முஸ்லிம்களின் அரசியல் வங்குரோத்து நிலை சமூகத்தின் எதிர்காலத்துக்கும் நாட்டின் ஸ்திரப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

-லத்தீப் பாரூக்-
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் மத்திய மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து
விடப்பட்ட வன்முறைகளை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. இந்த நிலைமைகள் தொடர்பாக முஸ்லி;ம் அரசியல்வாதிகளும், சமய நிறுவனங்களும், சிவில் அமைப்புக்களும் கூட சரியான முறையில் பதில் அளிக்கத் தவறியுள்ளமை குழப்பமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.
முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களும் அவர்களின் ஏனைய சொத்துக்களும் அர்த்தமற்ற முறையில் அழி;க்கப்பட்டமை, அவர்களின் வாழ்வாதாரத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டமை என்பன பட்டப்பகலில் தெட்டத் தெளிவாக இடம்பெற்றும் கூட முஸ்லிம் அரசியல் வாதிகள் இன்னமும் இந்த அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றமை அவர்களுக்கு சயமரியாதை என்ற வார்த்தைக்காவது அர்த்தம் தெரியுமா என்ற கேள்வியை சாதாரண மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இன்னமும் இந்த அரசோடு இணைந்திருக்க அப்படி என்னதான் அவர்களுக்கு எஞ்சியிருக்கின்றது?
இன்னமும் அரசோடு இணைந்திருப்பது தான் அவர்களின் போற்றத் தக்க சிந்தனையாக இருக்கின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தும் முக்கிய விடயம் அவர்கள் சார்ந்துள்ள சமூகமோ அல்லது அதன் பாதுகாப்போ அல்ல. அந்த சமூகத்தை பலிக்கடாவாக்கி ஏனும் தங்கள் பட்டம் பதவிகளையும் அனுபவிக்கும் சுகபோகங்களையும் பாதுகாத்துக் கொள்வது தான் அவர்களின் பிரதான குறிக்கோள். முஸ்லிம் சமூகத்துக்கு எவ்வளவு தீங்குகளை ஏற்படுத்தினாலும் சரி, அந்த சமூகத்தை எவ்வளவு அவமானப்படுத்தினாலும் சரி அதன் அரசியல் தலைமைகள் தங்களோடு தான் ஒட்டிக் கொண்டு இருக்கும் என்பது சிங்களத் தலைவர்களுக்கு நன்றாகத் தெரிந்த விடயம்.
ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்தில் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொண்டுள்ளமை இந்த கருத்தை மெய்ப்பிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. மத்திய மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அதனால் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு ஏற்பட்ட சலசலப்புக்கள் என்பனவற்றை சீர் செய்யும் வகையிலேயே இந்த விஜயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். எஸ்.எம்.மரிக்கார், ஹிஸ்புல்லாஹ், இஷாக் றஹீம், மஸ்தான் காதர், அலிசாஹிர் மௌலானா ஆகியோர் இந்த விஜயத்தில் இடம் பிடித்திருந்தனர்.
இவற்றுக்கு அப்பால் அமைச்சர் பைஸர் முஸ்தபா ஜெனீவாவுக்கு சென்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 37வது அமர்வில் இலங்கைக்காக வக்காளத்து வாங்கியுள்ளார். இவர்கள் எல்லோருமே வெற்கம் கெட்டவர்கள். முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரசாங்கம் பாவிக்கும் பிரதான கருவிகள் போல் செயல்படுபவர்கள். இம்முறை ஐ.நா மனித உரிமை அமர்வில் இலங்கை முஸ்லிம்களுக்காக பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் குரல் கொடுத்தனர்.
ஆனால் இந்த அமர்வில் கலந்து கொண்ட அiமைச்சர் பைஸர் முஸ்தபா தான் சார்ந்த முஸ்லிம் சமூகம் பற்றி தனது உரையில் ஒரு வார்த்தையாவது உதிர்த்தாரா என்று தேடிப்பாருங்கள்.
