வட மாகாண ஆளுநராக கே.சி.லோகேஸ்வரன்.... வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவர் நியமனம்.

மேல்மாகாண ஆளுநராக கடமையாற்றும் கே.சி.லோகேஸ்வரனை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்க அரசாங்கம்
தீர்மானித்துள்ளதாக அரச உயர்மட்டத்திலிருந்து நம்பகரமாகத் தெரிய வருகிறது. பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியவுடன் இந்நியமனம் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பில் மேல்மாகாண ஆளுநர் கே.சி. லோகேஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் அதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் மேலும் ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னரே அதுகுறித்து திட்டவட்டமாகத் தெரிவிக்க முடியும் என்றும் கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்வதற்கு முன்னர் 9மாகாணங்களின் ஆளுநர்களையும் அவரது இல்லத்துக்கு அழைத்து
பேசியதுடன் அவர்கள் விரும்பிய மாகாணங்களுக்கு இடமாற்றத்தை தெரிவுசெய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் 9மாகாணங்களின் ஆளுநர்களும் ஒன்றுகூடி தமக்கிடையில் பேசி தாம் விரும்பிய பிராந்தியங்களை தெரிவு செய்துள்ளனர். அந்தவகையில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மத்திய மாகாணத்துக்கான ஆளுநராக செல்லவுள்ள நிலையில், மேல்மாகாண ஆளுநராக கடமையாற்றும் கே.சி. லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார்.
ஆளுநர் ஒருவரின் சேவைக்காலம் ஒரே இடத்தில் மூன்று வருடங்களாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுநர்கள் சிலர் இரண்டரை தொடக்கம் மூன்று வருடங்களை பூர்த்தி செய்துள்ளனர். இதனடிப்படையிலேயே அவர்களின் இடமாற்றமும் அமைந்துள்ளது. வடக்கு மாகாண ஆளுநராக கே.சி. லோகேஸ்வரன் நியமிக்கப்படும் பட்சத்தில் வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு மாகாணத்தில் நியமிக்கப்பட்ட தமிழர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.
1988ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் 30வருடகாலமாக தமிழர் ஒருவர் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தென்மாகாண ஆளுநராகவும், மத்தியமாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும், தென்மாகாண ஆளுநர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார மேல்மாகாண ஆளுநராகவும், வடமேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்நாயக்க வடமத்திய மாகாண ஆளுநராகவும், வடமத்திய ஆளுநர் பி.பீ. திசாநாயக்க வடமேல் மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாண ஆளுநராக கே.சி.லோகேஸ்வரன்.... வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவர் நியமனம்.
Reviewed by nafees
on
01:46
Rating:
Reviewed by nafees
on
01:46
Rating:
No comments: