பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானமும் அதன் உள்நோக்கமும்..!

ஐ.தே.கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் இருப்பதற்காகவே அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது என்பதே உண்மையாகும். காரணம் ரணில் அவர்கள் ஐ.தே.கட்சியின் தலைவராக இருக்கும் வரைதான் எதிர்த்தரப்பினருக்கு வாய்ப்பான காலமாகும்.ஒருவேளை ஐ.தே.கட்சியின் தலைமைத்துவம் மாற்றப்பட்டு வேறொரு தலைவர் வருவாரேயானால், அந்த தலைமைத்துவம் எதிர்க்கட்சியினருக்கு பெரும்சவாலாகவே அமையும்.
அதன் காரணமாகவே எதிர்த்தரப்பினரால் இந்த தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது. இந்த தீர்மானம் நிச்சயமாக தோற்க்கடிக்கப்படும் என்பது கூட்டு எதிர்க்கட்சியினருக்கு தெறிந்தவிடயம்தான். அப்படித் தெறிந்துகொண்டும் ஏன் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருகின்றார் என்ற கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கான பதில் இதுதான்.
ரணில் அவர்கள் தலைவராக இருந்துவருகின்றபோதும் ஐ.தே.கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லமுடியவில்லை என்பது எல்லோரும் அறிந்தவிடயம்தான். அதன் காரணமாக அந்தக்கட்சிக்குள்ளேயே ரணிலுக்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்று வருவதையும் நாம் அறிவோம். இந்த நிலையில் ரணில் அவர்கள் கட்சியின் தலைமை பதவியை விட்டு நீங்கினால், அது கட்சியின் புது தலைமைத்துவத்துக்கு வழியமைக்கும் என்பதுடன்,
அந்த புதுத் தலைமையை இலங்கை மக்கள் ஆதரிக்கக்கூடிய நிலையும் ஏற்படலாம். இந்த நிலைமைகளை எதிர்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வீயூகம் அமைத்துவரும் கூட்டு எதிரணியினருக்கு பெரும் சவாலாகவே அமையும் என்பதுடன், ஒருவேளை புதுத்தலைமையினூடாக ஐ.தே.கட்சி அமோக வெற்றியடைந்தால் ரணில் அவர்களின் மனநிலை இந்தநிலை காரணமாக கடுமையாக பாதிக்கப்படும். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை ரணில் அவர்கள் விரும்பவே மாட்டார்.
அதன் காரணமாகவே, தங்களால் முன்வைக்கப்படும் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்று தெறிந்தும், ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கூட்டு எதிர்க்கட்சியினர் கொண்டுவருகின்றனர். அதன் மூலம் அவர்கள் அடைந்துகொள்ள நினைக்கும் விடயம் என்னவென்றால். இந்த தீர்மானம் பாராளுமன்றத்தில் வைக்கப்படுமாக இருந்தால், அதனை முறியடிப்பதற்காக ஐ.தே.கட்சியினர் கருத்துவேறுபாடுகளை ஒருபக்கம் வைத்துவிட்டு, பிரதமர் ரணில் அவர்களை காப்பாற்ற ஒருமித்து பாடுபடுவார்கள். இதன் மூலம் கட்சிக்குள் பிரதமர் ரணிலின் பலம் அதிகரிப்பது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் கட்சியின் தலைவர் ரணில் அவர்கள்தான் என்ற சவாலையும்,இந்த பிரேரணையை முன்வைத்த எதிராளிகளுக்கு கட்சியின் உறுப்பினர்கள் எத்திவைக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
இந்த நிலைமை எதிர்காலத்தில் ரணில் அவர்களின் தலைமைத்துவத்துக்கு வழுவான நிலையை உண்டாக்க ஏதுவாக அமையும்.
இதனைக் கருத்தில்கொண்டுதான் கூட்டு எதிர்க்கட்சியினர் ரணிலுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவருகின்றார்கள் என்பதே உண்மையாகும்.
இதன் மூலம் ஐ.தே.கட்சியின் தலைவராக வாழ்நாள் முழுவதும் ரணில் விக்கிரமசிங்காவே இருந்துவருவார் என்பதுடன், அதன் மூலம் ஐ.தே.கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆட்சயைக் கைப்பற்றிவிடலாம் என்பதே அவர்களின் திட்டமாகும்.
ஐ.தே.கட்சியின் தலைவராக ரணில் அவர்கள் இருக்கும்வரைக்கும் எதிர்க்கட்சியினருக்கு சவாலாக ஐ.தே.கட்சி எழுச்சிபெறமுடியாதென்று தெறிந்துதான் உள்ளூராட்சிமன்ற தேர்தலின் பின் ஜனாதிபதி மைத்ரி அவர்கள் தொடக்கம் ஐ.தே.கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் வரை, ரணில் அவர்களிடம் தலைமைபதவியை விட்டு விலகுமாறு கேட்டிருந்தனர். இதனை தனது நீண்டகாலம் கட்டிக்காத்த தனது கௌரவத்துக்கு இழுக்காக வந்துமுடியும் என்ற காரணத்தினால் அவர் அதனைச் செய்ய மறுத்துவருகின்றார் என்பதையும் நாம் அறிவோம்.
இந்த நிலையில்தான் கூட்டு எதிர்க்கட்சியினர் ரணிலுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவந்து, ஐ.தே.கட்சியினரை ரணிலின் பின்னால் ஒன்றுசேர்த்து, அதன் மூலம் தொடர்ந்தும் ஐ.தே.கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க அவர்களே இருக்கவேண்டும் என்பதே இவர்களின் திட்டமாகும். இதனை ரணில் அவர்களும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தனது தலைமையின் இருப்பை பாதுகாத்துக்கொள்வார் என்பதே உண்மையுமாகும். இதனால் ஐ.தே.கட்சி எழுச்சிபெற முடியாது என்பதே எங்களின் கருத்தாகும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்.
கல்முனை..
பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானமும் அதன் உள்நோக்கமும்..!
Reviewed by nafees
on
23:03
Rating:
No comments: