சமூக இருப்புக்கான உத்தரவாதம்: முஸ்லிம் எம்.பிக்கள் முன்னுள்ள பொறுப்பு



நவமணி வார இறுதி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்


நாம் எமது ஆசிரியர் தலையங்கத்தில் வழமைக்கு மாறாக புகைப்படம் ஒன்றைச் சேர்த்துள்
ளோம்.கடந்த திங்களன்று இந்த நாட்டு தமிழ் பத்திரிகைகளில் இந்தப் படம் முதற்பக்கத்தில் வெளி யாகியிருந்தது. அரசியல் ரீதியாக முக்கியமான இந்தப் படம் இந்த நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளின் முஸ்லிம் தலைவர்கள் இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனுடனான சந்திப்பாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் கபீர் ஹாசிமும் மற்றும் முஜிபுர் றஹ்மான், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் பைசர் முஸ்தபா, .எச்.எம். பௌசி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரசினைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆகியோர் கூட்டாக .நா. உதவிச் செயலாளரைச் சந்தித்து இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள இருப்புக்கான அச்சுறுத்தல் பற்றித் தெளிவுபடுத்தியுள்ளனர்

இதற்கு முன் இரு முஸ்லிம் கட்சிகள் கூட தனியாகவே சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தன. கண்டியில் பட்ட அடியே இந்த முஸ்லிம் தலைவர்களை ஒன்றுபடுத்தியுள்ளது. அடிக்கடி அரசியல் ரீதியாக மோதிக் கொள்ளும் தலைவர்கள் ஒன்றுபட்டு செயற்பட முன்வந்திருப்பது இருப்புக்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் முஸ்லிம் சமூகத்துக்கு ஆறுதல் அளிப்பதாகவே அமைந்துள்ளது.

தேர்தல்கள் வரும் போது பிரிந்து செயற்பட்டு தம் கட்சிகளுக்கு வாக்குகளைத் திரட்டுவதில் தவறில்லை. ஆனால் சமூகம் தொடர்பான நிலைப்பாடுகளில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்படுவதனையே முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்றது.

நல்லாட்சி அரசில் அங்கம் வகிக்கும் இந்த அமைச்சர்கள் எம்.பிக்கள் முன் பாரிய பொறுப்புள்ளது. நல்லாட்சி அரசுக்கு இந்த நாட்டு முஸ்லிம்கள் வாக்களித்தது தமது இருப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும் என்ற உறுதிப்பாட்டிலாகும். துரதிஷ்டவசமாக சிறுபான்மை சமூகங்கள் எதிர்பார்த்த பாதுகாப்பு இன்று இல்லாத நிலையே உருவாகியிருக்கின்றது.

இந்த நிலையில் பாராளுமன்றத்தில் இருக்கும் 21 முஸ்லிம்களும் கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபட்டு முஸ்லிம்களது தேவைகளை முஸ்லிம்களுக்கான பாதுகாப்பினை அரசுமூலம் உத்தரவாதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.நா. பிரதிநிதியைச் சந்தித்தது போன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக இயங்கி கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு முன்வந்திருப்பது முஸ்லிம் சமூகத்துக்கு  நம்பிக்கையை ஊட்டுவதாகவே உள்ளது.

அரசியல் தலைவர்களை சமூகம் விமர்சிப்பது அவர்கள் கடந்த காலச் செயற்பாடு குறித்து திருப்திபடாததனாலாகும்.  சமூக விடயங்களில் கட்சி பேதங்களை மறந்து தொடர்ந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டுமென்பதே முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சமூக இருப்புக்கான உத்தரவாதம்: முஸ்லிம் எம்.பிக்கள் முன்னுள்ள பொறுப்பு  சமூக இருப்புக்கான உத்தரவாதம்: முஸ்லிம் எம்.பிக்கள் முன்னுள்ள பொறுப்பு Reviewed by nafees on 02:39 Rating: 5

No comments:

Powered by Blogger.