில் கட்டாய ஓய்வு வழங்கியிருந்தமை இதற்கு சிறந்த உதாரணமாகும் .
இதேவேளை மரண தண்டனையை எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை விஷம் வைத்து கொலை செய்ய சதி இடம்பெறுவதாக தகவல்கள் வெளியிடப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது . ஜனாதிபதி முஹம்மத் முர்ஷி உட்பட பல அரசியல் கைதிகள் தமக்கு உயிர் ஆபத்து என கருதி சிறையில் வழங்கப்படும் உணவை உண்பதை தவிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
இராணுவச் சதிப்புரசிட்யை மேற்கொண்ட சிஷியின் பிடியில் இருக்கும் நீதித்துறை சுதந்திரமான தேர்தல் மூலம் தெரிவான ஜனாதிபதி மொஹமட் முர்ஷிக்கு மரண தண்டனையை வழங்கி பின்னர் அதனை உறுதி செய்துள்ளதோடு முன்னணி சர்வதேச இஸ்லாமிய அறிஞரான யூசுப் அல் கர்ழாவிக்கும் மரண தண்டனை விதித்துள்ளமை சிஷியின் நீதித்துறை சாதனைகளில் ஒன்று.
அதேவேளை இஸ்ரேலுடன் பகிரங்க மற்றும் இரகசிய பாதுகாப்பு உடன்பாடுகளை ஏட்படுத்திக்கொண்டுள்ள சிஷி பலஸ்தீன போராட்ட அமைப்புக்களை ஒடுக்கும் சதிநடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளிவருகின்றமையும், இரகசியமாக ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரித்துள்ளமைக் காட்டும் ஆதாரங்கள் வெளியாகியுள்ளமையும் சுட்டிக்காட்டதக்கது (எனது மற்றுமொரு கட்டுரையில் இது பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது) .
இந்த சாதனைகளின் மத்தியில் தான் முன்னாள் இராணுவ உளவுத் துறை தலைவரும் முர்ஸியின் நிர்வாகத்தின் கீழ் இராணுவத் தளபதியாக இருந்த சிஷி இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார் . இந்த தேர்தலிலும் கடந்த ஜனாதிபதி தேர்தலை போன்று வென்றி பெறுவார் என்பது தேர்தல் நாடகத்தின் முடிவாக இருக்கும் , எகிப்திய தேர்தல் சட்டத்தின் படி வேட்பாளர் ஒருவர் 5% வீத வாக்குக்ளை பெற்றுக்கொண்டாள் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட தகுதியானவராக கருதப்படுவார் ஆக அங்கீகரிக்கப்பட்ட 52 மில்லியன் வாக்காளர்களில் 5 வீதமானோர் வாக்களித்தால் கூட அவர் அளிக்கப்பட்ட வாக்குகளில் 96 அதிகமாக வாக்குகளினால் வெற்றி பெற்றவராக அறிவிக்கபட்டுவிடுவார் .
ஆக மக்களின் விருப்பம் என்னவாக இருந்தாலும் சிஷியின் அராஜகம் மீண்டும் அதிகாரத்தில் அமரப்போகிறது இதற்கு அமெரிக்க இஸ்ரேலிய மேற்கு சயோனிஸ சக்திகளுடன் சவூதீயும் ,துபாயியும் துணையாக இருக்கப்போன்ற.
இப்படியான சாதனைகளுக்கு சொந்தக்காரனாக அப்துல் பதாஹ் அல் சிஷியை சவூதி ஸலபி சிந்தனைகொண்ட அன்நூர் கட்சி தொடர்ச்சியாக ஆதரித்து வருவது அக்கட்சி எகிப்து மக்கள் மத்தியில் முன்னர் பெற்றிருந்த மக்கள் அங்கீகாரத்தை இழக்க பிரதான காரணமாக அமைத்துள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதுடன் சவூதியின் அழுத்தம் இதற்கு ஒரு பிரதான காரணமாக உள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் சிஷியின் வெற்றி பற்றி எகிப்திய ஊடகவியலாளரும் அரசியல்வாதியுமான ஸலாஹ் அப்துல் மக்க்ஷூத் அறபு சஞ்சிகை ஒன்றுக்கு தெரிவித்திருந்த கீழ் காணும் கருத்து இம் முறை தேர்தல் முடிவை எதிர்வு கூற உதவியாக உள்ளது ” ஜனாதிபதித் தேர்தல் அல் சிஷி பெயரிட்டிருந்த ”ரோட் மெப்” இன் ஒரு பகுதி அவர் மோசமான ஒரு அரசியலமைப்பை வரைந்தார் , பின்னர் அவர் மட்டுமே வேட்பாளராக கொண்ட ஜனாதிபதி தேர்தலை உருவாக்கினார் அவரின் எதிர்த்தரப்பில் ஹம்தீன் சபாஹி அலங்காரமாக மட்டுமே இருந்தார் . இருப்பினும் தேர்தலில் வாக்குப்பதிவு மிகவும் குறைவானதாக இருந்தது , வாக்குப்பதிவை சற்று கூட்டிக்கொள்ள ஒரு நாளை மேலதிகமாக அதிகரிக்க அவர்களை தூண்டும் அளவுக்கு வாக்குப்பதிவு பலவீனமானதாக இருந்தது , நெருக்கமான ஊடகவியலாளர்களின் சாட்சியத்தின் படி 7 வீதமான வாக்குபதிவே தேவையானதாக இருந்தது அவர்களின் பார்வையில் அது மகத்தான வாக்குப்பதிவாக இருந்தது. பஷார் அல்-அசத் மற்றும் அவரின் தந்தை போன்று அல் சிஷி அளிக்கப்பட்ட வாக்குகளில் 96 வீத வாக்குகளைப் பெற்றார், இது 30 ஆண்டுகளில் முபாரக் மற்றும் அலி அப்துல்லா சாலிஹ் , மற்றும் எல்லா சர்வாதிகாரிகள் பெற்றதைப் போன்றது.” ஆக மேற்கு சயோனிச மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் பேருதவியுடன் சிஷி அதிகாரத்தில் மீண்டும் அமரப்போகிறார்.
( ”எங்கள்தேசம்” பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை
BY: எஸ்.எம்.மஸாஹிம்-(இஸ்லாஹி):
எகிப்து ஜனாதிபதித் தேர்தலும் சிஷியின் அரசியல், பொருளாதாரச் "சாதனைகளும்"
Reviewed by nafees
on
07:57
Rating:
Reviewed by nafees
on
07:57
Rating:
No comments: