மாணவிக்கு தொடரும் அநீதி.. (படங்கள்)


தாயார் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை காரணம் காட்டி கம்பஹா மாணவி யொருவருக்கு
கல்வித்துறை அதிகாரிகளினால் தொடர்ந்தும் அநீதி இழைக்கப்படுகின்றது.

கம்பஹாவின் கணேமுல்லை, குடாபொல்லன பிரதேசத்தைச் சேர்ந்த ஶ்ரீசுமங்கல ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவியொருவருக்கு கடந்த ஒரு வருட காலமாக பாடசாலைக்குச் செல்வதற்கான அனுமதி அதிபரினால் மறுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் தாயார் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை காரணம் காட்டி சிறுமியின் கல்வி உரிமை அதிபரினால் மறுக்கப்பட்டுள்ளது.

எனினும் சிறுமியின் தாயார் எயிட்ஸ் மறுவாழ்வு மையமொன்றில் சேர்ந்து தனக்கான சிகிச்சை பெற்றுக் கொள்வதுடன் எயிட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பங்களிப்பை நல்கி வருகின்றார்.

இந்நிலையில் அவரின் மகள் இந்த ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நிலையில் தாயாரின் நோயைக் காரணம் காட்டி சிறுமியின் கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடமாக மகளின் கல்வி உரிமைக்காக குறித்த தாயார் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் போதிலும் அதிகாரிகள் தொடர்ந்தும் அலட்சியம் காட்டி வருகின்றார்கள்.

இந்த ஆண்டுக்கான காலாண்டுப் பரீட்சைகளும் முடிவடைந்த நிலையில் இதுவரை தன் மகளுக்கு பாடசாலை செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான நிலையில் அவர் புலமைப்பரிசில் பரீட்சைக்கு எவ்வாறு தோற்றுவார் என்றும் தாயார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் தனது கல்வியைத் தொடர அனுமதிக்குமாறு கோரி பாதிக்கப்பட்ட சிறுமி கம்பஹா வலயக் கல்வி அலுவலகம் முன்பாக தொடர் போராட்டமொன்றில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். அவரின் தாயாரும் இதற்கு ஒத்தாசையாக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டங்களை முன்னெடுக்குமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரஜைகள் சமாதான சபை, தேசிய நல்லிணக்கப் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
மாணவிக்கு தொடரும் அநீதி.. (படங்கள்) மாணவிக்கு  தொடரும் அநீதி.. (படங்கள்) Reviewed by nafees on 20:51 Rating: 5

No comments:

Powered by Blogger.