வீடுகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வு செய்ய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான அதிகாரிகள் குழு விஜயம்.


மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜே. ஜாகொட ஆராச்சி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த குழுவினர் இன்று இந்த விஜயத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள ரணவிரு குடும்பங்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 39 வீடுகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரணவிரு சேவா திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரீ.எச். கீர்திகா ஜயவர்தன, மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சேவா அமைப்பின் பொருளாளர் ஏ. லிங்கராஜா உட்பட இன்னும் சில அதிகாரிகள் மட்டக்களப்பு நகரம் மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளைப் பார்வையிடுவதற்கு சென்றுள்ளனர்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்கு முன்னதாகவே பலர் இந்த வீடுகளை சிறந்த முறையில் தங்களது முழுப் பங்களிப்போடு நிர்மாணித்திருப்பதையிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜே. ஜாகொட ஆராச்சி பூரண திருப்தி வெளியிட்டுள்ளார்.

குடியிருக்க வீட்டு வசதிகள் இன்றி கவனிப்பாரற்ற முறையில் சிரமத்தோடு வாழ்ந்து கொண்டிருந்த தங்களுக்கு இந்த வீடுகள் ரணவிரு சேவா திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரீ.எச். கீர்திகா ஜயவர்தனவின் முழு முயற்சியினால் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பயனாளிகள் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை, ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, பட்டிப்பளை, வவுணதீவு மற்றும் மங்களகம ஆகிய இடங்களில் தலா 19 வீடுகள் தமிழ் முஸ்லிம் சமூக ரணவிரு குடும்பங்களுக்கும் 1 வீடு சிங்கள சமூக ரணவிரு குடும்பத்திற்கும் ஒவ்வொன்றும் தலா 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலமைந்த இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த வீட்டு நிர்மாண வேலைகள் தற்போது நிறைவுற்றுள்ள நிலையில் அவற்றை பயனாளிகளிடம் கையளிக்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே அதிகாரிகள் இந்த நேரடி அவதானிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மரணித்த, காணாமல்போன, அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரில் தங்கி வாழ்ந்த 136 குடும்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கின்றனதாக குறிப்பிடப்படுகின்றது.

வீடுகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வு செய்ய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான அதிகாரிகள் குழு விஜயம்.  வீடுகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வு செய்ய  பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான அதிகாரிகள் குழு விஜயம். Reviewed by nafees on 20:44 Rating: 5

No comments:

Powered by Blogger.