இணக்கத்தால் தோற்ற ‘இனவாதம்’ ( ஒரு பார்வை)
(ஆதில் அலி சப்ரி)‘மனிதாபிமானத்தை மறந்துவிடாதீர்கள். மனிதாபிமானம் என்ற வட்டத்தில் இருந்தே அரசியல் நடவடிக்கைகளில்
ஈடுபட வேண்டும். மனிதாபிமானம் என்ற வட்டத்தில் இருந்துகொண்டே மத விடயங்களை நோக்கவேண்டும்.
இறுதியாக அனைத்தில் இருந்தும் மனிதாபிமானத்திற்கு மீள மக்கள் பழகிக்கொள்ள வேண்டும்’ என்று புத்தளம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன தெரிவித்தார்.
தீவைக்கப்பட்ட ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டலை 18 மணித்தியாலங்களில் புனர்நிர்மாணம் செய்து, திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆனமடுவ மதீனா ஹோட்டல் கடந்த ஞாயிறன்று அதிகாலை 3மணிக்கு இனவாத சிந்தனையால் தூண்டப்பட்ட இளைஞர்களின் பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது. சம்பவத்தை கேள்வியுற்ற ஆனமடுவ நகர வியாபார சங்கத்தினர் மற்றும் புத்தளம் மாவட்ட பொலிஸார் தாக்குதலுக்குள்ளான கடையை அன்றிரவாகும்போது இருந்த நிலைமைக்கு கொண்டுவர வேண்டுமென்ற சபதத்தை எடுத்துக்கொண்டனர்.
கடையின் மீள் நிர்மாணப் பணிகள் காலையில் ஆரம்பிக்கப்பட்டது. நகர வியாபார சங்கம் செலவுகளை பொறுப்பேற்றது. ஆனமடுவ வியாபாரிகள், சிங்கள- முஸ்லிம் பொதுமக்கள் இணைந்து கடையின் புனர்நிர்மாண பணிகளை முன்னெடுத்தனர். 250இற்கு மேற்பட்டோர் தொண்டர்களாக இணைந்து 18 மணித்தியாலங்களுக்குள் கடையின் பெரும்பாலான வேலைகளை முடித்து இராபோசனத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
மதீனா ஹோட்டலின் மீள் நிர்மாண
வேலைகள் மற்றும் விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஆனமடுவ நகர வியாபாரிகள் சங்கத் தலைவர் தயான் அபேரத்ன,
‘அதிகாலையில் சம்பவம் நடைபெற்றது. இரவாகும் போது இதனை இருந்த நிலைமைக்கு கொண்டுவர வேண்டும் என நகர வியாபார சங்கம் தீர்மானித்தது. நாம் இலங்கையர்கள். எம் மத்தியில் இன, மத பேதம் இல்லையென்பதை உலகுக்கு காட்டவே நாம் இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுத்தோம். இலங்கையர்கள் இதனூடாக படிப்பினை பெறவேண்டும்.’ என்றார்.
மதீனா ஹோட்டலின் மீள் கட்டுமாண பணிகள் நிறைவடைந்து இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆரம்ப நிகழ்வுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரதி அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, இஸ்லாம் மற்றும் பௌத்த மதகுருமார், பிரதேசத்தின் சிங்கள- முஸ்லிம் வியாபாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஹோட்டலின் ஆரம்ப நிகழ்வில் பிரதி அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார உரையாற்றும்போது,
‘ஆனமடுவ மக்களுக்கு கல்வி, குடிநீர், வீதி, குளம், வைத்தியசாலை பிரச்சினைகள் இருக்கின்றன. அதுபற்றியே நாம் கவலைப்பட வேண்டும். அது பற்றியே கவனம் செலுத்த வேண்டும். அவற்றுக்கே தீர்வைப் பெற முயற்சிக்க
வேண்டும். அவற்றைத் தவிர்த்து இன்னோர் மனிதனின் வீட்டுக்கோ,
கடைக்கோ தீவைப்பதல்ல. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முச்சக்கர வண்டியில் சிங்க லே இலட்சினை பொறித்துச்செல்வதில் என்ன பெருமையுள்ளது? என்று கேள்வியெழுப்பினார்.
முஸ்லிம் ஹோட்டல்கள் தூய்மையற்றதென்ற கருத்து பரவலாக இருக்கின்றது.
முஸ்லிம்கள் ஹோட்டல்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் போலி பிரசாரங்களையும் பிரச்சினைகளையும் தவிர்க்கலாம் என்று ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் உரிமையாளர் ஏ.எம்.எம்.றஹீம் தெரிவித்தார்.
மதீனா முஸ்லிம் ஹோட்டல் உரிமையாளர் ஏ.எம்.எம்.றஹீம் மேலும் தெரிவித்ததாவது,
நான் ஆனமடுவையில் இருந்து 12 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒட்டுக்குளத்தைச் சேர்ந்தவன். கடையை 1990 நவம்பர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பித்து கிட்டத்தட்ட 29 வருடங்களாக செய்துவந்தேன்.
காலையில் கடைக்கு வந்து இரவு 10 மணி வரை வியாபாரத்தில் ஈடுபடு
வேன். இதற்கு முன்னர் இப்படியான பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை. மதுபோதையில் வந்தவர்கள் பிரச்சினைப்படுத்தினாலும் அது தனிப்பட்ட நபர்களின் விடயமாகவே கருதப்பட்டுள்ளது. நாம் இஸ்லாமிய மார்க்க வரையறைகளைப் பேணியதுடன், சிங்களவர்களுடன் நெருக்கமான உறவையும் வைத்திருந்தோம். நகரில் வியாபாரத்தில் ஈடுபடுவோரது திருமண நிகழ்வுகளிலும், அதேபோன்று, வியாபாரிகளின் அல்லது அவர்களின் உறவினர்களது மரண சடங்குகளிலும் தவறாது கலந்துகொண்டு வந்தோம்.
சிங்கள மக்கள் எமது ஹோட்டல் உணவு வகைகளை விரும்பி சாப்பிடக்கூடியவர்களாக இருந்தனர். எமக்கு அதிகளவான வியாபாரமும் இருந்தது.
கடையை எரித்ததில் 20 இலட்சம் அளவில் நட்டமேற்பட்டிருந்தாலும் நகர வியாபாரிகள் சங்கம் முன்வந்து புனர்நிர்மாணம் செய்துதந்ததில் அது சீர்செய்யப்பட்டுள்ளது- என்றார்.
தாக்குதலைத் தொடர்ந்து கடையை பார்வையிட அதிகமானோர் வருவதாகவும், வியாபாரம் முன்னரைவிட சிறப்பாக நடைபெறுவதாகவும் மதீனா முஸ்லிம் ஹோட்டல் உரிமையாளர் ஏ.எம்.எம்.றஹீம் மேலும் தெரிவித்தார்.
ஆனமடுவ சிங்கள பெரும்பான்மை மக்களை வியாபாரிகளாக கொண்ட ஒரு நகரமாகும். அங்கு மூன்று முஸ்லிம் கடைகளே காணப்பட்டன. அதில் ஒன்று நகைக் கடை மற்றது அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் கடையும் இந்த ஹோட்டலும் ஆகும். அதேபோன்று, நான்கு தமிழ் கடைகளும் உள்ளன.
இதுவரை காலமும் அங்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கவில்லை என்பது ஹோட்டல் உரிமையாளர் ஏ.எம்.எம்.றஹீமின் 29 வருட அனுபவத்திலிருந்து தெரியவருகின்றது. நகரத்தின் தன்மையையும் அனுபவத்தையும் பிரதேசவாசி கபில திசாநாயக்க இவ்வாறு பகிர்ந்துகொண்டார்.
‘எனக்கு பரீட்சயமான தேநீர் கடையே அது. ஆனமடுவ நகர மக்களிடையே அவ்வாறானதொரு பிரிவு இருக்கவில்லை. இனவாத கதைகள் பரவியிருக்கவும் இல்லை. இங்கே தமிழ் கடைகள் மூன்று நான்கும், முஸ்லிம் கடைகள் மூன்றும் இருக்கின்றன. அனைவரும் ஒற்றுமையாகவே இருந்தனர். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்கள் சிலரே. இங்குள்ள மதகுருமார்கள் அவர்களை தூண்டியதாகவும் இல்லை.
சமூக வலைத்தளங்களில் விடயங்களை பார்த்தே தூண்டப்பட்டுள்ளனர்’ என்றார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 7 சந்தேக நபர்கள் சீ.சீ.ரீ.வீ. பதிவுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடைக்கு பெற்றோல் குண்டு வீசிய சந்தேக நபர்கள் 17-22 வயதுக்கிடைப்பட்டவர்கள். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று மோட்டார் வண்டிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு முன்தினம் பிரதேச விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் 20 பேரளவில் ஒன்றுகூடி தாக்குதலை திட்டமிட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
நாட்டில் இனவாத பேய் தலைவிரித்தாடுகையில் ஆனமடுவ சம்பவம் எமக்கு பல படிப்பினைகளைத் தருகின்றது. ஹோட்டலை பெரும்பான்மை மக்கள் ஒன்றிணைந்து மீளக் கட்டியது சிறந்ததோர் முன்மாதிரியாகும்.
இனவாதிகளுக்கு சாட்டையடியாகும். இனவாதத்தை இனவாதத்தால் அன்றி, இணக்கத்தால் தோற்கடிக்கச் செய்வதற்கான முதல் எட்டாக ஆனமடுவ சம்பவம் அமையட்டும் எனப் பிரார்த்திப்போம்.
(ஆதில் அலி சப்ரி)
இணக்கத்தால் தோற்ற ‘இனவாதம்’ ( ஒரு பார்வை)
Reviewed by nafees
on
02:22
Rating:
Reviewed by nafees
on
02:22
Rating:
No comments: