தொடரும் இனவாத தாக்குதல்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடமைகளும்.




2014 ஜூன் 15 மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இராணுவ அனுசரனையில் பௌத்த பேரினவாத குழுவினால் தர்கா நகரில் இரண்டு உயிர்கள் பலியாகி உடல் உறுப்புகள் இழந்து கடைகள் வீடுகள் என பல கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டும்,அந்த இனவாதிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படவோ அல்லது சட்டம் ஒழுங்கை சீர்செய்து நாட்டில் நீதியை நிலைநாட்ட தவறிய காரணத்தினால் இலங்கை வாழ் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தர்கா நகரில் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயத்திற்கு முடிவாக மகிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிராக வாக்களித்து மகிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பியது முஸ்லிம்கள் மாத்திரமின்றி இலங்கை வாழ் சகல சிறுபான்மை மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற காரணத்திற்காவே ஆகும். 

நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்த முஸ்லிம்கள் விலைவாசியை குறைப்பதற்காகவோ அல்லது தொழில் வாய்ப்புகளை வழங்கக் கோரியும் வாக்களிக்கவில்லை மாறாக முஸ்லிம்கள் நிம்மதியாக வாழவேண்டும் அதற்கு அமைவான சூழ்நிலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே பெரும்பாலான முஸ்லிம்கள் 2015 ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிரிசேனவுக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ததுடன் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராகவும் தெரிவு செய்தோம்.

அதனைத் தொடர்ந்து 2015 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் வாக்களித்து ஆட்சி அதிகாரத்தை வழங்கி அவர்கள் கூறிய இனங்களுக்கு இடையில் நல்லிணக்கதை ஏற்படுத்துவதற்காக சந்தர்ப்பத்தை வழங்கி வைத்தோம். 

எனினும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் அமர்வதற்கு முன்னர் கூறியவாறு திருடர்களை பிடிக்கவும் இல்லை,ஊழலை ஒழிக்கவும் இல்லை, குற்றங்கள் நிரூபனமான நிலையில் பல குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவும் இல்லை, அத்தோடு முஸ்லிம்கள் நம்பி வாக்களித்த நோக்கமும் நிறைவேறவில்லை. 


இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் பூர்த்தியான நிலையில், இந்த அரசாங்கம் கூறியவாறு நடந்திருந்தால்,இந்த ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களின் பலநூறு கோடி சொத்துக்கள் அழிந்து இருக்காது. 2017 மே காலப்பகுதியில் தொடர்ச்சியாக முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் தீயிடப்பட்டதை மறக்கவில்லை.அதனைத் தொடர்ந்து 2017 நவம்பர் காலப்பகுதியில் காலி கிந்தொட்டையில் முஸ்லிம்களின் மீது தாக்குதல்.  பிப்ரவரியில் அம்பாறையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் மற்றும் வியாபார நிலையம் தீயிட்டு முஸ்லிம்களின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன,மார்ச் ஆரம்பத்தில் கண்டி மாவட்டத்தில் தெல்தெனிய பகுதியில் தனிப்பட்ட பிரச்சனை ஒன்றுக்கு சட்டத்தை முறையாக அமுல்படுத்த தவறிய காரணத்தினால் அப்பாவி உயிர்கள் பலியாகி விட்டதுடன், முஸ்லிம்களின்  445 வீடுகள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­கள், 24 பள்­ளி­வா­சல்­, 65 வாக­னங்கள் என பல கோடிச் சொத்துக்கள் அழிந்து விட்டன. நாம் தர்கா நகரில் 2014 ஜூன் 15 ஆம் திகதி இழந்த சொத்துக்களை விடவும் அதிக சொத்துக்கள் கண்டியில் அழிக்கப்பட்டு விட்டன. 

இந்த ஆட்சிக்காலத்தில் தான் இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் அதிக அளவில் தாக்குதலுக்கு உள்ளாகியது குறிப்பிடத்தக்கது. 

அரசாங்கம் தமது இயலாமையை மறைப்பதற்கு காரணங்கள் கூறி முஸ்லிம்களை ஏமாற்ற நினைத்து விடக்கூடாது, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பது தேர்தல் முடிவுகளில் இருந்து அனைவருக்கும் புரிந்துள்ளது. 

முஸ்லிம்கள் காலங்காலமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களிக்கிறார்கள் என்பதனால் பௌத்த பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள ஒருசில இனவாத சக்திகளுக்காக முஸ்லிம்களின் மீது நடைபெறும் அநீதிக்கு சட்டத்தின் மூலமாக தீர்வு கொடுக்க முடியாமல் போனால் இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் மீண்டும் ஒருமுறை ஒன்றாக சேர்த்து முடிவெடுக்க நேரிடும் என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன். 

முஸ்லிம்களை வெறுமனே அரசியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக மாத்திரம் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு எதிர்காலத்தில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். 

இந்த காலகட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு முஸ்லிம் சமூகத்தின் மீட்சிக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

முஸ்லிம்கள் கட்சிகள் பிரிந்து செயற்படுவதையும் விட்டுவிட்டு ஏனைய பிரதான கட்சிகளில் சமூக உணர்வுடன் செயற்படுகின்ற அரசியல்வாதிகளையும் ஒன்றிணைந்து ஓர் கூட்டமைப்பின் கீழ் செயற்படுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் நாங்கள் அரசியல் ரீதியாக தனிப் பலத்தை நிரூபித்து இந்த நாட்டில் ஆட்சி செய்யும் கட்சிகளுக்கு எனது பலத்தை காட்டவேண்டும். 

முஸ்லிம் அரசியல் கட்சிகளும்  ஏனைய அரசியல் கட்சிகள் சார்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒரு கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமானல் நிச்சயமாக இப்போது 21 பாராளுமன்ற உறுப்பினர்களாக காணப்படுகின்ற முஸ்லிம்களின் எண்ணிக்கை 30 ஆக உயரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.  

உதாரணமாக களுத்துறை மாவட்டத்தில் எந்தவொரு பிரதான கட்சியிலும் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். கடந்த 2015 பொதுத்தேர்தலில் 57,130 விருப்பு வாக்குக பெற்ற  முஸ்லிம் வேட்பாளருக்கு பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

ஆனால் களுத்துறை மாவட்டத்தில் கிட்டதட்ட 100,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் உள்ள நிலையில் அவற்றில் 80% வாக்குகள் அளிக்கப்படும் பட்சத்தில், கட்சிகளை தூக்கி எறிந்துவிட்டு தனியான ஒரு கூட்டமைப்பில் முஸ்லிம்கள் போட்டியிடுமானல் நிச்சயமாக 65,000 க்கு மேற்கண்ட முஸ்லிம் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் நிச்சயமாக ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிநிதி நிச்சயமாக எங்களுக்கு கிடைக்கும். கடந்த 2015 பொதுத்தேர்தலில் 38,475 வாக்குகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டதை நினைவு படுத்துகிறேன். 

இது களுத்துறைக்கு மட்டுமல்ல காலி மாவட்டத்திலும் ஏனைய முஸ்லிம்கள் வாழ்கின்ற மாவட்டங்களிலும் தெளிவான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கிழக்கில் மாபெரும் சக்தியாக உருவெடுக்க முடியும். கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களில் தலா நான்கு உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது. அத்தோடு பெறப்படும் மொத்த வாக்குகளை மையமாக வைத்து கிடைக்கும் போனஸ் உறுப்புகளின் மூலம் எல்லா மாவட்டங்களிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செல்லமுடியும். 


எப்போதும் முஸ்லிம்கள் ஏனைய பெரும்பான்மை கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுமானல் இன்று உள்ள பாராளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் இதைவிட குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.எனவே கட்சிகளை வளர்த்து போதும் சமூகத்தின் பிரதிநிதியாக, இலங்கை முஸ்லிம்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் மூன்றாவது சக்தியாக உருவாகி இந்த நாட்டில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் தனிச் சக்தியாக முஸ்லிம்கள் மாறவேண்டும். 

அதன் மூலம் அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் முஸ்லிம்களின் செல்வாக்கை காட்டி இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத செயற்பாடுகளை ஒழிக்கும் வலுவான சக்தியாக முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்படுவது காலத்தின் தேவையாகும் என்பதை நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் முடிவு செய்துவிட்டார்கள். 

தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை மறந்து உண்மையான சமூகத்தின் விடிவுக்காக அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒற்றுமைப் படவேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் முஸ்லிம்கள் இந்த நாட்டில் அடிமைகளாக வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை உருவானாலும் உருவாகலாம். 

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் போட்டியிட்டு வெறும் 16 உறுப்பினர்களுடன் எதிர்கட்சி தலைவர் பதவியை கொண்டுள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.

பெரும்பான்மை கட்சிகள் எப்போதும் அதிகாரத்திற்காக முஸ்லிம்களை அங்கும் இங்கும் உதைக்கும் நிலையில், காலத்தின் தேவை கருதி முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுசேருமாறு இலங்கை வாழ் முஸ்லிம்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். 


ஹுனைப் எம் ஹனீப்

இணைப்பாளர்.

தேசிய இளைஞர் முன்னணி

பேருவளை.
தொடரும் இனவாத தாக்குதல்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடமைகளும். தொடரும் இனவாத தாக்குதல்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடமைகளும். Reviewed by nafees on 01:24 Rating: 5

No comments:

Powered by Blogger.