இருந்தாலும் சிறிதளவு நம்பிக்கைக் கோடுகளும் இருக்கின்றன. கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்தில் இணைந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் நிராகரித்து விட்டார். முஸ்லிம்களை உங்களது தலைமையிலான அரசு பாதுகாக்கத் தவறிவிட்டதால் உங்கள் குழுவில் இணைந்து கொள்ள விரும்பவில்லை என்று அவர் அதற்கு விளக்கமும் அளித்துள்ளார். மத்திய மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு கண்டித்த ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராகவும் அவரே காணப்படுகின்றார். முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தனக்கு கிடைத்த தவலையும் அவர் முன்கூட்டியே ஜனாதிபதி, பிரதமர், மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அரசியல்வாதிகள் முஸ்லிம்களைக் காப்பாற்றத் தவறி இருக்கும் இந்நிலையில் சமயத் தலைவர்களினதும் சிவில் சமூகங்களினதும் செயற்பாடுகளும் இந்த விடயத்தில் ஏமாற்றம் தருவதாகவே உள்ளன. முஸ்லிம் சமூகத்தின் நிலையை இதுவும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது.
உதாரணத்துக்கு ஜம்மிய்யத்துல் உலமா தலைமையிலான 15 சிவில் சமூகக் குழுக்கள் 2018 மார்ச் 8ல் ஜனாதிபதியை சந்தித்தன. அது கலவரத்தின் ஐந்தாம் நாள்.
இது ஒரு அரசியல் விடயம் சமய விவகாரம் அல்ல. அப்படியானால் ஏன் ஜம்மிய்யத்துல் உலமா போன்ற ஒரு அமைப்பு கொழுந்து விட்டு எரியும் ஒரு அரசியல் பிரச்சினை பற்றி பேசும் விடயத்தில் தலையிட வேண்டும்? இது முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த அரசியல் வங்குரோத்து நிலையையே வெளிப்படுத்துகின்றது.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றவர்களுள் ஒருவருக்கு கூட 'இந்தத் தாக்குதல் பற்றி முன் கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தும் நீங்கள் ஏன் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை' என்ற கேள்வியை ஜனாதிபதியை நோக்கி எழுப்பும் துணிச்சல் இருக்கவில்லை. ஜனாதிபதியை அசௌகரியத்துக்கு ஆளாக்கக் கூடாது என்ற நோக்கில் தான் அவர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர் என்பதும் இங்கு அவதானிக்கத் தக்கது.
மறுபுறத்தில் முழுமையான சேதங்கள் விளைவிக்கப்பட்ட பின் இவ்வாறான கூட்டம் ஒன்றை நடத்துவதில் என்ன பலன் உள்ளது? 2018 மார்ச் 9ல் டெய்லி நியுஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவளின் படி இந்த நாட்டு மக்கள் அனைவரும் சமாதானத்தோடு வாழக் கூடிய பொருத்தமான ஒரு சூழலை உருவாக்க ஜனாதிபதிக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என இந்தக் குழுவினர் உறுதி அளித்துள்ளனராம்.
எதற்காக ஜனாதிபதிக்கு அதரவு வழங்கப் பேகிறார்கள்? இனவாதிகள் தொடர்ந்து முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும் சொத்துக்களையும் தீ வைத்து கொழுத்துவதற்கா?
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிராத பகுதிகளிலும் கூட பள்ளிவாசல்களில் தொழுகைக்கான அழைப்பின் போது ஒலி பெருக்கிகளைப் பாவித்தல் மற்றும் முஸ்லிம் பெண்களின் கறுப்பு ஹபாயா ஆடை, முகத்தை மறைத்தல் என்பன போன்ற சில சர்ச்சைக்குரிய விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவை சிலவேளை முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் ஒரு வகை வெறுப்பை ஏற்படுத்தவும் இடம் உண்டு.
இன நல்லிணக்கத்தை விரும்பும் தாராள சிந்தனை கொண்ட சில பெரும்பான்மை சமூக உறுப்பினர்கள் மற்றும் அமைப்புக்கள் இந்த விடயங்கள் தொடர்பாக முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளனர். இவற்றில் கவனம் செலுத்துமாறு அவர்கள் வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.
சுமார் ஒரு வருடத்துக்கு முன் ஜம்மிய்ய்த்துல் உலமா தலைவர் விடுத்த அறிக்கை ஒன்று தமிழ் பத்திரிகையான நவமணியில் வெளியிடப்பட்டது.
அதில் முகத்தை மூடுவதும் கறுப்பு ஹபாயாவும் கட்டாயம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் தனது இந்த கருத்தை நியாயப்படுத்த புனித குர்ஆனில் இருந்தோ அல்லது ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இருந்தோ அவர் எந்த மேற்கோள்களையும் காட்டத் தவறி இருந்தார்.
லண்டனில் வசிக்கும் எகிப்தைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் செய்யித் முதவாலி அத் தர்ஷ் தனது 'ஹிஜாப் அல்லது நிகாப் : முகத்தை மூடுதல் பற்றிய இஸ்லாமிய விமர்சனம்' என்ற நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
'நிகாப் (முகத்தை மூடல்) கட்டாயம் என்ற விடயத்தை ஏற்றுக் கொள்ள நான் மறுக்கின்றேன். இதனை வருத்தத்தோடு விளக்க வேண்டி உள்ளது.
இது தொடர்பாக குர்ஆனிலோ அல்லது சுன்னாஹ்விலோ கேள்விக்கு உற்படுத்த முடியாத வகையிலான ஆணித்தரமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. கற்றரிந்த முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மையானவர்கள் கொண்டுள்ள நேர்மை மற்றும் புலமை என்பன தான் இங்கே கேள்விக்கு உற்படுத்தப்பட வேண்டியுள்ளது. அந்த வகையில் சில கல்விமான்களின் கருததுக்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளன. நாங்கள் ஒரு மோசமான காலப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அல்லது எமது சமூகம் ஒரு மோசமான நிலையில் உள்ளது. பெண்கள் எதை பின்பற்றுவது...? இஸ்லாமிய மரபுகளை புறந்தள்ளும் கதவுகளைத் திறந்து விடுவது தர்க்கத்துக்கு ஒவ்வாத நிலையாகும். அது பொருந்தாத வாதமாகும்.
அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள சில முப்திகள் நவீன வங்கி முறையானது கடன் கொடுப்பதிலும் வட்டி முறையிலும் கடந்த காலங்களை விட வித்தியாசமானது என்ற வாதங்களையும் முன்வைக்கின்றனர். இதுவும் உண்மையில் மிகவும் ஆபத்தான நிலைமையாகும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
நாங்களும் ஒரு வித்தியாசமான யுகத்தில் வாழுகின்றோம் என்பதை ஜம்மிய்யத்துல் உலமா புரிந்து கொள்ள வேண்டும். தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு பலம் மிக்க இராணுவ முன்னெடுப்பு உலகளாவிய மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள மிகத் தீவிரமான ஒரு பிரசாரமாக இது காணப்படுகின்றது. முஹம்மது நபி அவர்களின் காலம் தொட்டு இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கு பரம எதிரிகளாக இருக்கும் இஸ்ரேல் இந்தப் பிரசாரத்துக்கு பக்கபலமாக இருக்கின்றது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அரபு நாடுகளிலும் வளைகுடா பிராந்தியத்திலும் ஆட்சியில் உள்ள கொடுங்கோலர்கள் என எல்லோருமே இதற்கு பூரண ஆதரவளித்து வருகின்றனர். போதாத குறைக்கு இந்தியப் பிரதமர் நரோந்திர மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற பி.ஜே.பி அரசும் அதில் தற்போது இணைந்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முஸ்லிம் நாடுகளை சூறையாடி சின்னாபின்னப்படுத்திய இந்த சக்திகள், மியன்மாரின் றோஹிங்யா பிராந்தியத்தில் முஸ்லிம்களின் இனப் படுகொலைக்கு காரணமாக இருந்த இதே சக்திகள் இப்போது இந்த நாட்டிலும் கால் பதித்துள்ளன. முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அவர்களின் சொந்த நிகழ்ச்சி நிரலை இங்கும் அவர்கள் அரங்கேற்றத் தெடங்கியுள்ளனர். முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான இந்த தீய நிகழ்ச்சி நிரலின் அரங்கேற்றத்துக்கு துணை போக சிங்கள கூலிப்படையினர் விருப்பத்தோடு காத்திருக்கின்றனர்.
உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அட்டூழியங்கள் மற்றும் இனப் படுகொலைகள் என்பனவற்றை இலங்கை அரசு கண்டிக்கத் தவறியமையானது முஸ்லிம்கள் தொடர்பான தனது நிலைப்பாட்டை இந்த அரசாங்கம் மாற்றிக் கொண்டுள்ளது என்பதையே புலப்படுத்துகின்றது. இந்த யுத்த வெறியர்களின் தீய பொறிக்குள் மைத்திரி - ரணில் அரசும் உள்வாங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தான் மத்திய மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு அரசு பச்சைக் கொடி காட்டி மௌனம் சாதித்துள்ளது. இதனால் ஏற்படக்கூடிய தவிர்க்க முடியாத விளைவு நாட்டில் ஏற்படும் அரசியல் ஸ்திரமற்ற நிலையே ஆகும்.
தற்போது வெளியாகும் தகவல்களின் படி மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் காடையர் கும்பலோடு சேர்த்து விஷேட அதிரடிப் படையினரும் முஸ்லிம்களை அச்சுறுத்தி தாக்கி துன்புறுத்தி வன்முறைகளுக்கு துணைபோயுள்ளனர் என்பதாகும். சில இடங்களில் பள்ளிவாசல்களுக்குள் சப்பாத்து கால்களோடு பிரவேசித்து தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
உதாரணத்துக்கு திகணவுக்கு அருகில் உள்ள கும்புகந்துர ஒரு அமைதியான முஸ்லிம் கிரமமாகும். அங்குள்ள ஹிஜ்ராபுர பள்ளிவாசலுக்குள் விஷேட அதிரடி படையினர் புகுந்துள்ளனர். அப்போது அங்கு தொழுது கொண்டிருந்த வயதானவர்கள் உற்பட பலர் மீது அதிரடிப் படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இருவரை அங்கிருந்து அழைத்தும் சென்றுள்ளனர்.
அவர்கள் மோசமாகத் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர். எவ்வாறேனும் நியாயமான ஒரு பௌத்த மதகுரு சரியான நேரத்தில் தலையிட்டதால் அவர்கள் அதிரடிப்படை அரக்கர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மைத்திரி ஜனாதிபதி ஆவதற்கும், ரணில் பிரதமர் ஆவதற்கும் முஸ்லிம்களின் வாக்குகள் ஆகக் கூடுதலான பங்களிப்பை வழங்கி உள்ளன. ரணில் 28க்கும் அதிகமான தேர்தலில் தோல்வியுற்ற பின் அவருக்கான வெற்றி வாய்ப்பை முஸ்லிம்கள் வழங்கினர். அதே மைத்திரி – ரணில் அரசின் கீழ் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இன்னமும் தொடருவதுதான் மிகவும் வேதனைக்குரியது.
இதில் மிகவும் வெறுக்கத்தக்க மற்றொரு விடயம் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரிய வெளியிட்ட கருத்தாகும். அண்மையில் அம்பாறையிலும் மலைநாட்டிலும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டமையானது அநேகமான சிங்கள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் போன்ற நிலையில் இருக்கும் ஒரு அதிகாரியிடம் இருந்து முற்றிலும் எதிர்ப்பார்க்கப்படாத ஒரு கூற்றாக இது அமைந்துள்ளது.
மத்திய மலைநாட்டில் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது இத்தகைய காட்டுமிராண்டித் தனம் ஏன் கட்டவிழ்த்து விடப்பட்டது. பௌத்த மதம் போன்ற ஒரு உன்னதமான மதத்தை பின்பற்றும் மக்கள் மற்றவர்களுக்கு எற்படுத்தப்படும் துன்பங்களை கண்டு எவ்வாறு மகிழ்ச்சி அடைய முடியும்? அப்படியாயின் இது மற்றவர்கள் துன்பத்தில் இன்பம் காணும் அப்பட்டமான வெறித்தனம் அல்லவா?
அவருடைய இனவாத சிந்தனைப் போக்கையும் அறிவீனத்தையும் வெளிப்படுத்தும் வகையில் முழுமையான ஒரு முஸ்லிம் நிறுவனத்துக்குள் ஒரு பௌத்த பிக்குவை விரிவுரை ஒன்றுக்கு அழைப்பார்களா என்ற சவாலையும் அவர் விடுத்துள்ளார்.
பல முக்கியமான முஸ்லிம் நிகழ்வுகளுக்கு பௌத்த மதகுருமார் பிரதம அதிதிகளாக அழைக்கப்படுவதும் அங்கு அவர்கள் உரை நிகழத்துவதும் சர்வ சாதாரணமான ஒரு விடயமாக இருப்பதை, பாவம் அவர் அறியவில்லை போல் தெரிகின்றது.
இலங்கை முஸ்லிம்கள் அரபு கலாசாரத்தின் சில அம்சங்களைத் தழுவிக் கொண்டுள்ளமை நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆடை காலசார மாற்றம் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் அணியும் கறுப்பு ஹபாயா என்பனபற்றி தான் அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார். இது பல வருடங்களுக்கு முன் ஜம்மிய்;யத்துல் உலமா முஸ்லிம்களுக்கு ஆலோசனை வழங்கி இருக்க வேண்டிய விடயம். ஆனால் அவர்கள் அதிலிருந்தும் தவறிவிட்டனர். முஸ்லிம்கள் தூய்மையான இஸ்லாத்தின் பக்கம் திரும்ப வேண்டிய காலம் வந்து விட்டது. முஸ்லிம்கள் இஸ்லாமிய வாழ்வு முறையைத் தழுவி தங்களது குடும்பங்களையும், சொத்துக்களையும், வாழ்வாதாரங்களையும் காப்பாற்றிக்; கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது.
இது ஜம்மஜயத்துல் உலமாவும் விழித்துக் கொள்ள வேண்டிய காலம். உலக யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு அவர்கள் சமூகத்துக்கு வழிகாட்டி சகல சமூகங்களுக்கு இடையிலும் புரிந்துணர்வு எற்படுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும். இதுதான் இன்றைய காலத்தின் தேவயாக உள்ளது.
இன்றும் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு சமூகத்தில் கௌரவத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உலமாக்களை உள்ளடக்கியதாக உலமா சபை அமைய வேண்டும்.
முஸ்லிம்களுக்கென்று முறையான ஊடகம் ஒன்றும் இல்லாத நிலையில் ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கங்கள் முஸ்லிம் சமூகத்தை அறிவூட்டுவதாக அயை வேண்டும். நிச்சயமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம் தன்னைச் சுற்றியுள்ள அதிகாரம் மிக்க தீய சக்திகளைப் புரிந்து கொண்டு, சமூகத்துக்கு எதிரான அவர்களின் நாசகாரத் திட்டங்களைப் புரிந்து கொண்டு அவற்றை முறியடிக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் சமூகத்துக்கு வழிப்பூட்டுவதாக வெள்ளிக்கிழமை பிரசாரங்கள் அமைய வேண்டும்.
மத்திய மாகாணத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட எதேச்சையான சம்பவம் அல்ல. இதை விட மோசமான நகழ்வுகள் இன்னும் இடம்பெற காத்திருக்கின்றன என்பதற்கான ஒரு அறிகுறியே இந்தச் சம்பவங்கள். (முற்றும்)
முஸ்லிம்களின் அரசியல் வங்குரோத்து நிலை சமூகத்தின் எதிர்காலத்துக்கும் நாட்டின் ஸ்திரப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
Reviewed by nafees
on
11:29
Rating:
Reviewed by nafees
on
11:29
Rating:
No comments: